சலூன் - சிறுகதை
அவன் சிறுவனாக இருக்கையில் வீட்டுக்கு வந்து முடி திருத்திவிட்டு, நெல்லை ஊதியமாகப் பெற்றுக்கொண்டிருந்த நாவிதர் பொன்னம்பலம் கடைவீதியில் தனியாக ஒரு சலூன் தொடங்கியிருந்தார். இனிய வாசனைகளுடனும், சிதறிய ரோமங்களுடனும், மடிப்புகளை மறக்காத நாளிதழ்களுடனும் இருந்த அந்த சலூன் அவனுக்கு ஒரு அதிசய இடமாக அமைந்தது.
சலூனின் சுவர்களில் ஏதிரெதிராக மிக நீண்ட இரு கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. இவ்வளவு பெரிய கண்ணாடியை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. கண்ணாடிகளில் தன்னுடைய உருவம் பல நூறாக பெருகிப் பிரதிபலிப்பதை அவன் வியந்து பார்த்துக்கொண்டிருப்பான். சலூனின் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு சுழல்வதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். நாற்காலிகள் முழுக்க பொன்னம்பலத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. நாற்காலிகளை உயர்த்தியும் தாழ்த்தியும் விரித்தும் அவர் மந்திர வித்தை காட்டிக்கொண்டிருந்தார்.
அவனுடைய நைனா வெகுளியான ஒரு கிராமத்து மனிதர். வாழ்வின் அதிர்வுகளை தண்ணீருடன் உறவாடும் தாமரை இலையைப் போல அவர் எதிர்கொண்டார். மாதமொருமுறை அவனையும், தம்பியையும் அந்த சலூனுக்கு அழைத்துச் சென்று "நல்லா ஒட்ட வெட்டியூட்டுருப்பா" என்று சொல்லிவிடுவார். ஒரு பிளாஸ்டிக் குடுவையிலிருந்து தண்ணீர் தெளிக்கப்பட்டு, பொன்னம்பலத்தின் கைகள் அவனுடைய தலைமுடியில் ஊடுறுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். பொன்னம்பலத்தின் கைகளில் கத்திரி வாய்பிளந்து மூடி எழுப்பும் சப்தம், குருவிகளின் ஒசையைப்போல இருப்பதாக அவன் எண்ணிக்கொள்வான்.
கரிய ரோமங்கள் பளபளப்புடன் கொத்துக்கொத்தாக தரையில் வீழ்வதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே தூக்கம் கண்களை வந்து தழுவும். நைனா "ஏய் தூங்காத" என்று அவனை தூக்கத்திலிருந்து மீட்பார். முடி வெட்டிக்கொள்வது நிறைவுபெறப்போவதை புறமண்டையை வருடும் காற்றைக்கொண்டு உணர்ந்துகொள்வான். பிறகு தானகவே வீட்டிலிருந்து கிளம்பி சலூனுக்கு நடந்து செல்லத் தொடங்கினான். அவனுடைய ஊருக்கும் கடைவீதிக்கும் இடையில் கரூர் திருச்சி நெடுஞ்சாலை ஒரு கரிய நதியைப்போல ஓடிக்கொண்டிந்தது.
பொன்னம்பலம் தன்னுடைய மகனை பள்ளி விடுமுறை நாட்களில் அழைத்துவந்து தொழில் கற்றுக்கொடுத்தார். சில வருடங்களில் அவருடைய மகன் நிரந்தரமாக கடையில் இருக்கத் தொடங்கியது அனுக்குப் புரியவில்லை. அவர்கள் எப்போதுமே தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் சண்டைகளை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருப்பான். பொன்னம்பலத்தின் மகன் ஒல்லியாக துருத்தும் முன்பற்களுடன் பத்திரிகைகளில் பார்க்கும் கேலிச் சித்திரத்தை நினைவூட்டினான்.
சலூனின் சுவர்களில் ஒட்டியிருந்த நடிகைகளின் படங்கள் அவனை சொல்லமுடியாத உணர்வுகளுக்குள் இழுத்துச்சென்றன. நாளிதழ்களில் உள்ள நடிகைகளின் புகைப்படங்களை மற்ற செய்திகளைப் படிப்பதைப்போல பாவனை செய்துகொண்டு பார்க்கத் தொடங்கினான். குறிப்பாக சினிமா செய்திகளை அவன் ஆர்வமாக வாசிப்பான்.
திருச்சியில் கல்லூரி செல்லத் தொடங்கியதும் அவனுக்கு வேறு முறையில் முடிவெட்டிக்கொள்ளும் ஆவல் வந்துவிட்டது. பொன்னம்பலம் தன்னிடம் எதையும் கேட்காமல் ஒரே முறையில் முடிவெட்டுவது அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. 'காதலர் தினம்' திரைப்படத்தில் வரும் நாயகன் குனாலைப் போல முடிவளர்த்துக்கொள்ள விரும்பினான். சைக்கிளில் சென்று அருகிலிருந்த சிறிய நகரான புலியூரிலும், பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சற்று பெரிய நகரான கரூரிலும் முடிவெட்டிக்கொள்ளத் தொடங்கினான்.
ஒரு முறை அவனை கடைவீதியில் கண்ட பொன்னம்பலம் "என்னப்பா ஆளையே பாக்க முடியல" என்று கேட்டார், அவனுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. நைனா "முடிவெட்டிக்க ஏண்டா அவ்வளவு தூரம் போற, நம்மூர்லயே வெட்டிக்கவேண்டியது தான?" என்று கேட்பதை அவன் விரும்பவில்லை, அதற்கான காரணங்களை அவன் விவரிக்கவும் முயலவில்லை.
….
அவன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து ஒன்பதாண்டுகள் கடந்துவிட்டன. காலம் சில வெள்ளை முடிகளாக அவன் முகத்தில் குடியேறி, இப்போது கணிசமாக தன் இருப்பைப் பெருகிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கு குடியேறிய புதிதில் வெள்ளைக்காரிகள் முடிவெட்டுவதை வியப்பாக எண்ணிக்கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்களுக்குள் முடிவெட்டி "முடிந்துவிட்டது" என்று அவர்கள் சிரிப்பார்கள், அவனும் "நன்றி" என்று சிரித்துவிட்டு பழைய நாட்களை எண்ணிக்கொண்டு வீட்டை நோக்கி பயணிப்பான்.
ஒரு முறை மெக்ஸிகோ தேசத்துப் பெண் ஒருவள் நேர்த்தியாக முடிவெட்டிவிட்டாள். அவள் இரண்டு கைகளையும் பயன்படுத்தி சிரத்தையாக முடிவெட்டுவதை அவன் விரும்பினான். அவன் மனைவியும் "என்ன மறுபடியும் சொதப்பிட்டாளுகளா" என்று கேலி செய்வதை நிறுத்தியிருந்தாள். முடிதிருத்தும் நிலையத்தை அழைத்து அந்த மெக்ஸிகோ தேசப் பெண் வேலைசெய்யும் நாட்களை உறுதிசெய்துகொண்டே செல்வான். பொன்னம்பலத்தையும் பழைய நாட்களையும் மறக்கத் தொடங்கினான்.
அந்த மெக்ஸிகோ தேசத்துப் பெண் வேலைக்கு வருவதில்லை என்று கேள்விப்பட்ட தருணத்தில் மீண்டும் பழைய நாட்களின் எண்ணங்களுக்குள் மூழ்கினான். வேலை மாற்றம் காரணமாக நூற்றைம்பது மைல் தெற்கிலிருக்கும் நகர் ஒன்றுக்கு குடிபெயர்ந்தான். அது அவன் வசித்த நகருக்கும், பயணங்களில் வியந்த பெரு நகர்களுக்கும் இடையில் அமைந்த ஒரு நகரம். எண்பது வருடங்களாக இயங்கும் பழைய சலூன் இருக்கும் செய்தியை இணையத்தில் தேடி அறிந்துகொண்டு அங்கு செல்லத் தொடங்கினான்.
அவனுக்கு தற்போது முடிதிருத்துபவர் வயதான ஒரு வெள்ளைக்காரர், அதிகம் பேச மாட்டார். "உன்னுடைய நாள் எப்படிப் போகிறது" என்று கேட்டுவிட்டு காரியத்தில் இறங்கிவிடுவார், அவனுக்கும் அது சௌகரியமாகவே இருந்தது. அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிதையும், வியட்நாமில் பணிபுரிந்ததையும் ஒருமுறை குறிப்பிட்டார். இராணுவத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பழைய நாட்களை மறப்பதே இல்லை.
அவனுடைய நகரம் பெரியதுமில்லாமல் சிறியதுமில்லாமல் இருப்பதைப்போல, அவர் அளித்த முடிதிருத்தங்கள் திருப்தி என்று சொல்வதற்கும், அதிருப்திக்கும் இடையில் இருந்தன. மையமாகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவான். மீண்டும் பழைய நாட்களை எண்னிக்கொண்டிருகையில் அந்த மெக்ஸிகோ தேசத்துப் பெண்ணின் நினைவும் அவனை ஆட்கொள்ளத்தொடங்கியது.
ஒருநாள் அவன் தன்னுடைய அலுவலகத்துக்கு கணிப்பொறி சுமக்கும் பையில் தேடி, முடிதிருத்தத்திற்கு அந்த மெக்ஸிகோ தேசத்துப் பெண் தன்னுடைய கைகளால் எழுதிக் கொடுத்த குறிப்பு அடங்கிய சந்திப்பு அட்டையைத் தேடி எடுத்தான். ஒவ்வொரு முறை முடிதிருத்தத்திற்கு செல்கையிலும் அந்த அட்டையை வயதான வெள்ளைக்காரரிடம் காண்பித்துவிடுவான். அவனுக்கும் அவருக்கும் இடையில் எப்போதுமே உரையாடல்கள் இருந்ததில்லை, இப்போதும். அந்த சந்திப்பு அட்டையை தன்னுடைய கடவுச் சீட்டைப் போல ஒரு பொக்கிஷமாக பாதுகாக்கிறான்.
இப்போதெல்லாம் அவன் தன்னுடைய பழைய நகரத்தில் சந்தித்த மெக்ஸிகோ தேசத்துப் பெண்ணையும், பொன்னம்பலத்தையும் சேர்த்தே எண்ணிக்கொள்கிறான். அவனுடைய நைனா இன்னும் பொன்னம்பலத்திடமே முடிவெட்டிக்கொள்கிறார்.
Comments
Post a Comment