வெந்து தணிந்தது காடு

                                                 

எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஐந்து நெருப்பு' சிறுகதையின் உந்துதலால் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. 2020ம் ஆண்டு கொரொனா ஊரடங்கு சமயத்தில் ஜெயமோகன் தினமும் ஒரு சிறுகதை என மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தளத்தில் வெளிவரும் சிறுகதைகளை வந்த அன்றே தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். பல்வேறு தளங்களில் அமைந்த நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தார் (136 கதைகள் என்று நினைவு). ஐந்து நெருப்பு சிறுகதை வாசித்தவுடன் சினிமாவுக்கென்றே எழுதப்பட்ட ஒன்று எனும் எண்ணம் தோன்றியது. ஆனால் ஆழம் குறையாத, தெற்கு தமிழகத்தின் வரண்ட நிலத்தின் கதைமாந்தர்களை உயிர்ப்போடு கண்முன் நிறுத்தும் கதைகளில் இதுவும் ஒன்று. 

ஐந்து நெருப்பு சிறுகதையின் முடிவில் முத்துவீரன் மும்பை பயணிக்கிறான். இந்தப் புள்ளியிலிருந்து வெ.த.கா. திரைப்படம் தொடங்குகிறது. ஸ்ரீரீதரனும், முத்துவீரனும் சூழல் காரணமாக பிழைப்புத்தேடி மும்பை வருகிறார்கள், இரு வெவ்வேறு சூழல்களிலிருந்து மும்பை வந்தவர்கள். அவர்கள் வாழ்வு மும்பை வந்ததும் நிழலுலகத் தொடர்புகளால் அவர்களே எதிர்பாராத வேறு திசையில் பயணிக்கிறது. இந்தப் படத்தின் கதையே முத்துவீரனுக்கும், ஸ்ரீரீதரனுக்குமான ஊடாட்டத்தின் பிண்ணனியில்தான் நகர்கிறது. இந்த இருவரின் வாழ்வுகளின் இடையீடே படத்தின் மையம் என்றும் சொல்லலாம்.

மிகுந்த எதிர்பார்ப்போடு இந்தத் திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். தொடக்கக் காட்சியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் கண்களைத் திரையிலிருந்து விலக்க இயலாத அனுபவமாக இருந்தது. முதலில் தோன்றியது இது கௌதம் வாசுதேவ மேனனின் திரைப்படம் போலவே இல்லை எனும் எண்ணம்தான். கதைக்கான களமான மும்பையில் விளிம்பு நிலையில் வாழும் தூத்துக்குடி, திருநெல்வேலி மண்ணைச் சார்ந்த கதைமாந்தர்கள் எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் வெகு இயல்பாக திரையில் வெளிப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அலையும் கதைக்களமான மும்பையும், குறுகிய தெருக்களும் மிகத் தத்ரூபமாக அமைந்திருந்தது. ஒரு திரைப்படத்தின் கதைக்களம் பார்வையாளனில் ஏற்படுத்தும் தாக்கம் அதன் வெற்றியில் முக்கிய பங்குவகிப்பது என்றே எண்ணுகிறேன். கதையின் நம்பகத்தன்மையை ஆழமாக நிறுவுகிறது மும்பைக் காட்சிகள்.

கௌதம் மேனனின் திரைப்படங்களில் ஒருவித போலித்தனம் எப்போதும் இருக்கும் (சினிமாவுக்கே உரிய மிகை நாடகத்தன்மை சற்று தூக்கலாக என்று சொல்லலாம்). அந்தச் சாயல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். கௌதம் மேனனின் முத்திரையான காதல் காட்சிகளில் மட்டும் இந்த நாடகத்தன்மை சற்று துருத்திக்கொண்டு தெரிந்தது, ஆனால் படத்தின் நகர்வில் பெரிய தொய்வு தெரியவில்லை. அவருடைய வழக்கமான உயர் நடுத்தரவர்க்க நகர்புறக் கதைச்சூழலிலிருந்து விலகி, அவருக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு கதையைக் கையாண்டிருப்பதன் மூலம் இயக்குநராக ஒரு பெரிய நகர்வை நிகழ்த்தியிருக்கிறார். 

சிம்பு முத்துவீரனாக அசாத்திய நடிப்பை படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் உதடுகளின் மெல்லிய அசைவுகளோடு பேசும் வசனங்களாகட்டும், மனைவியைத் தேடுகையில் வெளிப்படுத்தும் கோபமாகட்டும், கார்ஜி பாயின் நெஞ்சில் துப்பாக்கியை வத்திருக்கையில் வெளிப்படுத்தும் உணர்வுகளாகட்டும், ஒளித்து வைத்திருக்கும் துப்பாக்கியயை சடுதியில் எடுத்து உபயோகித்து அதிர்ந்து உறைவதாகட்டும் அத்தனை முதிர்ச்சி, தேர்ந்த நடிகன் என்று காட்டியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்துக்கு ஒரு பெரிய பலம். 'எங்கு தொடங்கும் எங்கு முடியும் ஆற்றின் பயணம்' பாடல் அவரது இசையில் படம் முழுக்க நம்மைக் கட்டிப்போடுகிறது.

ஜெயமோகனின் கூர்ந்த வசனங்கள் படத்துக்கு அசாத்திய வலு சேர்க்கிறது. அவருடைய திரைக்கதையில் பார்வையாளனின் ஊகங்களுக்கான இடங்களை உருவாக்கி, படத்தின் இறுதியில் அந்த முடிச்சுகளை தெளிவாக அவிழ்த்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அவருடைய பங்கு என்பது திரைக்கதை, வசனம் தாண்டி படம் முழுக்கத் தெரிகிறது. கதாப்பத்திரங்களின் ஆடைத் தேர்விலிருந்து, மும்பைத் தெருக்களில் விளிம்பு நிலை மக்கள் புழங்கும் சிறு கடைகள் என்று அத்தனை விசயங்களிலும் அவருடைய முத்திரை தெரிகிறது. இலக்கியத்தில் மட்டுமல்ல, திரைக்கதையிலும் தான் ஒரு மேதை என்பதை நிரூபித்திருக்கிறார். அவர் எழுதிய புறப்பாடு நூலின் மும்பை அத்தியாயங்கள் எனக்கு நினைவில் வந்துகொண்டிருந்தது. 

சராசரி மனிதன் எண்ணியே பார்க்க இயலாத இக்கட்டான வாழ்க்கைச் சூழலிலும் சில மனிதர்கள் அவர்களுக்கேயான விருப்பு வெறுப்புகளோடு வாழ்கிறார்கள். அந்தச் சூழலின் பிண்னனியில் காத்திரமான ஒரு திரைப்படமாக வெளிப்படுகிறது வெ.த.கா. ஒரு சராசரி மனிதன் ஆயுதத்தைத் தொடுவதற்கு அவனை மீறிய காரணிகள் உள்ளன. முத்துவீரனின் வாழ்வில் அடுத்த நகர்வுகளுக்கான ஊகங்களோடு திரைப்படம் நிறைகிறது. கௌதம் மேனன் ஜெயமோகன் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பைத் தருகிறார்கள். படத்தின் அடுத்த பாகத்துக்காக ஆவலாகக் காத்திருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை