பேராசிரியரின் கிளி, சிறுகதை - சொல்வனம்
சொல்வனம் இணைய இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் 'பேராசிரியரின் கிளி' எனும் கதை வெளிவந்துள்ளது. அவருக்கு கடிதமாக எழுதிய பகுதி இங்கு,
அன்புள்ள ஜெகதீஷ்,
சிறுகதையை வாசித்துவிட்டேன், பிடித்திருந்தது. வியத்தகு திறன்கொண்ட ஒரு பேராசிரியருக்கும் மாணவிக்குமான உறவில், அவர்களுக்கிடையே நிகழும் கூரிய உணர்வுப் பாய்ச்சல்களைக் கதை அலசியிருக்கிறது. ஸ்ருதி சாதனை உணர்வுகொண்ட ஒரு பெண்ணாக கதையை ஒட்டுமொத்தமாகத் தாங்கியிருக்கிறாள். அவளுடைய இயல்பு முதல் பத்தியிலேயே சொல்லப்படுகிறது. அவளுடைய கதாப்பாத்திரத்தை வாசகனாக என்னால் நன்றாக விரித்துக்கொள்ள முடிந்தது - இப்படிச் சொல்லலாம், மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. பேராசிரியருக்கும் ஸ்ருதிக்குமான கடந்தகால உறவின் ஒரு நிகழ்வு, அதுதரும் புழுக்கம் கதையில் அது வெளிப்படும்வரை நன்றாகக் கூடிக்கொண்டே இருந்தது.
இத்தனை சாதனை நிகழ்த்திய ஒரு பெண் தன் பேராசிரியரின் ஊக்கத்துக்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறாள். அவளுடைய அக ஓட்டத்தில் 'நான் உன்னைவிடச் சாதித்துவிட்டவள்' என்ற ஒரு உணர்வு வெளிப்படுகிறது. அந்த அகந்தைக்கான ஊற்றுமுகம் அவளுடைய கழிவிரக்கமே என்று தோன்றியது. ஆனாலும் பேராசிரியர் தன்னை உதாசீனப்படுத்துவதால் உருவான ஏமாற்றம் அவளிடம் ஒரு நெகிழ்வாக கண்ணீராக வெளிவந்தது மிக உருக்கமாக இருந்தது. பேராசிரியர் கிளியை 'சீதா' என்றழைக்கிறார், இந்தப் பெயர் தற்செயலா அல்லது ஸ்ருதி சீதைபோன்ற பெண் என்பதற்கான குறிப்புணர்த்தலா என்பது தெரியவில்லை, வெறுமனே ஊகிக்கிறேன்.
கதையில் கிளி முக்கிய பாத்திரமாக வருகிறது, கிளி குறித்த தகவல்களும் வர்ணனைகளும் கச்சிதம் ('கிளியின் அலகை யானைத்தந்தத்துடன் ஒப்பிட்டிருந்தது அருமை). கதையின் மைய ஓட்டத்துக்கான ஊடகமாக கிளியை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஸ்ருதி பேராசிரியரின் உடையை அணிந்துகொண்டு அவரிடம் பேசும் பகுதி கதையின் உச்சம். பேராசிரியர் ஏன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை உணர்த்த அவருடைய நைந்த நாற்காலியை விவரித்திருந்ததும் மிகக் கூர்மை. கதையில் சூழல் வர்ணனைகளும், தகவல்களும் அந்தப் பேராசிரியரின் வீட்டை, அந்த உணவுமேசையின் பிண்ணனியை அழகாகக் கடத்தியிருந்தது. இங்கு கிளி இடியெட் என்றழைப்பது பேராசிரியருக்கு மட்டுமான பதமல்ல, ஒருவகையில் அது ஸ்ருதிக்கும் பொருந்துவதுதான். ஒருவர் காமத்தால், குடியால் இடியெட்டாகிறார் - ஸ்ருதி அகந்தையால், எதிர்பார்ப்பால், தான் அளித்துவிட்ட ஒன்றுக்குப் பிரதிபலனாக எதையும் திரும்பப் பெறாத ஏமாற்றத்தால் இடியெட்டாகிறாள்.
கடைசிப் பத்தியில் பேராசிரியரின் பிம்பத்தை விவரிக்கப் பயன்படுத்திய 'மிகுந்த பலகீனமான மனிதராக, வாழ்வால் கைவிடப்பட்டவராக' என்ற பதம் தேய்வழக்காகத் தெரிகிறது. இது ஸ்ருதியை பேராசிரியரைவிட உயர்ந்த ஜீவனாக வாசகனில் முன்னிருத்தும் ஒரு ஆசிரியரின் குரலாக எனக்குப்படுகிறது. அவருடைய பிம்பம் கதையில் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது, இந்த வரையறைகள் அதை மீண்டும் ஒருமுறை சொல்கின்றன, அதற்குமேல் எதையும் அளிப்பதில்லை. ஸ்ருதி காணும் அவருடைய தோற்றத்தை நீங்கள் இன்னும் குறிப்புணர்த்தும்விதமாக, கவித்துவமாக எழுதியிருக்கலாம் என்றே எண்ணுகிறேன். கதையின் கடைசிப் பத்தி என்பதால் இதைச் சொல்ல விரும்புகிறேன்.
இந்தக் கதையை நான் மிகவும் விரும்பி வாசித்தேன். உங்களுடைய வழக்கமான ஒழுக்கான நடை, சித்தரிப்புகள், தகவல்கள், இயல்பான கதைசொல்லல் என மீண்டும் மிளிர்ந்திருக்கிறீர்கள். கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்களின் சாதனைத் தொடர்ச்சிகளுக்கு 'in the zone' என்ற பதத்தைப் பயன்படுத்துவார்கள், உங்களுக்கும் இது பொருந்தும். விதவிதமான் கதைகள், பாத்திரங்கள் உங்களிடமிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன, அது தொடரட்டும், 'be in the zone'. எனக்கு சற்றுப் பொறாமையாகவும் இருக்கிறது, இந்தவகை மனக்குவிப்புகளை எழுதுவதற்கு என்றில்லை, வாசிப்பதற்கு அமைந்தாலே நான் மகிழ்ந்துவிடுவேன். மனமார்ந்த வாழ்த்துகள் ஜெகதீஷ்.
அன்புடன்,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment