Posts

Showing posts with the label எனது கவிதைகள்

எனது கவிதைகள், சொல்வனம் இதழ்

Image
                                                                                    சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026 1) தெருவிளக்குகளே ஏன் இத்தனை தலைகுனிவு சற்றே நிமிருங்கள் , ஒளியைத்தானே பாய்ச்சுகிறீர்கள் ?   2) உறைநீர் ஏரியின் பொத்தலில் தூண்டில் அமிழ்த்திய மீனவக் கிழவன் கனவு காத்தான் குளிர் அங்கியினுள் , நிலைத்த வெளியை குறுக்கு வெட்டிக் கீறியது சிறகு படபடத்த பறவை , ஏரிக்கரை பாலத்தின் பனி விரவிய தண்டவாளத்தில் வெம்மூச்சுடன் சீறியது இரயில் வண்டி , அக்கணம் சுண்டி அடங்கியது தூண்டில்   ஒரு முறை ஒரே ஒரு முறை மீனவக் கிழவனின் கனவு கலைத்து .   3) ஊதா நிறச் சட்டைக்காரர் - அவருக்கு ஒரு பெயர் இருந்தது அந்தச் சிறிய கிராமத்தில...

உறைபனியின் கனவு - கவிதை

Image
                                                                 சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026 ஜனவரி 31, 2026 உறைநீர் ஏரியின் பொத்தலில் தூண்டில் அமிழ்த்திய மீனவக் கிழவன் கனவு காத்தான் குளிர் அங்கியினுள், நிலைத்த வெளியை குறுக்கு வெட்டிக் கீறியது சிறகு படபடத்த பறவை ஒன்று, ஏரிக்கரை பாலத்தின் பனி விரவிய தண்டவாளத்தில் வெம்மூச்சுடன் சீறியது இரயில் வண்டி ஒன்று, அக்கணம் சுண்டி அடங்கியது தூண்டில்  ஒரு முறை ஒரே ஒரு முறை கிழவனின் கனவு கலைத்து.

இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு - கவிதை

Image
                                                                 அகழ் இதழில் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதிய ' இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு ' என்ற கவிதையின் தொடர்ச்சியாக எழுதியது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது குணா திரைப்படத்தை வெறுப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது தனிமை தகிக்கும் தொலைதூர மாலையில் அருவருப்பான தேனீர்  எனும் பான(க)த்தைக் குடித்து குமட்டுவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது பகல்நேர பேருந்து பயணங்கள் தீராமல் நீள்வதை மருட்சியோடு பார்ப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது திருவிழாக்களை கதவு சன்னல்களை மூடி புதுமையாகக் கொண்டாடுவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது வாழ்வின் பரிசான எதிர்பாராத் தருணங்களின் அழுகையை மௌனமாக நிகழ்த்துவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது மன அழுத்த மாத்திரைகளுக்கு அலமாராவில் தாராள இடமளிப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது காதுகளில...

முற்று - கவிதை

Image
                                                       செப்டம்பர் 12, 2025 நாங்கள் காத்திருந்தோம் ஒரு பெரிய கட்டிடத்தினுள், சிலர் சிலருக்காக சிலர் சிலதுக்காக சிலர் எதற்காகவோ எங்கள் எல்லோருக்கும் இருந்தன காரணங்கள், கட்டிடம் காத்திருந்தது அதனுள் கடிகாரம் காத்திருந்தது சாளரங்கள் காத்திருந்தன மேஜைகள் நாற்காலிகள் தேநீர் கோப்பைகள் மதுக் குவளைகள் எல்லாமும், எங்களுடைய காத்திருப்புத் தருணங்கள் கூடின, அவை ஊரின் காத்திருப்பாயின பிறகு  நகரத்தின் தேசத்தின் கண்டங்களின் பூமியின் காத்திருப்பாகியது, பிரபஞ்சமும் காத்திருந்தது, நான் என் காத்திருப்பு முடிவுற்று நீங்குகிறேன் கட்டிடத்தை விட்டு.     - பாலாஜி ராஜூ

பிரார்த்தனை - கவிதை

Image
                                                       சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026 செப்டம்பர் 7, 2025 பரபரப்பான சாலையில் உக்கிரமான சிவப்பு விளக்கு, வீடிலியின் பதாகையில் கலைந்த சொற்கள், அனிச்சையாய் கைகளில் தென்பட்ட இருபது பணம் சில ஒற்றைகளாய் இல்லாமலிருப்பதன் கனம், வாகனக் கண்ணாடி கீழிறங்கி வெளிவருகிறது புனிதக் கை பலநூறு கைகளின் பிரதிநிதியாய், பெற்றுக்கொண்டவன் உச்சரித்த அந்த வார்த்தை ஒலிக்கிறது சாலையெங்கும் ஒரு கூட்டுப் பிரார்த்தனையின் உச்ச வரியாய்.     - பாலாஜி ராஜூ

பத்திரம் - கவிதை

Image
                                                  ஜூன், 2025 மொழியைக் கற்றேன், நுணுங்கிய அர்த்தமற்ற வார்த்தைகள் என் முன் முடிவற்ற வரிகளாய், வாசிக்க முயல்கிறேன் புரியவில்லை, விரோதம் பாராட்டுகிறான் கையெழுத்திட மறுத்த என்னிடம் பத்திரக்காரன், மறுகேள்வியில்லாமல் கையெழுத்திடு என்றான் மகிழ்வாய் உலவிய ஹிப்பி, கவிஞன் சொன்னான் கைநாட்டுகிறேன்  என.     - பாலாஜி ராஜூ

நானும் அவனும் - கவிதை

Image
                                                       மே, 2025 மழை பெய்கிறது, வாகனத்தை நிறுத்தி காத்திருக்கிறேன் நனையாமல் வீட்டினுள் நுழைய, துப்பாக்கி வெடிக்கிறது கெண்டைக்கால் சிலிர்த்து ஆயத்தமாகிறான் பந்தய வீரன் காற்றைக் கீறி கோட்டைக் கடக்க, ஓடினோம் வாகனத்தை அணைக்க அழுத்திய சாவியுடன் நானும் துப்பாக்கி வெடியொலி எதிரொலிப்பை உணர்ந்த அவனும்... கதவு திறந்தது கோடு மறைந்தது இளைப்பாறுகிறோம், வீட்டின் நிசப்தத்தில் அவனும் மைதானக் கூக்குரல்களூடே நானும்.     - பாலாஜி ராஜூ

புதிய நகரம் - கவிதை

Image
                                                       சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026 ஜூலை 15, 2025 நான் ஒரு அழகிய நகரில் வாழ்கிறேன் இங்கு மரங்கள் நெருப்பை அணிகின்றன ஆறு கடல் குளங்களில் குருதி ஓடுகிறது அணுக்கமானவர்களை கட்டி அணைக்கையில் கத்தியால் மெல்ல கீறுகிறார்கள் குழந்தைகள்  தன்னைவிடப் பெரிய நிஜத் துப்பாக்கிகளைக் கொண்டு வானில் சுட்டுப் பயில்கிறார்கள் அன்பு கருணை கண்ணீர் போன்ற வார்த்தைகள் உச்சரிப்புத் தடைகொண்டன எல்லோரும் சங்கேத வார்த்தைகளில் பாடினார்கள் இறப்பு வீடுகளில் மனிதர்கள் பால் கருதாமல் புணர்ந்தார்கள் நான் ஒரு கவிஞனின் இறுதிச் சடங்கிற்கு சென்றேன் இனிய கவிதைகள் மட்டும் எழுதியவன் கழுவிலேற்றப்பட்டவன் எதிலிருந்தோ விடுபட்ட சாயலுடன் உறைந்த அவன் முகத்தைப் பார்த்து சில கவிதை வரிகளை முணுமுணுத்துவிட்டு... பின் என்னுடன் இணைய அழைத்த பெயர் தெரியாத மிருகம் ஒன்றுடன் இருளில் ஒதுங்கினேன்.      - பா...

பரிணாமம் - கவிதை

Image
                                                       ஆகஸ்ட் 30, 2025 மெல்ல மெல்ல புல் வளர்கிறது மெல்ல மெல்ல புதர் சிரிக்கிறது மெல்ல மெல்லத்தான் எல்லாமும் நிகழ்கின்றன ஒரு பூ துப்பாக்கி  அணு மெல்ல மெல்லத்தான் எல்லாமும் நான் புன்னகைக்கிறேன் அண்டை வீட்டுக்காரனின் கண்கள் தேடி மெல்ல மெல்ல.     - பாலாஜி ராஜூ

சட்டகம் - கவிதை

Image
                                                       ஆகஸ்டு 18, 2024 பரிசுத்தமான வானின் ஊதா நிற அதிசயங்கள் தாளாமல் மரத்தின் கிளையினூடாக மறைந்து காண்கிறேன், சாளரச் சட்டகங்களின் இடைவெளியில் ஒளிந்து காண்கிறேன், நீ ஒரு ஓவியத்தினுள் வாழ்கிறாய் என்று சொன்னது வானின் அசரீரி, இந்த ஓவியத்தில் நான் யார் என்று கேட்டேன் அதனிடம், 'ஓவியம் தாங்கும் சட்டகத்தின் விளிம்பில் கிறுக்கப்பட்டிருக்கும் வாசிக்க கிட்டாத பெயர் நீ' என்று சொன்னது அசரீரி.   - பாலாஜி ராஜூ

குவளை - கவிதை

Image
                                                              ஆகஸ்ட் 18, 2024 வயதொத்தவர்களின் இறப்புச் செய்தி வந்தவண்ணமிருக்கிறது, முற்றிலும் அருந்தப்படாத மதுக்குவளையின் சிதறல் கனவுகளில் துரத்துகிறது, இப்பொழுதெல்லாம் சொட்டு மிச்சமில்லாமல் அருந்திவிடுகிறேன் பிரபஞ்சம் என்னிடம் அளிக்கும் மதுக்குவளைகளை, காலியான குவளைகள் பஞ்சுபோல காற்றில் மிதப்பவை என ஏனோ கற்பிதம் கொண்டேன், பளிங்குக் கண்ணாடியும் இறுகிய தரையும் இரகசியமாய் சிரித்துக்கொண்டதை அறியாமல்.   - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - அறை

Image
                                                       நவம்பர் 19, 2023 ரஸ்கோல்நிகோஃவின் அறையை வாடகைக்கு எடுத்தேன் சல்லிசான விலைக்கு கிடைத்தது பின்நவீனத்துவவாதியின் மாலைப்பொழுதை முன்பதிவு செய்தேன் நிபந்தனைகள் விதித்த கொசுறுகள் தாண்டி புன்னகையோடு அணைத்துக்கொண்டார் தொல்மரபாளனின் உறக்கமற்ற இரவை காத்திருந்து குழந்தையென பொத்திக்கொண்டேன் இரண்டு நதிகளுக்கிடையில் நீளும் சாலையில் என் பயணம் அசதியான பயணியின் வசீகரங்களை பூர்த்திசெய்ய எனக்களிக்கப்பட்ட மதுக்கோப்பையை முலைமறந்த குழந்தையின் நினைவென கவ்விக்கொள்கிறேன் முடிவுறா இந்த மாலையில்.   - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பிராணி

Image
                                                     நவம்பர் 18, 2023 அது என்னிடம்  எப்படி வந்தது என்று தெரியவில்லை நான் ஒரு டைனோசரை வளர்த்துக்கொண்டிருந்தேன் அது என்னை விழுங்கி வளர்ந்துகொண்டிருந்தது சலனமற்ற இரவில் அலறும் பெயரற்ற காட்டு விலங்கைப் போல எதிர்பாராத வேளைகளில் என் கட்டுகளை மீறி உறுமித் திமிறும் ஒரு நாள் பூங்காவில் விளையாடும் குழந்தையிடமிருந்து வெளியேறிய குட்டி டைனோசரைக் கண்ட அந்த தருணம் புரிந்துவிட்டது  எனக்கு எல்லாமும்.      - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - காலணிகள்

Image
                                                  நவம்பர் 5, 2023 நம்மைத் தொலைக்க நெடும் பயணங்கள் தேவையில்லை வெற்றுக் கால்களில் சில மைல்கள் ஓடிக் கடக்கலாம் ஓடியும் கலைக்கலாம் நம் காலடிகளை அந்த ஊரிலிருந்து சில கடிதங்களை எழுதலாம் அவற்றை வாசிக்காமல் நெருப்பிலிட்டால் போதும் ஊதி விளையாடி சுழன்று திளைக்கலாம் நம் விலாசங்களின் ஞாபகப் பரப்பை காற்று மீட்டும் மின்சாரக் கம்பிகளில் நம் காலணிகள்.   - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - வடிவம்

Image
                                                            ஜூன் 18, 2023 கோணல்கள் வட்டங்களின் பிறழ்வுகள் வட்டங்கள் கோணல்களின் புனிதங்கள், இரவெங்கும் பொய்க்கால் குதிரைகளின் உரத்த காலடிகள் நாம் பங்கெடுக்கும் சர்கஸ்களில் நாமே கோமாளிகள், ஒவ்வொரு கோணலுக்கும் உருவாக்குவோம் உரத்த சிரிப்பலைகளை உஷ்ணக் காற்றாய் நுழைந்து வெளியேறுவோம் கூத்துக்காரிகளின் மொடமொடப்பான வட்டப் பாவாடைகளில் முச்சந்திகளில் கூவி விற்போம் நம் சர்கஸ்களின் நுழைவுச் சீட்டுகளை, ஒவ்வொரு வட்டத்தின் புனிதத்தையும் எழுதிக் காட்டுவோம் சூன்யத்தின் நூலாம்படைகளால், கடைந்து திரட்டுவோம் நம் புனிதங்களை உருக்கி அடைத்து புட்டிகளில் பெயரொட்டுவோம் தூய்மையான தீர்த்தமென, நாளையினருக்கு நெருப்பில் வாட்டி உண்ணக் கொடுப்போம் சில புத்தகங்களின் புஷ்டியான எழுத்துக்களை நாம் அடைந்துகொண்டிருக்கும் தீவுகளின் மீட்சிக்காய், அவர்கள் போஷாக்குடன் வளர்ந்து உருவாக்கட்டும் அழகிய தீவுகளை அத...

என் கவிதைகள் - பாதைகள்

Image
                                                  ஜூன் 4, 2023 அன்பின் மலர்கள் அற்புதமானவை என்றுதான் நீங்கள் அதை, அவற்றை, ஏற்றுக்கொள்கிறீர்கள் அதன், அவற்றின், அற்புதங்கள் வலுவாக உரைக்கப்படுகின்றன உங்களுக்கு, ஒரு தேவாலயத்தின் மணிபோல ஒரு கோபுரத்தின் கூர்மைபோல அவை உங்களை வந்தடைகின்றன, ஓசைகளை வலிகளைத் துறந்துவிட்ட துறவியொருவன் ஆடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறான் பிரபஞ்சத்தின் அற்புதப் பாதைகளில்.         - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - அளிக்கப்படுபவை

Image
                                                       மார்ச் 31, 2023 என்னுடைய சேமிப்புகளில் வசந்தகாலங்கள் எண்பெருக்காய்க் கிடந்தன கடவுள் ஒரு தாராளவாதி, எண்ணிக்கையறியா செலவாளியாக நண்பர்கள் உறவினர்கள் எதிர்படும்  வயதான காதலர்கள் என பரிசளித்தேன், உண்ணாத பழங்களாய் வீணடித்தேன், மருந்துகளை வெறுக்கும் நோயாளியாய் தந்திரமாய் வீசியெறிந்தேன் வறியவனானேன், துயிலற்ற இரவுகளில் எண்ணிக்கைகளைக் கணக்கிட்டு பெருமூச்சுவிடுபவனாகவும் புதிதாக யாசகம் செய்பவனின் தயக்கத்துடன் கடன் கேட்பவனாகவும் யாசகமிட்டவற்றை திரும்பப் பெறும் குரூரியாகவும் மாறினேன், மூன்று வயது பாலகனிடம் வசந்தகாலங்களை வழிப்பறி செய்பவனாகவும்.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - வாசகன்

Image
                                                       மார்ச் 30, 2023 ஒரு மதுக்கோப்பையின் மீதான ஒரு தேனீர் குவளையின் மீதான பிரேமையில் பின்நவீனத்துவமும் அறமும் பிசிபிசுத்தது தேனீர் குவளையின் இனிப்பிற்கும் மதுக்குவளையின் மயக்கிற்குமாக ஓடி ஓடி ரீங்காரித்தது ஒரு ஈ.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - சுழல்

Image
                                                 மார்ச் 3, 2023 ஒவ்வொரு குளிர்காலம் வருகையிலும் உறுதியாகச் சொல்கிறேன் இதுதான் கடைசி என ஒவ்வொரு முறை விடைபெறுகையிலும் சொல்கிறது குளிர்காலம் மீண்டும் சந்திப்போமென.         - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - கடவுள்

Image
                                                  மார்ச் 3, 2023 எங்கோ வரைகிறான் ஒரு பித்தன் என் கோட்டுச் சித்திரத்தை.     - பாலாஜி ராஜூ