என் கவிதைகள் - வடிவம்

                                                


ஜூன் 18, 2023

கோணல்கள் வட்டங்களின்

பிறழ்வுகள்

வட்டங்கள் கோணல்களின்

புனிதங்கள்,


இரவெங்கும் பொய்க்கால்

குதிரைகளின்

உரத்த காலடிகள்

நாம் பங்கெடுக்கும்

சர்கஸ்களில் நாமே

கோமாளிகள்,


ஒவ்வொரு கோணலுக்கும்

உருவாக்குவோம்

உரத்த சிரிப்பலைகளை

உஷ்ணக் காற்றாய்

நுழைந்து வெளியேறுவோம்

கூத்துக்காரிகளின் மொடமொடப்பான

வட்டப் பாவாடைகளில்

முச்சந்திகளில் கூவி விற்போம்

நம் சர்கஸ்களின்

நுழைவுச் சீட்டுகளை,


ஒவ்வொரு வட்டத்தின்

புனிதத்தையும்

எழுதிக் காட்டுவோம்

சூன்யத்தின் நூலாம்படைகளால்,


கடைந்து திரட்டுவோம்

நம் புனிதங்களை

உருக்கி அடைத்து

புட்டிகளில் பெயரொட்டுவோம்

தூய்மையான தீர்த்தமென,


நாளையினருக்கு

நெருப்பில் வாட்டி

உண்ணக் கொடுப்போம்

சில புத்தகங்களின்

புஷ்டியான எழுத்துக்களை

நாம் அடைந்துகொண்டிருக்கும்

தீவுகளின் மீட்சிக்காய்,


அவர்கள்

போஷாக்குடன் வளர்ந்து

உருவாக்கட்டும்

அழகிய தீவுகளை

அதன் வண்ணங்கள்

பொறித்த சுவர்களை,


வட்டங்கள் கோணல்களின்

பிறழ்வுகள்

கோணல்கள் வட்டங்களின்

புனிதங்கள்.

    - பாலாஜி ராஜூ

Comments

Post a Comment

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை