கனவும் ஒரு இறப்புச் செய்தியும்
"Paramesh Anna Dead" என்ற செய்தியுடன் அலைபேசி ஒலித்து ஒளிர்ந்துகொண்டிருந்தது - அனுப்புநர் தம்பி அருள். விடிகாலை ஐந்தரை மணி என்ற எண்களின் பிண்ணனியிலிருந்த அந்தச் செய்தியை அலைபேசியின் முகப்பைத் திறக்காமலேயே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் ஒளி அடங்கி செய்தி மறைந்தது. அந்தச் செய்திக்கு முன் சில மணிநேரங்களாக உறக்கம் நீங்கிப் புரண்டுகொண்டுதானிருந்தேன். வழக்கமான ஒரு அன்றாடச் செய்தியையும் துக்கமான இந்தச் செய்தியையும் ஒரே தொனியில் அறிவிக்கும் அலைபேசியின்மேல் ஒரு வெறுப்பு எழுந்து அடங்கியது. "ராஜூ, நாஞ்செத்தா ஒன்னு ஹார்ட் அட்டாக்கு இல்லன்னா எவனாவது என்னை அடிச்சுக் கொல்லுவான்". பரமேஸ் அண்ணன் சுவற்றில் ஒரு தலைகாணியை முதுக்குக் கொடுத்து, வயிறு முன்னோக்கிப் பிதுங்கிய நிலையில் அடர்த்தியாக மூச்சுவிட்டுக்கொண்டு உதடுகளில் ஒரு கசந்த சிரிப்புடன் சொன்னார். சிவப்புக் கோடுபோட்ட டீ-சர்ட் அவருடைய கனத்த வடிவத்துக்கு வினோதமாக நெகிழ்ந்துகொடுத்துக்க...