மனம் என்னும் பசித்த வனமிருகம்

                                                 

இன்னொரு திங்கட்கிழமையினுள் வெறுமையோடு என்னைச் செலுத்திக்கொண்டு கணினியைத் திறந்தேன். அமீர் தகவல் பரிமாற்றச் செயலியில் "இருக்கிறாயா?" என்றொரு செய்தியை அரைமணி முன்னரே அனுப்பியிருந்தது சற்று அசாதாரணமாக இருந்தது. தன் பதிமூன்று வயது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த வாரம் ஒருநாள் நோய்மைகான விடுப்பில் இருந்தான். நான் "ஆம் அமீர்" என்று செய்தியை அனுப்பிவிட்டு அவன் செய்திக்காகக் காத்திருந்தேன், பதிலில்லை. பின் இன்றைய நாளுக்கான முன் நிர்ணயிக்கப்பட்ட கூட்டு அழைப்புகளில் என்னை ஆட்படுத்திக்கொண்டிருந்தேன். அதில் ஒரு அழைப்பில் என் போலந்து மேலாளர் ஆர்கா "அமீர் இன்னும் சில நாட்கள் விடுப்பிலிருப்பான், அவனுடைய வேலையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்" என்று அறிவித்தார்.

தன் மகனுடைய ஆரம்பகால வருடங்களில் சைனஸ் பிரச்சனை தீவிரமாக இருந்ததென்றும், பாகிஸ்தானாக இருந்தால் இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது என்றும் முன்பொருமுறை சொல்லிக்கொண்டிருந்தது நினைவிருந்தது. மனம் அமீரின் மகனின் உடல்நிலை குறித்த ஊகங்களில் தறிகெட்டு அலைந்தது. அவனுக்கு கொரொனா தொற்று தீவிரமாகி அவசர சகிழ்ச்சையில் இருப்பதாகவும், அவனை அழைத்து ஆறுதல் சொல்வதாகவும், அவன் மிகவும் பதறிக்கொண்டும் நெகிழ்ந்தும் என்னிடம் அந்தச் செய்தியைப் பகிர்வதாகவும் விதவிதமான கற்பனைகளில் ஆழ்ந்திருந்தேன். பின் இயல்பாக நீங்கி இன்றைய அன்றாட வேலைகளில் ஈடுபட்டேன்.

மாலை ஐந்தரை மணிக்கு அலைபேசி மிணுங்கி அமீர் சுல்தான் என்று சொன்னது. மிகவும் சோர்வான குரலில் தன் மகனுடைய சைனஸ் பிரச்சனை தீவிரமாகி மூளைக்குச் சென்றிருப்பதாகவும், MRI முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னதும் மனம் அதிர்ந்துகொண்டிருந்தது. "சைனஸ் பிரச்சனை இத்தனை தீவிரமாக இருக்குமா" என்று கேட்டேன். லட்சத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்சனை ஏற்படுமென்றும், இணையத்தில் வாசிக்கும் செய்திகள் மிகுந்த அச்சத்தைத் தருவதாகவும் சொன்னான். பெரும்பாலும் மூளையில் அறுவை சிகிழ்ச்சை செய்து கெட்டிப்போயிருக்கும் சளியை அகற்றவேண்டியிருக்கும் என்றான். மருத்துவர்கள் பின்மூளைக்கு சளி பரவியிருக்கக்கூடாது, இருந்தால், நிலமை இன்னும் சிக்கல் என்று சொல்கிறார்கள் என்றான்.

"யாரும் தன் மகனை இதுபோன்ற சூழலில் பார்க்கக்கூடாது என்று அல்லாவைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்" என்றான். வார இறுதியிலிருந்து இந்தச் சூழலில் இருப்பதால் அமீரின் தர்க்கம் செய்திகளை மிகத் தெளிவாக விளக்கும் ஆற்றலை அவனுக்கு அளித்திருந்தாக உணர்ந்தேன். "ஒன்றும் தவறாக நிகழாது, தைரியமாக இரு, கடவுள் இருக்கிறார்" என்று நான் கூறிய சம்பிரதாய வார்த்தைகளின் பயனின்மையை, அவற்றை என் உதடுகள் மனதின் தொடர்பின்றி உருவாக்கிகொண்டதை வெறுத்தேன். அவசரமாக அழைப்பைத் துண்டித்துகொண்டான். "மீண்டும் அழைக்கிறேன்" என்றொரு குறுஞ்செய்தி வந்திருந்தது. சாளரத்துக்கு வெளியே பிள்ளைகள் ஹாலோவீன் நாளுக்கான வண்ண உடைகளில் இனிப்புகளுக்காக உற்சாகமாக அலைந்துகொண்டிருந்தார்கள். என்றோ உடலில் ஏற்பட்ட ஒரு தீக்காயத்தின் உக்கிரமான சூட்டை மனம் உணர்ந்து, அந்த உணர்வுகளிலிருந்து அவசரமாக விலக எண்ணிப் போராடினேன். என் கண்களில் சில துளிகள் கண்ணீர் ஊறி மறைந்தது. 

காலையில் என் மனதில் அலையடித்த உணர்வுகளை மீட்டிப் பார்த்தேன். அமீரின் மகனுக்கு இருந்த நிலையை அவன் அறிவித்ததும் என் மனம் "ஆம், அதை எதிர்பார்த்தேன்" என்று சொல்லிக்கொண்டது, அதில் ஒரு கணநேர இன்பமும் இருந்தது. அமீரின் மேல் எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட காழ்ப்புகளும் இல்லை. நம்முடைய அகம் இத்தனை குரூரமானதா? ஏன் ஒரு அசாதாரணச் செய்தியை அது எதிர்பார்க்கிறது? நான் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணுவது வெறும் போலித்தனமான ஒரு வெளிப்பாடா? அது மிக உயர்ந்த மனிதன் என்று என்னை நானே போற்றிக்கொள்வதற்கான பாவனையா? என்னில் வெளிவந்த கண்ணீர் உணமையானது, ஆனால் நான் அடைந்த அந்த கணநேர இன்பத்தை எப்படிப் புரிந்துகொள்வது? நான் மிகவும் கீழ்த்தரமான மனிதனா? இலக்கியம், கவிதை என்று நான் ஆர்வமாக ஈடுபடும் செயல்களுக்கான அர்த்தங்கள் என்ன? ஒருவேளை மனம் ஆடும் விசித்திரமான ஆட்டங்களை தொகுத்துப்பார்த்துக்கொள்வதற்கான பயிற்சியை மட்டும் அவை அளிக்கின்றனவா?

ஆமீர் மீண்டும் அழைத்தான். மருத்துவர்கள் தெளிவாக எதையும் கூற முடியாது என்றும் அறுவை சிகிழ்ச்சைக்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்றும் சொல்வதைப் பகிர்ந்துகொண்டான். "தோழா, உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள். என் மகனுக்காகப் பிரார்த்தனை செய்வாயா" என்றான். "ஆம், நிச்சயம் செய்வேன்" என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சோடு அலைபேசியைத் துண்டித்தேன். "ஒரு மிடறு கசந்த மது" என்ற மூளையின் கட்டளையைத் தவிர்த்துவிட்டு சாளரக் கண்ணாடிகளில் தெரிந்த காட்சிகளில் நுழைந்தேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை