கேலரி பியர், சிறுகதை - ஆவநாழி இதழ்

                                                    

டெபி எனும் டெபோரா ஜெனீனோவை நான் முதலில் சந்தித்தது ஒரு வசந்தகால முன் மதியப் பொழுதில், கேலரி பியர் மரத்தின் அடியில். 

இரண்டு மணிநேரமாக ஓட்டிக்கொண்டு வந்த இருபது அடி நீள வாடகை வண்டியை, வீட்டின் வாசலை நோக்கி பின்புறமாகத் திருப்பி நிறுத்தியபோதுதான் அவரைப் பார்த்தேன். தன்னுடைய இடது கையால் சிறிய வளர்ப்பு நாயின் கழுத்துப் பட்டையைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார். இன்னொரு கையை தேநீர் கோப்பையின் கைப்பிடிபோல இடுப்பில் வைத்துக்கொண்டிருந்தார். அந்த நாய்க்குட்டியின் கண்கள் இரண்டும் தலையிலிருந்து கீழிறங்கிய வெண்ணிற ரோமச் சரிவால் மூடப்பட்டிருந்தது. தன் நாசியால் புல்வெளியில் எதையோ ஆர்வமாகத் துளாவிக்கொண்டிருந்தது. 

அறுபது வயது கடந்த வெள்ளைக்காரப் பெண்மணி. நரையும், வெளிறிய செம்மண் நிறமுமான தலைமுடியை குட்டையாக வெட்டியிருந்தார். கண்களைச் சுருக்கி, நான் வண்டியின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தார். முதுமையின் மடிப்புகளுடன் சேர்ந்து, உறக்கத்துக்கான ஏக்கமும் இரு கண்களையும் சூழ்ந்திருந்தது. அவருடைய உடல் பருமன், ஐந்தரை அடி உயரத்தை இன்னும் குறைத்துக்காட்டியது. மூட்டு வலி உள்ளவர்களுக்கே உரிய கவனமான அசைவுகள். 

அன்று அதிகக் குளிர் இல்லை; காற்று தலை முடியைக் கோதுமளவு வீசியது. சில நாட்களுக்கு முன் பனி பெய்திருக்கலாம். பனிப்பொழிவின் உருகாத மங்கிய வெள்ளைக் குவியல்கள், உலர்ந்த மஞ்சள் நிறம் தோய்ந்த புல்வெளிப் பரப்பில் ஆங்காங்கே தென்பட்டது. வானிலை காற்றுக்கு ஏற்றவாறு அடர்ந்த குளிராடைக்கும், மென் குளிரைத் தாங்கும் அங்கிகளுக்கும் இடையில் ஊசாலாடியது. 

அந்த மாகாணத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சந்தன நிற மென் குளிராடையை அணிந்திருந்தார். கரிய நிற கால் சராய், நாய்கள் வளர்ப்பவர்களுக்கே உரிய ரோமப் பிசிறுகள் இல்லாமல் தூய்மையுடன் இருப்பதை கவனித்தேன். எங்களுக்கு இடையில் வெள்ளைப் பூக்களால் செரிந்த அந்த மரம் நின்றிருந்தது. மரம் உதறிய பூக்கள் அதன் காலடியில் பரவிக் கிடந்தன.  

இந்த நாட்டுக்குக் குடியேறிய சில வருடங்களில் கற்றுக்கொண்ட, புதியவர்களிடம் பேசத் தொடங்க ஏதுவாக, சூழல் குறித்த வர்ணனை ஒன்றை மனதில் வார்த்துக்கொண்டு அவரை நோக்கினேன். 

இந்த மரத்தின் பெயர் கேலரி பியர்!என்றார்.  

மரம் குறித்த எண்ணங்களில் இருந்தவரை என்னுடைய வருகை கலைத்திருந்தது. சுதாரித்துக்கொண்டவராக, “எத்தனை மணிநேரமாக இந்த வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிறாய், இனியவளே?” என்று கேட்டார்.  

பெரிய வாடகை வண்டியை நான் இதுவரை ஓட்டியதில்லை. நெடுஞ்சாலையில் பயணித்த அசதியும், பத்திரமாக வந்து சேர்ந்துவிட்ட நிம்மதியும், யாரிடமாவது உடனே பேசவேண்டும் என்ற முனைப்பும் என்னிடம் இருந்தது. அவர்இனியவளேஎன்று அழைத்தது விளக்கமுடியாத ஆறுதல் உணர்வையும் ஏற்படுத்தியது.  

இரண்டு மணிநேரம்அவருடைய அடுத்த கேள்வி எங்கிருந்து வருகிறாய் என்பதாக இருக்கலாம் என்பதை ஊகித்து, முந்தைய நகரின் பெயரையும் சேர்த்துச் சொன்னேன்.பீனோவை அந்த நகரிலிருந்துதான் கொண்டுவந்தேன்பீனோ நோயர்ஒயின் வகை இருக்கிறதல்லவா, அதைப் போல!என்று சொல்லும்போது அவர் கையிலிருந்த கழுத்துப்பட்டை அசைந்தது.  

மெல்லிய நடுக்கம் கொண்ட அவருடைய குரலில், அன்னியர்களிடம் எதிர்பாராத வகையில் பரிச்சயமான ஒன்றைக் காணும்போது எழும் உற்சாகம் தொற்றிக்கொண்டது; உடல் அசைவுகளிலும் அது வெளிப்பட்டது. கண்களின் ஓரத்து மடிப்புகள் சற்று சுருங்கி விரிந்தன. 

அவர் தன் செல்ல நாயின் பெயரைப் பலருக்கும் இதே முறையில் அறிமுகம் செய்து பழகியவர் என்று தெரிந்தது.புரிகிறது. அழகிய பெயர்!என்றேன். எனக்கு ஒயின் வகைகளைப் பற்றி எதுவும் தெரியாது. 

என்னுடைய பதில், அவரிடம் வெளிப்பட்ட உற்சாகத்தை ஈடுசெய்யவில்லை என்பதை உணர்ந்து, “என்ன இனம்?” என்று கேட்டேன். நாய் வளர்ப்பவர்கள் இந்தக் கேள்வியை விரும்புவார்கள். 

இது ஒரு கியூபா நாட்டு நாய், ஹவானீஸ் இனம். இவனுக்கு ஒரு கண் குருடு. இதை உன்னுடைய நகரிலிருந்த ஒரு நாய்கள் காப்பகத்திலிருந்து தத்தெடுத்திருக்கிறேன். மூன்று வருடங்களாக என்னுடன் இருக்கிறான், மிகவும் பிரியமானவன்,” என்று சொன்னவர், எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த அந்த மரத்தை நிமிர்ந்து நோக்கினார். 

அழகிய மரம். ஆனால் வசந்த காலத்தில் மட்டும் இதன் நாற்றத்தை என்னால் தாங்கமுடிவதே இல்லை!என்றார்.  

அப்போதுதான் அதை உணர்ந்தேன். மீன் கவிச்சியைப் போன்ற ஒரு நாற்றம். நாசியைச் சுழிக்க வைக்கும் காத்திரமான மணம். ஏதோ ஒரு பொசுங்கும் வேதிப் பொருளின் வாடையைப் போலவும் இருந்தது. எங்கள் ஊரில் பல ஆண்டுகளாக இயங்காமல் கிடக்கும் சிவன் கோவில் தேரின் உச்சியில் தூசியும், வௌவால்களின் புழுக்கையும் இணைந்த வாடையையும் நினைவுபடுத்தியது. மருந்துக் குடோன்களின் சில இடங்களில் இதே போன்ற வாடையை நான் உணர்ந்திருக்கிறேன். 

மரங்களை வழிபடும், கொண்டாடும் பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறேன். எங்கள் குலதெய்வமே ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அமைந்ததுதான்; கேலரி பியர் மரம் குறித்து எதிர்மறையாகச் சிந்திக்க என் மனம் ஒப்பவில்லை. அமெரிக்கர்கள் மழையின் மீதே சுனக்கம் கொள்கிறார்கள், இதில் என்ன ஆச்சரியம் என்று தோன்றியது. 

கேலரி பியர் என்ற பெயரும், அதன் சொல்லிசைவும் மனதுக்கு இதமாக இருந்தது. அர்த்தமற்ற மனஓட்டங்களின் போது பலமுறை உச்சரித்துப் பார்க்க ஏதுவான, இனிமையான பெயர்! 

ஒரு மாதத்திற்கு முன் குளிர்காலத்தில் இந்த வீட்டைப் பார்க்க வந்திருந்தேன். மரம், இலைகளற்ற வெற்றுக் கிளைகளால் வான் நோக்கித் துதித்துக்கொண்டிருந்தது. ஏனோ துளிர்க்கையில் அதனிடம் கசப்பு கூடிவிடுகிறது. கசப்பு பெருகிப் பெருகி எண்ணிலடங்காப் பூக்களாக மலர்கிறது. துயரம், அதன் கூரிய எல்லையில் புன்னகையாக மாறுவதைப் போல!  

என்னுடைய பெயர் டெபி.என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.நான் தீபிகா. என்னை தீப் என்று நீங்கள் அழைக்கலாம்.என்றேன். மிகச் சிறிய என்னுடைய பெயரை, சரியாக உச்சரித்த அமெரிக்கர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. 

டீப், நினைவில் வைத்துக்கொள்ள எளிதான பெயர்தான். நான் உன்னுடைய அண்டை வீட்டுக்காரி, கீழ்த்தளம்.என்று அவருடைய வீட்டின் எண்ணைக் குறிப்பிட்டு கைகாட்டினார். 

அமெரிக்காவின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றின் பல கிளைகள் அமைந்த நகரம். மருந்தாளுநராக ஏதிர்காலத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என்று தோன்றியதால் இங்கு வேலை மாற்றிக்கொண்டு வந்திருந்தேன். 

அந்தக் குடியிருப்பு முழுக்க இந்தியர்களும், கிழக்கு ஆசியர்களுமே அதிகம் தென்பட்டனர். என்னுடைய தெருவில் இந்தியக் குடும்பங்களே அதிகம் இருந்தனர். பாதுகாப்பு கருதியும், நான் வேலை செய்ய இருக்கும் மருந்தகம் மூன்று மைல்கள் அருகில் இருந்ததாலும் இந்தக் குடியிருப்பைத் தேர்ந்தெடுத்திருந்தேன். 

அங்கு வந்த சில மாதங்களில், உப்பரிகையில் நின்று கேலரி பியர் மரத்தைப் பார்ப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தேன். கோடைக்காலம் தொடங்கிவிட்டது. மரம் முழுக்க ஆயிரக்கணக்கான பசும் இலைகள் அடர்ந்திருந்தன. அரச மர இலைகளின் சிறிய வடிவம் போன்றவை இந்த மரத்தின் இலைகள். உற்றுப் பார்த்தால், ஒவ்வொரு இலையும் காற்றின் விசைக்கு ஏற்ப தனித்துவமாக அசைவதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும்.  

வசந்த காலத்தில் வெளிப்பட்ட மரத்தின் கெடு வாசனை, அதனுள் நினைவுகளாக எஞ்சியிருக்குமோ, விந்தையான மரம்! 

ஒரு விடுமுறை நாளில் சற்று தாமதமாகத் தூங்கி எழுந்து, கையில் காபிக் கோப்பையுடன் உப்பரிகைக்கு வந்தேன். தெருவின் ஓரத்தில், அந்த நகரின் பெயர் பொறித்த பச்சை நிறக் காவல் வாகனம் நின்றிருந்தது. வண்டியின் மேல் இருந்த அறிவிப்பு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.  

கீழே டெபியிடம் முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் காவல் அதிகாரி, “தெருவில் விளையாடும் குழந்தைகளின் மேல் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. புரிந்துகொள்ளுங்கள் அம்மணியே. ஓசைகள் குறித்து நீங்கள் குடியிருப்பாளர் அலுவலகத்தில்தான் புகார் அளிக்கவேண்டும்!என்று சொல்வதைக் கேட்டேன். 

பள்ளி விடுமுறை என்பதால் தெரு முழுக்க இந்தியக் குழந்தைகளுடன் சில ஆசியக் குழந்தைகளும், சைக்கிளில் சுற்றியும், விளையாட்டின் களிப்பினால் உரக்கக் கூவியும், சிரித்தும் அலைந்துகொண்டிருந்தனர். டெபி கீழ் தளத்தில் இருப்பவர், அவர் அந்த ஓசைகளால் எரிச்சல் அடைந்திருக்கிறார். அதற்காக காவல்துறையிடம் புகார் எழுப்பியிருக்கிறார் என்று தெரிந்தது. 

அங்கு வந்த சில மாதங்களில் டெபி குறித்த பலவாறான அபிப்பிராயங்களை, நான் பழகிய இந்தியப் பெண்கள் என்னிடம் பகிர்ந்திருந்தனர்.டெபி ஒரு நிறவெறியர், கவனமாகப் பழகு!என்பதே அதில் முதன்மையானது. 

எனக்கு நாய்களின் மேல் பிரியம் உண்டு. ஒவ்வொருமுறை பீனோவைக் காணும்போதும் கொஞ்சத் தவறியதில்லை. என்னுடைய புறங்கையை அதனிடம் முகரக் கொடுப்பேன். டெபிக்கும் அந்தச் செயல் மிகவும் பிடித்துவிட்டது. பீனோ என் அருகாமையை வாசனையால் உணர்ந்து, குதூகலத்தில் வாலை ஆட்டிக் குழையத் தொடங்கிவிடும்.  

பீனோ அன்னியர்களிடம் அவ்வளவு எளிதாகப் பழகுவதில்லை. உன்னை அவனுக்குப் பிடித்திருக்கிறது!என்னை மகிழ்விப்பதற்காக அப்படிச் சொல்கிறார் என்றே எண்ணினேன். 

டெபியுடனான என்னுடைய நட்பு, அதற்குரிய இயல்பான பாதையில் நகரத் தொடங்கியது. இருவருமே புன்னகையுடன் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளப் பழகியிருந்தோம். சில நாட்கள் என்னைக் காணவில்லை என்றாலும், “உன்னைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்,” என்று சொல்வார். டெபி குறித்து உலவிய எண்ணங்களை மெல்ல உதறிக்கொண்டிருந்தேன். 

அவர் விமானப் பணிப்பெண்ணாக இருபது வருடங்கள் வேலை செய்தவர் என்ற ஆச்சரியமான செய்தியைப் பகிர்ந்தார். செப்டம்பர் பதினொன்று, நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்களைத் தாக்கிய விமான நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார். தாக்குதல் நிகழ்ந்த அன்று, அந்த விமானங்களில் ஒன்றில் அவர் பணிக்குச் செல்வதாக இருந்து, கடைசித் தருணத்தில், அவருக்கு பதிலாக இன்னொரு பெண் சென்றாள். அன்றைய நாள் டெபி நியூயார்க் நகரில் ஒரு விடுதி அறையில் தங்கியிருந்தார். 

தாக்குதல் டெபியிடம் மனரீதியாக ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு முறை மீண்டும் வேலைக்குச் செல்ல முயன்று, முடியாமல் பின்வாங்கினார்.  

விமான நிறுவனம் டெபியை பல்வேறு மனநல மருத்துவர்களிடம் அனுப்பி, அலோசனைகள் வழங்க வழிவகை செய்தது. ஆனால், அவரிடம் முளைவிட்ட அச்சத்தின் வடுக்கள் பெருகி வளரத் தொடங்கின. நிறுவனத்திடம் விருப்ப ஓய்வு பெற்று, இப்போது ஒரு பல்பொருள் அங்காடியில், பூக்கள் விற்பனைப் பகுதியில், பகுதி நேர வேலையில் இருக்கிறார். விமான நிறுவனம் மாதம் தோறும் சிறிய அளவிலான மருத்துவ காப்பீட்டுத் தொகையை அவருக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. 

நான் ஒரே நாளில் இருமுறை லாஸ் வேகாஸ் நகருக்கு பறந்திருக்கிறேன். வாழ்வே கொண்டாட்டமாக இருந்த நாட்கள் அவை,” டெபி செப்டம்பர் பதினொன்று நிகழ்வுக்குப் பிறகு விமானப் பயணங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டார். விரிந்து பரந்திருந்த அவருடைய உலகம், சிறிய வட்டத்தின் எல்லைகளுக்குள் அடங்கியது. 

தனக்கு ஒரு மகனும், மகளும் இருக்கும் செய்தியை ஒருமுறை சொன்னார். அதே மாகாணத்தில் வேறு நகரங்களில் வசித்தனர். அவர்களுடன் டெபி சுமூகமான உறவில் இல்லை என்று தெரிந்தது. எப்போதாவது அரிதாக அவர்கள் வந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். 

குடியிருப்பில் இருந்த இந்தியப் பெண்களால் நான் டெபியுடன் நெருக்கமாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கூடுகைகளின் போது, “உன் அமெரிக்கத் தோழி எப்படி இருக்கிறார்?” என்று கேட்டுக் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். டெபியைப் பற்றி ஒவ்வொரு முறையும் சொல்லப்படும் முரணான செய்திகள் தொடர்ந்தன. 

இனியவளே, சுருக்கங்கள், தொய்வுகள் இல்லாத மாசற்ற உன் தோலின் மேல் எனக்கு பொறாமையே ஏற்படுகிறது!என்று சொல்லியிருக்கிறார். தோல்நிறம் குறித்த எண்ணங்களை பொதுவில் வெளிப்படுத்துவதை அமெரிக்கர்கள் கவனமாகத் தவிர்ப்பார்கள். டெபி என்னைக் கேலி செய்கிறார் என்றே முதலில் எண்ணினேன். அவர் குறித்து என்னிடம் பகிரப்பட்ட அபிப்பிராயங்கள் அதற்கு காரணமாக அமைந்தன. ஆனால், அவர் மனமுவந்து அதைச் சொல்கிறார் என்பதை விரைவில் உணர்ந்துகொண்டேன்.  

தனியாக இருக்காதே, விரைவில் திருமணம் செய்துகொள். ஒரு நல்ல அமெரிக்க ஆணாய்ப் பார்த்துப் பழகு, உன்னை அவர்களுக்குப் பிடிக்கும். நான் இருமுறை திருமணம் செய்து விவாகரத்து வாங்கியவள், அனுபவசாலி!என்று சிரித்துக்கொண்டே கண்ணடித்தார். 

தன்னுடைய காரில் இருந்து மளிகைப் பொருட்களை எடுத்துக்கொண்டு வருகையில், ஒருமுறை கால் தடுக்கி புல்வெளியில் விழுந்துவிட்டார். நான் உடனடியாகக் கீழறங்கி, அவருடைய கைகளைப் பற்றி எழுப்பினேன்.எனக்கு ஒன்றுமில்லை, ஒன்றுமில்லைஎன்று பதற்றமாகச் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.  

டெபிக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களின் செய்கைகள் மீது அதிருப்தி இருந்தது. தன்னுடைய வீட்டை ஒரே நாளில் இருமுறை தூய்மை செய்வதாகச் சொல்லியிருக்கிறார். முறையாக அல்லாமல், வழியை அடைத்துக்கொண்டு தடையாகக் கிடக்கும் குழந்தைகளின் சைக்கிள்கள், வீட்டின் பின்புறம் பொதுவில் உலரவைக்கப்படும் ஆடைகள், தெருவில் கூடி நின்று புரியாத மொழியில் உரக்கப் பேசும் வழக்கம் என அவரிடம் சலனத்தை ஏற்படுத்தப் பல காரணங்கள் இருந்தன. 

என்னால் வீட்டின் பின்புறம் கூட நிம்மதியாக அமரமுடிவதில்லை. இன்னொருவரின் உள்ளாடையை நான் ஏன் பார்க்கவேண்டும்? குடியிருப்பாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துவிட்டேன், எந்தப் பயனும் இல்லை,” என்று ஒருமுறை சலிப்புடன் சொன்னார்.  

குடியிருப்பில் வாகன இருப்பிடத்திற்காக தனியாக அமைக்கப்பட்ட மனைகள் இருந்தன. அவற்றுக்கு மாதாந்திர தனிக் கட்டணமும் உண்டு. பெரும்பாலும் அந்த மனைகளை வாகன நிறுத்தம் தவிர உபரி பொருட்களுக்கான சேமிப்பிடமாகவே பலரும் பயன்படுத்தினர்; குறிப்பாக அமெரிக்கர்கள். தன்னுடைய மனையின் உள்ளே, பகல் முழுக்க, உரக்க ட்ரம்ஸ் வாசிக்கும் அமெரிக்க இளைஞனிடம் டெபி ஒருமுறை ஆவேசமாக வாதம் செய்வதைக் கண்டேன். அவன்இது என்னுடைய இடம், என் உரிமை.என்று சொல்லிவிட்டு இன்னும் உரக்கத் தட்டினான்.  

டெபியின் புகார்கள் மீது குடியிருப்பாளர் அலுவலகத்தினருக்கு அலட்சியம் இருந்தது. அவர் தொடர்ந்து புகார் எழுப்புவதால் வந்த விளைவு அது. மேலோட்டமான பதில்களை அவருக்கு அளிப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர். 

அந்த அண்டை வீட்டுக்காரர்கள் முயலின் கழுத்தை வெட்டிப் பலிகொடுப்பதை நான் பார்த்தேன்!என்று ஒருமுறை கூறினார். அங்கு வசித்தவர்கள் மகாராஷ்டிராவைச் சார்ந்த ஜெயின் குடும்பத்தினர். பூண்டு, வெங்காயம் இல்லாத உணவுப் பழக்கத்தைப் பேணுபவர்கள். வீட்டின் பின்புறம் ஆடைகளை உலர்த்தும் வழக்கமும் அவர்களுக்கு இருந்தது. 

டெபி மன அழுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர் என்று முன்னரே ஊகித்திருந்தேன். ஆண்டுகளாக அவற்றைப் பயன்படுத்துவது தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். பிறர் மீதான அதிருப்தியை அவர் பலவிதமான மிகைக் கற்பனைகளால் ஜோடித்துக்கொண்டார். 

என்னுடைய காரின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை யாரோ உள்நோக்கி மடக்கி வைக்கிறார்கள். ஒவ்வொரு முறை வண்டியை இயக்குகையிலும், நான் அதை நேர்படுத்துகிறேன். ஒரு முறை அதை மறந்துவிட்டதால் விபத்துக்கு உள்ளாகுமளவுக்குச் சென்றேன்,,,” என்பது சில வாரங்களாகவே டெபி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த புகார். 

காரின் பக்கவாட்டுக் கண்ணாடிகள் அணைக்கப்பட்டவுடன் உள்நோக்கி மடங்கும் திறன் கொண்டவை. அந்த வசதி குறித்து அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று விளக்கினேன். 

நான் பத்தாண்டுகளுக்கு மேலாக இதை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். மிகவும் பழைய வகை கார். இதில் விசிலோ, மணியோசைகளோ இல்லை பெண்ணே!என்று சொல்லிச் சிரித்தார். 

நான் கவனித்தவரை காரின் கண்ணாடிகள் மடங்காமல் விரிந்துதான் இருந்தன. ஆனால், டெபி பல முறை உரையாடல்களில் கண்ணாடிகள் உள்நோக்கித் திரும்பியிருக்கின்றன என்றே சொல்லிக்கொண்டிருந்தார்.  

அங்கு குடியேறிய ஆறு மாதங்களில் டெபியின் உளநிலைகள் குறித்து நன்றாகப் புரிந்துகொண்டிருந்தேன். டெபி தற்போது கூறும் புகார், அவருடைய மன அழுத்தம் சார்ந்த தீவிர எண்ணங்களின் விளைவு என்பதில் உறுதியாக இருந்தேன். 

டெபியின் உடல்நிலை குறித்த அக்கறையும் என்னிடம் இருந்தது. பல முறை அதை அறிந்துகொள்ளவும் முயன்றேன். என்னுடைய மருத்துவப் பின்புலம் அவருக்கு உதவும் என்று எண்ணினேன். டெபி அதில் ஆர்வம் கட்டவில்லை. தான் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பெயரைச் சொல்வதைக் கூட தவிர்த்தார்.  

இரண்டாம் முறை கீழே விழுந்தபோது, டெபி புல்வெளியில் ஏன் நெடுநேரம் அமர்ந்திருக்கிறார் என்று எண்ணி அருகில் சென்றேன்.  

கடவுளுக்கு நன்றி பெண்ணே, உன்னைப் பார்த்துவிட்டேன். பீனோவுடன் நின்றுகொண்டிருந்தேன், அடுத்த நொடி தரையில் இருக்கிறேன்!என்றார்.  இந்த முறை அவருடைய பின்புறம் கக்கத்தில் இரு கைகளையும் விட்டு, கவனமாகத் தூக்கி நிறுத்தினேன். தளர்ந்த தசைகளின் கீழ், அவருடைய கை எழும்புகள் அடர்வின்றி பலஹீனமாக இருப்பதை உணர்ந்தேன்.  

சமநிலைக்காக ஒரு நடைக்கருவியைப் பயன்படுத்துங்கள். எப்போதுமே அலைபேசியையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக என்னை அழையுங்கள்.என்று சொல்லிப் பார்த்தேன். 

நல்ல புரத உணவு சாப்பிட்டு மாதங்களாகிவிட்டது. என்னிடம் அவற்றை வாங்குமளவு திறனில்லை! இரண்டு மணி நேரம் கூட நான் உறங்குவதில்லை. ஒயினும், உறக்க மாத்திரைகளும் அதிகப் பலன் அளிப்பதில்லை. நான் மனநல ஆலோசனைக்குச் செல்லும் யூதன், மாதம் இருமுறை சிகிழ்ச்சைக்கு வரச் சொல்கிறான். என்னுடைய காப்பீட்டு அட்டையை அவன் வேலை செய்யும் மருத்துவச் சேவை நிறுவனம் அங்கீகரிப்பதில்லை. ஆலோசனைக்கான பணத்தை முழுமையாகச் செலவழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.என்றார். 

ஒரு அமெரிக்கர் தன்னுடைய நிலையை இத்தனை வெளிப்படையாகச் சொல்வது என்னை திகைப்படையச் செய்தது. சற்று நிலைகுலைந்தேன். எவ்வகையிலாவது அவருக்கு உதவ விழைந்தேன். ஆனால் தயக்கம் என்னை ஆட்கொண்டது.உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்!என்ற சம்பிரதாயமான வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் அவரிடம் சொல்லவில்லை; சொல்ல முடியவில்லை. 

டெபி மிகவும் தனித்துவமான ஆளுமை. உதவிக்கான என்னுடைய கோரிக்கை, அவருடைய தன்நம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று அஞ்சினேன். 

ஒரு நாள் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு ஒன்றின் விளம்பரத்தை என்னிடம் காட்டினார். அந்தக் குடியிருப்பின் வாடகை கணிசமானது. ஆனால் டெபி அங்கு செல்லும் கனவுகளில் ஈடுபடத் தொடங்கினார். அந்தக் குடியிருப்பின் தூய்மை, தனக்கென தனியாக அளிக்கப்படும் சிறிய புல்வெளியால் ஆன, வேலியுடன் கூடிய கொல்லைப்புரம் என ஒவ்வொரு முறையும் புதிய இடம் குறித்த தகவல்களை ஆர்வமுடன் விவரிக்கத் தொடங்கினார். 

விரைவில் அங்கு மாறிவிடுவேன். நீயும் என்னுடன் வந்துவிடு, நாம் அங்கும் அண்டைவீட்டுக்காரர்களாக இருப்போம். நீ இல்லாமல் என்ன செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை!இதையும் அவருடைய மனநிலையின் விளைவான ஒரு செய்கை என்றே எண்ணினேன். 

டெபி மூன்றாம் முறை கீழே விழுந்தபோது நன்றாக அடிபட்டிருந்தது. சற்று தொலைவில் இருக்கும் அஞ்சல் பெட்டிக்கு சென்றவர், அங்கிருந்த சிமெண்ட் தளத்தில் விழுந்துவிட்டார். இந்த முறை அவரை அருகில் குடியிருந்த கிழக்கு ஆசியக் குடும்பத்தின் ஆணும், அவருடைய மனைவியும் தூக்கி நிறுத்தியிருந்தனர். அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வந்தவரைக் கண்டு, அருகில் சென்றேன்.வா, உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இப்போது எனக்கு நிம்மதியாக இருக்கிறது!என்று சொல்லி என் கைகளைப் பற்றிக்கொண்டார். 

டெபியின் கை மணிக்கட்டுகள் தொய்ந்து இருப்பதைப் பார்த்தேன். உடனடியாக மருத்துவ உதவி எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினேன். அவர் வழக்கம் போலவே அதை மறுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். 

சில மணிநேரங்கள் கழித்து இரவில், “நான் நன்றாக இருக்கிறேன், கவலை வேண்டாம்.என்று குறுஞ்செய்தி வந்தது. அடுத்த நாள் வெள்ளிக் கிழமை, நான் வேலைக்குச் சென்று திரும்ப மாலையாகிவிட்டது. கீழே டெபியின் வீட்டுக் கதவு தொடர்ச்சியாக தட்டப்படும் ஓசை கேட்டது. அவருடைய மகள் வீட்டின் முன்  நின்றுகொண்டிருந்தார். பல முறை தட்டிய பிறகு கதவு திறக்கப்பட்டது. டெபியுடைய இரு கைகளிலும் எலும்புகள் முறிந்திருந்தன. தலையின் பின்புறமும் அடிபட்டிருந்தது. 

அவசர சிகிழ்ச்சைக்கு சொல்லப்பட்டு, ஐந்து நிமிடங்களில் விளக்கொளியும், சைரன் சப்தமுமாக மருத்துவ ஊர்தி வந்தது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே காவல் வாகனங்களும் வந்து சேர்ந்தன.  

நெடுநேரமாக அவருடைய வீட்டின் உள்ளே பேச்சுக் குரல்கள்  கேட்டுக்கொண்டிருந்தன. அவர் மருத்துவப் படுக்கையில் ஏற ஒத்துழைக்கவில்லை என்றே எண்ணினேன். டெபியுடைய மகள் அங்கு இருந்ததால், அருகில் செல்ல எனக்குத் தயக்கமாக இருந்தது. மேலிருந்து நடப்பவற்றை நிலைகொள்ளாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். 

ஒரு மணிநேர நாடகத்துக்குப் பிறகு, மருத்துவ வாகனத்தின் படுக்கையில் கிடத்தப்படு டெபி வெளியே அழைத்துவரப்பட்டார். வாகனத்தில் ஏறுவதற்கு முன் என்னிடம் பேச விரும்பினார்.  

இனியவளே, என்னுடைய காரில்தான் விசில்களும், மணியோசைகளும் இல்லை. இப்போது பார், எத்தனை ஆர்ப்பாட்டமான வண்டியில் செல்கிறேன்என்னை மறவாதே!என்று சொல்லிப் புன்னகைத்தார். டெபியின் முகம் பரிசுத்தமான தெளிவுடன் இருந்தது. அவருடைய சுருக்கங்களற்ற இளமைக்கால முகம், ஒரு கணம் எனக்குள் எழுந்து மறைந்தது. அவர் பேரழகி என்று தோன்றியது. 

மரத்தைக் கடந்து படிகளில் ஏறி, உப்பரிகையில் நின்றபடியே வாகனங்கள் அகலும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். சைரன் ஓசைகள் தொலைவில் சென்று அடங்கின. டெபியை சந்திப்பது அதுவே கடைசிமுறை என்று தெரிந்தது. அவரும் அதை உணர்ந்திருந்தார்.  

இலையுதிர்கால கேலரி பியர் மரம், பழுத்த வண்ணமயமான இலைகளைச் சிலிர்த்தவாறே, நிகழ்பவற்றை மௌனமாக உள்வாங்கிக்கொண்டிருந்தது. கிளைகளிடமிருந்து விடைபெற்று, தரையைத் தொடும் இலைகளின் அசைவை நெடுநேரம் பார்த்தவாறு நின்றிருந்தேன். உதிரும் ஒவ்வொரு இலையும் நான் அதுவரை அறிந்திராத உள அசைவுகளை எனக்குள் கிளர்த்தியது. ஆழந்த துயரமும், அசாத்தியமான அமைதியும் கொப்பளித்தது. 

வீட்டுக்குள் செல்வதற்கு முன், மரத்தின் அடியில் நின்றிருந்த டெபியின் கார் எதேச்சையாக என் கண்களில் பட்டது. அதன் பக்கவாட்டுக் கண்ணாடிகள் உள்நோக்கித் திரும்பியிருந்தன.

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

அமெரிக்கா, இரு வீடுகள்