உற்றுநோக்கும் பறவை, அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு

                                             


சிறுகதைக்கான இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/57/

குறுங்குழு ஒன்று உருவாகி (cult) 'துவாத்மர்கள்' எனும் மதத்தைக் கட்டமைத்து அழிவுச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பழைய தென் திருவிதாங்கூர் மகாரஜா ஆட்சியில் இது நிகழ்கிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் மனிதத்தன்மையற்ற மிருகங்களுக்கு இணையானவர்கள். இவர்களுடைய முக்தி என்பது மனிதத்தன்மையற்று, ஒரு மிருகத்தின் உளநிலையை, சுதந்திரத்தை முன்வைக்கும் ஒன்று. பல இடங்களில் கட்டற்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், இவர்களைக் குறித்த அச்சம் மக்களிடையே ஏற்பட்டு ஒரு சாசுவதத்தன்மை அடைகிறார்கள்.

இந்தக் குழுவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் பிற்கால வரலாற்று ஆராய்ச்சியாளன் அல்லது பத்திரிகையாளன் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் குழுவை முடிவுக்குக் கொண்டுவந்த கள்ளன்துரை என்ற பிரிட்டிஷ் மேஜர் ஒருவனின் டைரிக் குறிப்புகள் வாயிலாக துவாத்மர்கள் குறித்த செய்திகள் கதையில் விரிகின்றன. 

துவாத்மர்கள் எனும் மதத்தை நிறுவியவர் காலன்சாமி என்ற ஒரு சாந்தமான போலிஸ் அதிகாரி. கலவரம் ஒன்றில் மனம் விழித்துக்கொண்டு கொடூரமான ஒரு வீரனாக மாற்றம் அடைகிறார். ஒரு நாட்டார் தன்மை கொண்ட கதாப்பாத்திரம். நெடிய உருவத்துடன் அவர் வீதிகளில் வலம் வர எல்லோரும் அஞ்சி ஓடும் காட்சிகள் மேஜரின் டைரிக்குறிப்புகளில் வருகிறது. 

இந்தக் காலன்சாமி திடீரென ஒருநாள் துறவுபூண்டு மக்களிடையே துவாத்மத்தைக் கொண்டு செல்கிறார். இளைஞர்களை இந்த மதத்தில் சேர்த்துக்கொண்டு மண்கோட்டை ஒன்று கட்டி வாழத் தொடங்குகிறார். பிரிட்டிஷார் அந்தக் கோட்டையை அடைந்து அவர்களை வீழ்ந்தும்போது விசித்திரமான சில அம்சங்களைக் காண்கிறார்கள். கோட்டைக்குள் போர்ப்பயிற்சிக்கான தடயங்களும், ஆழ்ந்த தியானம் செய்ததற்கான தோற்றங்களும் காணக்கிடைக்கின்றன. 

ஒரே மனிதனுக்குள் இருக்கும் இரண்டு குணங்களை 'Schizophrenia' மனநிலை, உளப்பிளவு (Split Personality) என்று கூறுகிறோம். இந்த அம்சம் கதையில் சொல்லப்பட்டு அறிவியல் புனைக்கதையாக மாறுகிறது. மதம், யோகம் மரபு, மூளையில் Dopamine சுரப்பியைத் தூண்டும் மூலிகை, உளவியல் மருத்துவம் என்று ஒரே கதையில் பல அடுக்குகளும், தகவல்களும் சுவாரசியம் குன்றாத நடையில் சொல்லப்படுகிறது. 

நம் எல்லோருக்குள்ளும் இரண்டு மனிதன் ஒளிந்துகொண்டிருக்கிறானா? கடவுளை நம்பாதவன் மதத்தைக் கைவிடவேண்டும், அது முற்றிலும் சாத்தியமா? மதம் உருவாக்கிய குறியீடுகளை ஒருவனின் நனவிலி மனதிலிருந்து அழிக்கமுடியுமா? அப்படி அழித்துவிட்டு புதிதாகத் தொடங்கினால் என்னென்ன விளைவுகள் நிகழும் என கதை முழுக்க செறிவான கேள்விகளை கற்பனையைத் தூண்டும் வகையில் ஆசிரியர் நம்முன் வைக்கிறார். 

கதையின் அடர்த்தி என்னை மூன்று முறை வாசிக்க வைத்தது. ஜெயமோகனின் அமெரிக்க பயணத்தில் அவருடன் உடனிருந்த நான்கு நாட்களில் அவர் இந்தக் கதையின் பல அம்சங்களையே பலரின் கேள்விகளுக்கு மிக விரிவான பதில்களாகச் சொல்லியிருக்கிறார் என்று இப்போது புரிகிறது. ஒரு மனிதனின் நனவிலி மனதில் ஊறும் நல்லியல்புகளை சமூகத்திலிருந்து பெற்றுக்கொள்கிறான். அவை மத நம்பிக்கைகள், கலை, இலக்கியம் என பல பகுப்புகளால் ஆனது. அவற்றை அழித்துவிட்டால் ஏற்படுவது ஒரு மிருக நிலை, அங்கு அழிவு மட்டுமே எஞ்சும். இங்கு அறம் என்று ஜெயமோகன் தளராமல் கையாளும், முன்வைக்கும் வார்த்தை மிகுந்த எடைபெற்று நான் இதுவரை அறியாத ஒரு புரிதலை அளிக்கிறது.

இவற்றுக்கு வெளியே மார்க்சியத்தை அல்லது அதன் தாக்கத்துக்கு இணையான மத நம்பிக்கைகளை ஒற்றைப்படையாக நம்பிக்கொண்டுதான் நாம் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. 'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலுக்கான எல்லாத் தர்க்கங்களும் என்னை வந்து அறைகின்றன.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை