காவு சிறுகதை, ஜி. எஸ். எஸ். வி. நவின் - ஒரு வாசிப்பு
எழுத்தாளர், நண்பர் ஜி. எஸ். எஸ். நவீன் எழுதிய காவு சிறுகதை கனலி இணைய இதழில் வெளிவந்துள்ளது. வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய சிறு குறிப்பு இது.
அன்புள்ள நவின்,
கதை மிகவும் கவர்ந்தது, வாசிக்கையில் ஒருவித பதற்றம் தொடர்கிறது. உங்களுடைய கதைகளில் மிகவும் கூரிய நடை அமைந்தவற்றில் ஒன்று என்றும் தோன்றுகிறது, கதையின் களமும் சூழலும் முதல் சில பத்திகளில் மனதில் ஏறி அமர்ந்துகொள்கிறது.
இதை ஒரு இலக்கியப் பிரதியாக மாற்றுவது அந்த அப்பாவின் மனநிலைக்கான காரணத்தைக் கையாண்ட விதம் என்று எண்ணுகிறேன். மிகவும் பூடகமான அல்லது மிகவும் நுண்ணிய ஒரு காரணம் அது. இந்தக் காரணத்தை காமத்துக்கான அல்லது எதன் மீதும் கொண்ட மிகைப் பற்றுக்கான உருவகமாக வாசிக்க நிறைய இடம் இருக்கிறது, நான் அப்படித்தான் வாசித்தேன்.
சீதையைக் கண்ட இராவணனுக்கும், எப்போதும் தொழிலில் பொருள் இழந்தாலும் அதை நோக்கியே மீண்டும் செல்லும் மனம் கொண்ட ஒரு மனிதனுக்கும், புதையல் தேடும் விழைவு கொண்டவனுக்கும், கண்டுபிடிப்புகளைத் தேடி ஓடும் அறிவியலாளனுக்கும் - எண்ணிப் பார்த்தால் காரணம் மிகவும் நுண்ணிய இழையாகவே இருக்கிறது, அங்கு நம்மை மீறிய பிரபஞ்ச சக்தி ஒன்று அவர்களை இயக்குகிறது, சிந்திக்கையில் அது திகைக்கவும் வைக்கிறது. நான் தொன்மம், தெய்வ சக்தி இதையெல்லாம் தாண்டியும் இந்தக் கதையை என்னில் வளர்த்துக்கொள்கிறேன்.
இதில் ஒரு முடிவு சொல்லப்பட்டாலும் அதில் உள்ள முடிவற்ற தன்மை அல்லது திட்டமிட்டு சொற்களால் கடத்திவிட இயலாத ஒரு அனுபவம் இருக்கிறது, அதைச் சொல்வதில் ஆசிரியனாக உங்கள் கூர்மை நன்றாகத் தெரிகிறது - கதை உங்களை அதுவாக அழைத்துச் சென்றிருக்க வாய்ப்புள்ளது, அதில் ஒரு தற்செயல்தன்மை இருந்திருக்கலாம், ஆனால் அது அமைவது தொடர்ச்சியாக எழுதுவதன் வாசிப்பதன் சிந்திப்பதன் வாயிலாக மட்டுமே அமையும் ஒன்று அல்லவா? வாசகனாக எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இதை மாற்றியது கதையில் உள்ள அருவத்தன்மை என்றே சொல்வேன்.
மனமார்ந்த வாழ்த்துக்க்கள்.
Comments
Post a Comment