கவிதைகள் இதழ் - ரமேஷ் பிரேதன்

                                             

கவிதைகள் மாத இதழில் அக்டோபர் வெளியீட்டில் ரமேஷ் பிரேதனின் இரண்டு கவிதைகளுக்கு குறிப்புகள் எழுதியிருந்தேன். அதன் பிரதி இங்கு,

டாம் & ஜெர்ரிரமேஷ் பிரேதன்

அரசியல் கவிதைகள் இறுக்கம், கொந்தளிப்பு என சில பண்புகளைத் தன்னுள் பரவலாகக் கொண்டிருப்பவை. கவிஞனின் உணர்வுகள், அறச்சீற்றம் என அதற்கான காரணிகள் அமைகின்றன. பாரதி, ஆத்மாநாம், இளங்கோ கிருஷ்ணன் என சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த வரையறைக்கு வெளியே கவிஞர் ஞானக்கூத்தன் பகடி கலந்த அரசியல் கவிதைகளை எழுதியிருக்கிறார் (எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதைப்பிறர் மேல் விடமாட்டேன்). ரமேஷ் பிரேதனின் இந்தக் கவிதையும் பகடியையே தன் கூறல்முறையாகக் கொண்டுள்ளது. கவிதையின் வரிகளை ஒரு சிறு புன்னகை இல்லாமல் கடக்க முடிவதில்லை.

பகடி மட்டுமல்லாமல் கோட், எலி என்று மிகச் சிறந்த படிமங்களும் கவிதைக்குள் ஊடாடுகின்றன. மேற்குலக அதிகாரங்களின் ஒட்டுமொத்தப் பிம்பமாக கோட் அமைகிறது. நூற்றாண்டுகளாக அதிபர்களிடம் அது கடத்தப்படுகிறது, அவர்களை அறியாமலேயே கோட்டில் எலிகளைச் சுமந்துகொண்டு அலைகிறார்கள், பரவவிடுகிறார்கள். பிறகு நடப்பவையெல்லாம் ஒருவகை டாம் & ஜெர்ரி விளையாட்டுதான்.

"அணு ஆயுதங்கள் குவித்துவைக்கப்பட்டிருப்பதாகச்

சொல்லப்பட்ட

ஒரு பாலைவன நாட்டைச் சுற்றி வளைத்துக்

கைப்பற்றியது உலகமகா வல்லரசுப் படை

தரைமட்டமான நகரங்கள் கட்டியெழுப்பப்படவும்

எரியும் எண்ணெய் வயல்கள் சீரமைக்கப்படவும்

இறந்தவர்களுக்குக் கல்லறை கட்டவும்

பன்னாட்டு நிறுவனங்கள் வந்து குவிந்தன

எல்லா இடங்களிலும் வல்லரசின் இரும்புப்பார்வை

உலக நாடுகள் நிசப்தத்தில் உறைந்தன

வல்லரசின் அதிபர் பிடிபட்ட நாட்டைப்

பார்வையிடப் பலத்தப் பாதுகாப்போடு

பாலைவனத்தில் வந்து இறங்கினார்

தனது ராணுவத் தளத்தில் உலக அமைதி குறித்தும்

தீவிரவாதப் பேரழிவு குறித்தும் உரையாற்ற

உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு

அதிபரின் மிடுக்கு வெற்றிப்புன்னகை

ராணுவத்தினரை உணர்ச்சியின் விளிம்பில் நிறுத்தும்

தியாகத்தின் வர்ணனை

உலகமே வாய்ப்பொத்தித் தொலைக்காட்சிப் பெட்டிமுன்

அதிபர் எத்தேச்சையாகத் தனது கோட்டுப் பாக்கெட்டில்

கையைவிட அவர் முகத்தில் சிறு மாறுதல்

பையிலிருந்து கைவழியே சடசடவென மேலேறி

முகத்தில் சாடியது குட்டிச் சுண்டெலி

அதிபர் அய்யோஎன்று பதறினார்

ராணுவம் பதறி எழுந்து பாதுகாக்க வேண்டி

அதிபரைச் சூழ்ந்தது

சுண்டெலி துள்ளிக்குதித்துக் கூட்டத்துக்குள் ஓட

அதிபரின் பதறிப் பயந்த முகத்திருந்து

விடுபட்ட காட்சி

சுண்டெலியைப் பதிவுபடுத்தி ஓடியது

உலகம் முழுதும் தொலைக்காட்சிமுன் அமர்ந்திருந்த

குழந்தைகள் ஜெர்ரி எனச் சுண்டெலியைப் பார்த்துக்

குதூகலத்தோடு கத்த

டாம் கோட்டுப்பைக்குள் கையைவிடவே பயந்து

நடுங்கிக்கொண்டிருந்த படப்பதிவு

அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு

விளம்பரப்படம் ஓடியது."

……….

நடக்கக்கூடிய தூரம்

இங்கு எல்லாமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அல்லது நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்தலின், நிகழ்த்தப்படுதலின் மையமாகவே பெண் இருக்கிறாள்.

எளிய நிகழ்வுகளின் சித்திரங்களாக, ஒரு பெண்ணின் சிறு பயணத்தைக் காட்சிப்படுத்தும் இந்தக் கவிதையில், காப்பியங்களின் கதைமாந்தர்கள் வந்தமர்ந்ததும் நிகழ்காலமும் கடந்தகாலமும் தம் எல்லைகளைக் கலைத்துக்கொள்கின்றன. கவிதையின் எடை கூடி பூடகமான ஒரு தளத்துக்கு நகர்ந்துவிடுகிறது. காட்சி மற்றும் அர்த்த வரையறைகள் கடந்து இந்தக் கவிதை நம்மிடம் கவிதை அனுபவமாகவே எஞ்சுகிறது, அதுவே இதை சிறந்த ஒரு கவிதையாகவும் மாற்றுகிறது.

"நடக்கக்கூடிய தூரம்தான்

அதற்குள் ஏதேனும் நிகழலாம்

பாதிவழியிலேயே திரும்பிவந்துவிடவும் நேரலாம்

வழியில் உனக்காக ஒரு கொலை காத்துக்கிடக்கலாம்

அல்லது ஒரு பரதேசி மரத்தடியில் செத்துக்கொண்டிருக்கலாம்

புணர்ந்து பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் இரண்டு

செம்பருத்திப் பூக்களைப் போல

உன் கூந்தலில் தொத்திக்கொள்ளலாம்

நடக்கக்கூடிய தூரம்தான்

அதற்குள் ஏதேனும் நிகழலாம்

பலூன் விற்பவன் குறிசொல்லும் கிழவி

பாத்திரங்களுக்கு ஈயம்பூசுபவன்

சைக்கிளில் கட்டிச் செல்லும் புடவை வியாபாரி

ஆடு மேய்க்கும் சிறுமி

பக்கத்து நாட்டில் குண்டுவீச உனது

பக்கத்து ஊரில் பெட்ரோல் நிரப்ப

தரையிறங்கும் விமானம் என

எதேனும் வழியில் எதிர்ப்படலாம்

கண்ணகி மாதவி மணிமேகலை

காப்பியங்களிருந்து வெளியேறி

தமது வேடங்களைக் கலைத்தபடி

புளியமரத்தடியில் வெற்றிலை மென்றுகொண்டிருக்கலாம்

உன் இடுப்பில் ஏறிக்கொள்ள அழும் குழந்தைபோல

உன்னைக் கைப்பிடித்து வரும் உனது நிழல் மீது

ஒற்றை மாட்டுவண்டியின் இடது சக்கரம் உருளலாம்

மாராப்பைச் சரிசெய்தபடி நடக்கக்கூடிய தூரந்தான்

வழியில் உனக்காக ஒரு ஆறு காத்துக்கிடக்கலாம்."

……….

'மார்கழி பாவியம்' தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்ட இரு கவிதைகள் (யாவரும் பப்ளிசர்ஸ்).

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை