நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

                                                

சமையல்கட்டு காரைச் சுவரின் பிளவினுள் வெள்ளந்தியாக நுழைந்த புழக்கடை மருதாணிச் செடியின் கிளை அன்னம்மாளிடம் எதையோ சொல்வது போல அசைந்துகொடுத்தது. இரவுப் பூச்சிகள் சூரியனுக்கு வழியனுப்பச் சப்தமிட்டன. சமையல்கட்டை ஒட்டிய திறந்த முற்றத்தில், மச்சின் சிதைந்த கைப்பிடிச் சுவர் தன் கம்பிக்கூட்டு உடலைத் தரையில் நிழலாகப் பதித்தது. கட்டுச் சோற்றுக்காக உலையில் கொதித்துக்கொண்டிருந்த அரிசியைக் கரண்டியில் எடுத்து அழுத்திப் பார்த்து, இறுகிய பதம் இருக்கையிலேயே கஞ்சியை வடித்தாள். பொம்னாபாடியாருக்காக கஞ்சியில் உப்பு சேர்க்காமல் பூண்டு, சீரகம், வெந்தயம் இட்டு மென்சூட்டில் கொதிக்கவைத்தாள். 

முன்பெல்லாம் சமையல்கட்டுச் சுவரின் விரிசல்களை களிமண்ணும் சுண்ணமும் வைத்து அடைப்பதும், அதை மீறிப் புகுந்து தலைகாட்டும் செடிகளின் கிளைகளை ஒடிப்பதுமாக இருந்த அன்னம்மாள் இப்போது அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. சில வருடங்களுக்கு முன் ஒரு மார்கழி மாதம் சமையல்கட்டை ஒட்டிய சேமிப்பறைக்குள் ஒட்டடையும் தூசியுமாகக் கிடந்த தானியக் குதிர்களின் கதகதப்பில் ஒண்டிக் கிடந்த ஐந்தடி சாரைப் பாம்பைப் பார்த்து உடல் சிலிர்த்த தருணம் நேற்று நிகழ்ந்தது போல அவள் நினைவைக் கீறியது. 

பங்களா வீட்டின் மொத்தப் பொருட்களும் பட்டாசாலையில் பழைய சீலைகளாலும் வேஷ்டிகளாலும் மூடப்பட்டு காத்திருந்தது.செந்தில்வேலன் வந்துட்டானா, மணி அதுக்குள்ள ஆறாயிருச்சு, வெளக்கேத்தனும்!என்று சொல்லியவாறே தண்ணீர் காயவைக்கும் கரி அண்டாவை துணியால் அவசரமாகச் சுற்றினாள். அருகில் யாரும் இல்லை, தனக்குத்தானே சொல்லிக்கொண்டாளா! வீட்டின் முன் அறையில் படுக்கையில் கிடக்கும் பொம்னாபாடியாருக்காக அதைச் சொல்லியிருக்கலாம். 

அன்னம்மாளுக்கு ஊரின் வழியே துறையூர் போகும் பேருந்துகளின் வருகையே நேரத்தை அளக்கும் கருவி. காலை ஐந்து மணிக்கு செந்தில்வேலன், ஒன்பதரைக்கு டவுன் வண்டி, பன்னிரண்டுக்கு பெரம்பலூர் செல்லும் கிருஷ்ணா, மாலை ஆறு மணிக்கு மீண்டும் செந்தில்வேலன், கடைசியாக ஊரணைகையில் சொற்ப பயணிகளோடு இருளைத் துளாவி ஊரைக் கடக்கும் டவுன் வண்டி. பல வருடங்களாக மாறாமல் இயங்கும் இந்த வரிசை அன்னம்மாளுக்கு மட்டுமல்ல, ஊரார் அனைவரின் பிரக்ஞையிலும் ஊடுருவிப் பதிந்த ஒன்று. 

நாளையிலிருந்து இந்தப் பேருந்துகளின் நிரை தனக்கு எப்படிப் பொருள்படும் என்று அன்னம்மாளுக்குப் புரியவில்லை. தீவு போலக் குவிந்து கிடந்த பொருட்களில் மனம் கூர்ந்தது. 

நீயும் ஐயாவும் இங்க வந்திருங்கம்மா. மெஸ் இப்ப நல்லாப் போவுது, ஆஸ்பத்திரியும் இவுத்தினயே இருக்கு, ஐயாவப் பாத்துக்கலாம். ஓங்கைப்பக்குவம் ஆபீசர்ங்களுக்கு ரொம்பப் புடிச்சுப் போவும். கொஞ்ச நாள்ள மீண்டரலாம்!”. 

கரூர் தாந்தோணிமலைப் பகுதியில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை ஒட்டி உணவகம் தொடங்கிருந்த மகன் மகேஸ்வரன் அன்னம்மாளிடம் பல விதமாக மன்றாடிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறை மகேஸ்வரன் கோரிக்கை விடுக்கையிலும் ஓட்டுக்குள் குறுகும் நத்தை போல அன்னம்மாள் மௌனத்துக்குள் நுழைந்தாள். 

அன்னம்மாளின் சமையலை ருசித்தவர்கள் வியக்காமல் இருந்ததில்லை. அரிசி வற்றல், தயிர், நார்த்தங்காய் ஊறுகாய் என உணவின் உபபொருட்கள்கூட அவள் தொடுகையில் தனிச்சுவையைப் பெற்றுவிடும். விபரம் தெரிந்த நாளிலிருந்தே நான்கு தங்கைகளுக்கும் தன் அன்னையுடன் இணைந்து சமைத்தவள். சமையலில் இருக்கையில் அவளில் இயங்குவது கண்ணுக்குப் புலப்படாத ஒரு விசை. பங்களா வீட்டின் கழனித் தண்ணீர்ச் சுவைக்குப் பழகிய பட்டியின் மாடுகள், கால்மாற்றிக் காத்துக்கிடந்தன. 

தெருவில் விளையாடும் சிறுபிள்ளைகளைக்கூட அழைத்து கைகளில் பொரிவிளங்காய் உருண்டையோ, தேங்காய் பத்தையுடன் ஒரு விள்ளை கருப்பட்டியோ வெல்லமோ கொடுக்காமல் இருந்ததில்லை. 

எப்படி ஒடம்பும் மனசுமாப் பின்னிக் கெடக்குற இந்த வீட்ட விட்டுப் போறது! இந்த ஊரு, வீட்டச் சுத்திக் கோயிலு, பூசைக்கு ஒலிக்கிற எதமான மணியோச, சமையக்கட்டோட கரி பூசின சொவரு, மச்சில இருந்து தெரியும் பச்சைமலைக் குன்று, வீட்டுச் சுவத்த ஒரசுர தென்னை மரங்க, ரோட்ல போற வண்டிங்க கெளப்புர புழுதி வாசம், மழக் காலத்தில அப்படியே ஒண்டிக்கலாம்னு தோனும் குளிரு, சாயங்காலம் கூட்டுக்கு திரும்பற பறவக் கொரலுங்க, சிவன் கோவில் தேர்முட்டி, அன்றாடம் பேச்சுத் தொணைக்கு வர்ர குச்சாயி, இத்தனையையும் விட்டுட்டு பழக்கமில்லாத எடத்துக்கு போறதா!’, அன்னம்மாளால் எண்ணிப்பார்க்கவும் இயலவில்லை, மனம் முழுக்க ஆழ்ந்த இருள் கவிந்தது. 

தவித்துக்கொண்டிந்தவள் அரைமனதாகச் சம்மதித்தாள். வேறு வழியுமில்லை. பொம்னாபாடியார் படுக்கை வசமாக முன் அறையில் தஞ்சமடைந்துவிட்டார். பார்வை மங்கிவிட்டது. நடமாடுவதும் நின்றுவிட்டது. நாகலாபுரத்திலிருந்து வரும் செவிலி வாரம் இருமுறை முதுகில் படுக்கைப் புண்களைத் தூய்மைசெய்து மருந்துசேர்த்துவிட்டுப் போகிறாள். மகேஸ்வரன் அனுப்பும் பணம் மூன்றுவேளை உணவுக்குத் தோது. பொம்னாபாடியாரும் அன்னம்மாளும் ஊராரின் மனதில் கடந்த கால நினைவுகளாகத் தொய்ந்து போனார்கள். 

இரவுகளில், “தாயி, கொஞ்சம் மீந்த சோறு இருந்தாப் போடுங்க தாயி...என்று பங்களா விட்டு வாசலில் ஒலித்துக்கொண்டிருந்த பரிச்சயமான கீழைத்தெரு ஜீவன்களின் குரல் கூட இப்போது முற்றிலும் ஒடுங்கிவிட்டது. 

கரூர் செல்வதாக முடிவான சில நாட்களாகவே வீட்டில் பொருட்களைத் தீண்டியவாறே  இருப்பது அன்னம்மாளுக்கு பெரும் ஆசுவாசம். எதையாவது தொட்டு அசைத்துக்கொண்டிருப்பது மனதின் கனத்த எண்ணங்களை விட்டு சற்றேனும் விலகி இருக்க அவள் கண்டுகொண்ட உக்தி. முற்றத்து செம்பருத்திச் செடியின் பூக்கள், சுவரில் நகரும் மரப் பல்லி, தண்ணீர் தொட்டியின் அதங்கிய ஈயக் குவளை, எண்ணெய்ப் பிசுக்கு விரவிய விளக்கேற்றும் மாடக் குழி என கண்களில் படுபவற்றின் மீதெல்லாம் எல்லையில்லாமல் வாஞ்சை ஊறியது.  

நாங்கெளம்பீருவேன், அப்பறம் என்னா பண்ணுவீங்களோ!என அவற்றுடன் பேசவும் தொடங்கிவிட்டாள். 

பொம்னாபாடியாரின் கசங்கிய வேஷ்டியால் மூடப்பட்டிருந்த பழைய ஊசல் கடிகாரம் துடிக்கும் ஓசை பட்டாசாலை முழுக்க சீராக எதிரொலித்துக்கொண்டிருந்தது.  

கடிகாரத்த அணைச்சரலாமா!அன்னம்மாளுக்கு அதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. ஆண்டுகளாக சுவரில் ஊசலாடியபடி மணிக்கொருமுறை ஒலித்த கடிகாரம் அதன் போக்கில் சீராகத் துடித்துக்கொண்டிருந்தது. இத்தனை அருகில் அந்தக் கடிகாரத்தை அவள் பார்த்ததில்லை. அதன் ஓசை பெருகி வீட்டையே மூழ்கடித்துவிடுமோ என்றொரு வினோத எண்ணமும், தானும் பொம்னாபாடியாரும் அதில் மூழ்கிக் கரைவது போல கற்பனையும் எழுந்தது. அவளுக்குள் கடிகாரத்தின் மீது மாளாக் கோபமும், ‘உயிரற்ற ஜடப்பொருள் என்ன செய்யும்!என்று குறுக்கிடும் நிதானமும் இணைந்த மனதின் ஊடுபாவு. 

பங்களா வீடு என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டுக்குள் அன்னம்மாள் பதினைந்து வயதுப் பெண்ணாக பொம்னாபாடியாருக்கு மறு தாரமாக நுழைந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஐந்து பெண்களில் மூத்தவளாக சிறிய ஓட்டு வீட்டிற்குள் வளர்ந்த அன்னம்மாளுக்கு ஊரின் மைய சாலையிலிருந்து ஐந்தடி உயரத்தில் நின்ற வீடு அரண்மனை போலத் தெரிந்தது. பரந்து கிடந்த பட்டாசாலையின் உத்தரத்தில் சீரான வரிசையில் ஓடிய தேக்கு மரச் சட்டகங்களும், அரக்கு நிறம் பூசப்பட்டு பூவேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும், குளிர்ந்த முகப்புக் கருங்கல் திண்ணையும், நான்கு பெரிய அறைகளோடு இருந்த சிறிய பூஜை அறையும், சமையல்கட்டை ஒட்டிய வானம் பார்த்த முற்றமும், சேமிப்பறையும், கைச்சுவர்கள் சூழ்ந்த அகன்ற மேல்தளமும், மச்சுப் படிகளுக்கு கீழ் இருந்த நீராட்டறையும் என பச்சையும் மஞ்சளும் சிவப்புமாக வண்ண ஓவியம் போல பொலிவுடன் தோற்றமளித்த வீடு தற்போது நிறங்களோடு வடிவமும் குலைந்து நிற்கிறது. 

திருமணமாகி பங்களா வீட்டுக்கு வந்த நாட்களில் பொம்னாபாடியார், “அன்னம், இந்த வீட்டோட ஒவ்வொரு செங்கல்லையும் நாம் பாத்திருக்கேன். களிமண்ணோட சேக்கறதுக்கு சுண்ணாம்பு, வெல்லம்னு சாமான் வாங்கறதுக்கு எங்க ஐயாவோட கட்ட வண்டியக் கட்டிக்கிட்டு செட்டிகுளம் சந்தைக்குப் போயிருக்கேன். உத்தரத்தில வரிவரியா ஓடுதே அது பர்மா தேக்கு. ஊர்ல இருக்கறதிலயே பெரிய பட்டாசாலையாப் போடனும்னு எங்க ஐயா சொல்லுவாங்க!என்று பாந்தமாகச் சொல்வார். பெருமிதம் மின்னும் அந்தக் கண்களைப் பார்த்துப் பழகிய அன்னம்மாள், இன்று ஜீவன் அவிந்து கிடக்கும் அதே கண்களில் பீழையைத் துடைத்துக்கொண்டிருக்கிறாள். 

ஓடி விளையாடிய நான்கு பிள்ளைகளின் பாதங்களும் பதிந்து வழுவழுப்பாகக் கிடந்த பட்டாசாலை, துடைக்கத் தண்ணீர் தெளித்தால் வானத்தைப் பிரதிபலிக்கும் காட்டுச் சுனை போல தேக்கு விரவிய உத்தரத்தைத் துல்லியமாகக் காட்டும்; இப்போது அந்தத் தரை பொம்னாபாடியாரின் முதுகாய்ச் சொரசொரத்துக் கிடக்கிறது. 

எங்கு தொடங்கியது? எப்படி நிகழ்ந்தது? யார் காரணம்? வாழ்வு நூதனமாக வீட்டின் இந்தச் சிதைவை நிகழ்த்திவிட்டது. கண்முன், ஆம் எல்லாமே அன்னம்மாளின் கண்முன்தான் நிகழ்ந்தது. பொம்னாபாடியாரோ அன்னம்மாளோ வாழ்வின் கணக்குகளைப் புரிந்துகொண்டு தகைந்துகொடுத்த உறவுகளையும் சுற்றத்தாரையும் போல கருத்தாக இருக்கப் பழகவில்லை.  

துறையூரில் உரக்கடை வேலைக்குச் செல்லும் மூத்தவன் ராமநாதனும், ஊருக்குள் சுற்றித் திரிந்த இரண்டாமவன் பரமசிவனும் ஒன்றாக வந்து திண்ணையில் அமர்ந்திருந்த பொம்னாபாடியாரிடம், “காட்டப் பிரிச்சுக் குடுங்கய்யா, நாங்களும் தலையெடுக்கனும்ல!என்று உறுதியான குரலில் சொன்ன அன்று பங்களா வீட்டின் மீது முதல் கீறல் விழுந்தது.  

அன்றிலிருந்து பங்களா வீட்டில் ஒட்டடைகளின் சாம்ராஜ்யம் தொடங்கியது. வீட்டில் அடைந்த ஒட்டடையுடன் அன்னம்மாள் ஆவேசமாகப் போராடித் தோற்றுக்கொண்டிருந்தாள். 

மகள் விஜயாவைக் கட்டிக்கொடுக்க வாங்கிய கடன் கரைய மறுத்தது. மகேஸ்வரனுக்கு நாற்பது நெருங்குகிறது. பள்ளிப் படிப்பை முடிக்காதவனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. ஜாதகம் பொருத்திப் பார்த்துச் சலித்த சிவன் கோவில் பட்டர், “வேற ஜனத்துல பாக்கட்டுமா, ரெண்டாந்தாரமா இருந்தாப் பரவால்லையாம்மா!என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார்.  

ஊரார் பங்களா வீட்டின் சிதைவை மௌனமாக உள்வாங்கிக்கொண்டார்கள். அவர்களை ஒதுக்கிவிடவேண்டும் என்பது நோக்கமல்ல, பொம்னாபாடியாரும் அன்னம்மாளும் இப்போது இருக்கும் நிலையைக் காண்பதில் உள்ள குரூரத்தின் மீதான அச்சம், அதனால் வரும் விலக்கம். 

அன்னம்மாள் முதல் தாரத்துக் குழந்தைகள் என்று பாராமல் ராமநாதனையும், பரமசிவனையும் தன் குழந்தைகளோடு விட்டுக்கொடுக்காமல் வளர்த்தாள். வாசனையான கொத்துமல்லித் துவையலை சுடுசோற்றில் நல்லெண்ணய் விட்டு மையப் பிசைந்து, குண்டானின் கடைசிப் பருக்கை தீரும்வரை கைகடுக்க ஊட்டியவளுக்கு, மூத்தவனின் நெடிந்த உடலைத் தேற்ற சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவித்து நெய்யும், வெல்லமும் சேர்த்து உருண்டையாக உருட்டித் திணித்தவளுக்கு, பொம்னாபாடியாரிடம் தன் பிள்ளைகளுக்கு தனியாக என்ன கேட்கவேண்டும் என்பது சரியாகத் துலங்கவில்லை. 

மூத்தவனுக்கும் இளையவனுக்கும் களத்தூர் சாலையில் பெரிய கிணற்றுடன் இருந்த இருபது ஏக்கர் காட்டை சரிபாகமாகப் பிரித்து எழுதிக்கொடுத்து, இருவருக்கும் அதே வீட்டில் திருமணத்தையும் முடித்துவைத்தார்கள். எஞ்சியது பங்களா வீடும், ஊருக்குள் இருந்த ஓடுவேயந்த மாட்டுப்பட்டியும், ஐந்து ஏக்கர் நிலமும்தான்.  

எஞ்சிய நிலத்தில் பயிரிட்ட மிளகாயும், கடலையும், சின்ன வெங்காயமும் சரியான விலைக்குப் போகவில்லை. மழை பொய்த்து கிணற்று நீரும் வறண்டது. குதிருக்குள் நீட்டிய இடத்தில் கைபடும் தானியங்களும் கீழறிங்கிக்கொண்டிருந்தன. மூத்த மகன்களிடம் தயவுகேட்க பொம்னாபாடியாருடைய மனம் ஒப்பவில்லை. எண்ணிய விளைச்சல் இல்லையென்றாலும் காலை ஐந்து மணிக்கு மாடுகளுடன் காட்டுக்குச் சென்று முன்மாலை திரும்பிக்கொண்டிருந்தவருக்கு உடலோ மனமோ பிடிப்பைத் தளர்த்தியது. விளைச்சலை வாரக்காரனுக்கு விட்டவருக்கு சிவன் கோவில் திண்ணையும் தாயவிளையாட்டும் தஞ்சம் அளித்தது. 

மகேஸ்வரனுக்கு படிப்பு ஏறவில்லை. எட்டாவதோடு நிறுத்திக்கொண்டான். ஊரில் இளைஞர்களுக்கு கனவாக இருந்த பேருந்து நடத்துனர் வேலைக்குப் போனவனை சில மாதங்களில் அனுப்பிவிட்டார்கள். அவனால் ஓட்டம் முடிந்து அன்றைய நாளின் கணக்குகளை சரியாக முடித்துக்கொடுக்கமுடியவில்லை. மளிகைக்கடை வைத்துக்கொடுத்தார்கள். கறாராகக் கடனில்லாமல் வியாபரம் நடத்த திராணி போதவில்லை.  

கரூரில் நெசவாலைகளுக்கு வேலைக்குச் சென்றவர்களின் தொடர்பில் அங்கு நகர்ந்தான். சில வருடங்கள் ஒரு உணவகத்தில் வேலைக்கு இருந்தவன் தனியாகத் தொடங்கினான். 

அன்னம்மாளுக்கு குச்சாயியின் நினைவு வந்தது, அவள் வரும் நேரம்தான். முகப்பில் இருந்த பொம்னாபாடியாரின் அறைக்குச் சென்றாள். ஆறடியில் கம்பீரமாக உலவியவர், ஐந்து மாடுகளின் தாம்புக் கயிற்றையும் கூட ஒற்றைக் கையால் பிடித்து அடக்கி பட்டியில் அடைத்தவர், உருவம் மெலிந்து மேடிட்ட தலைகாணியில் முதுகைச் சாய்த்துப் படுத்திருந்தார். கண்களில் படிந்திருந்த பீழையை ஈரத்துணியால் ஒத்தித் துடைத்தாள். அறை முழுக்க முதுகுப் புண்ணின் சீழ்க்கையும் மருந்தும் கலந்த கடுவீச்சம் இருந்தது. புண்ணின் வெள்ளைக் கட்டை மீறி நீர்த்த இரத்தம் சீழ்க்கையுடன் கலந்து கறைபட்டிருந்தது. காய்ந்திருந்த உதடுகளில் படுமாறு சிறிது வெந்நீர் புகட்டினாள். 

நாளைக்கு என்னானு நெனவு இருக்கா? மகேசு விடிகாலைல வருவான், வெள்ளென கெளம்பனும். இனிமே நாம இங்க இருக்க மாட்டோம், கரூர் போவனும்”. பொம்னாபாடியாரிடமிருந்து ஹீனமாக, “அன்னம் அன்னம்என்ற முனகல் மட்டுமே வெளிவந்தது. விசனத்தில் வீழ்ந்தவர் உடல் திறன்களை வரிசையாக இழந்தார். வலு இருந்தால் நிச்சயம், ‘நான் எங்கிட்டும் வரல.என்று உறுதியாகச் சொல்லியிருப்பார். 

வாசலில்தம்பு தம்பூ, கேக்குதுங்களா!என்ற குச்சாயியின் குரல் கேட்டது.  அன்னம்மாளை நேரடியாக விளித்து அழைக்கும் வழக்கம் குச்சாயிக்கு இல்லை. அன்னம்மாளின் மனதுக்கு ஒரே ஆறுதல் அவள்தான். எல்லோரும் எல்லாமும் விலகிவிட்ட பிறகும் ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும் முன் தவறாமல் அங்கு வந்து குந்தியிருந்துவிட்டுச் செல்வது குச்சாயியின் வழக்கம்.  

பதினைந்து வயதில் பங்களா வீட்டுக்கு வந்த அன்னம்மாளுக்கு ஒத்த வயதான குச்சாயின் குள்ளமான உருவமும், கண்களில் தெரிந்த தூய நேசமும் உடனடியாகப் பிடித்துவிட்டது. வெளிப்போக்கிற்கு எஜமானி வேலையாள் உறவெனத் தெரிந்த இருவருக்குள்ளும் தடைகள் இல்லாத பாதையால் ஆன ஆழமான நட்பு இருந்தது. குச்சாயிக்கு பொம்னாபாடியாரின் வயலில் வேலைக்கு இருந்த மாணிக்கத்தை திருமணம் செய்து வைத்ததும் அன்னம்மாள்தான். 

குச்சாயியும் அன்னம்மாளும் பல தருணங்களில் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருப்பார்கள். அன்றைய இரவு அழுத்திக்கொண்டிருந்த பிரிவின் துக்கம் அவர்களிடம் மேலும் சொற்களைப் பறித்திருந்தது. ஏதோ நினைவுக்கு வந்தவளாக, “இரு, பச்சப் புளிசாதம் பண்ணியிருக்கேன் சாப்பிடு,” என்று சொல்லிவிட்டு சமையல்கட்டுக்குப் போனவள் காய்ந்த தொண்ணையில் கட்டுச்சோற்றைப் போட்டு அதன் மீது புளியும் வரமிளகாயும் வைத்து அம்மியில் அரைத்த பருப்புத் துவையலையும் வைத்துவிட்டாள். 

எப்போதும் போல தரையில் அமர்ந்து ஒற்றைக் காலை மட்டும் கிடத்தி, மறுகாலை செங்குத்தாக வைத்து, சோற்றைத் துவையலுடன் பிசைந்த குச்சாயிக்கு கண்களில் நீர் கட்டியது. குனிந்துகொண்டு சோற்றைத் தொட்டவள், “இப்பிடி ஒரு பொழப்பு பொழச்சிட்டீங்களே அம்மாளு!என்று அரற்றத் தொடங்கினாள். காய்ந்த ஆற்றுப் படுகைக்குள் தொலைந்து போன நீராய் அன்னம்மாளின் கண்ணீர் எங்கோ கிடந்தது. ஒன்றும் பேசாமல் தெருவிளக்கின் வெளிச்சத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்த பூச்சிகளைப் பார்த்தாள். 

மகேசு காலைல ரெண்டு மணிக்கெல்லாம் வண்டிகொண்டுவந்திருவான். நீயும் மாணிக்கமும் வாங்க, சாமானையெல்லாம் ஏத்தனும். ஜனம் மாடுபிடிச்சுக்கிட்டு காட்டுக்கு போறதுக்குள்ள கெளம்பீரனும்”. 

கடைசி டவுன் வண்டி போய் நீண்ட நேரமாகிவிட்டது. எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்கள் என்று தெரியவில்லை. குச்சாயி கிளம்பியதும் அன்னம்மாள் பொம்னாபாடியாருக்கு பூண்டுக் கஞ்சியை ஊட்டிவிட்டு எப்போதும்போல பட்டாசாலையில் பாயை விரித்துப் படுத்தாள். 

இந்த ராத்திரிய அப்படியே நீட்டிச்சுக்க முடியாதா! நானும் பொம்னாபாடியாரும் இத்தன வருஷமா இதே ராத்திரிய நோக்கித்தாம் பயணிச்சமா! இது எம் மனசுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்துச்சா! இப்பக்கூட வர ஏலாதுனு சொல்லமுடியுமே, எது என்னத் தடுக்குது? நாளைக்கு நான் இல்லாத ராத்திரி இந்த வீட்ல எப்படி இருக்கும்? சீவிடு வண்டு இதே மாதிரிதான் கூச்சப்போடுமா? முத்தத்து செம்பருத்திச் செடியோட பூ உதிர்ரப்ப என்ன நெனச்சுக்குமா? இப்ப இந்த நேரத்தில நிம்மதியா ஒறக்கத்தில இருக்கற மத்த மனுசங்க, நாளைக்கும் அவங்களோட விட்டுக்குள்ளதான் இருகப்போறங்க, எத்தன கொடுப்பின அது!’. 

சுழல் சுழலாய் எண்ணங்கள். சித்தம் அடங்கி உறக்கத்தில் வீழ்வதும் மீள்வதுமாய் ஒன்றபின் ஒன்றான நிலை. 

பொம்னாபாடியாரின் முதுகுப் புண்ணில் நெளிந்த சாரைப் பாம்பு கழுத்தை நீட்டி என்னை இங்கிருந்து விடுவித்துவிடு என்று இறைஞ்சியது. மகேஸ்வரன் ஒரு பெரிய கடிகாரத்தின் ஊசலில் மாட்டிக்கொண்டு அலறினான். குச்சாயியும் அன்னம்மாளும் பரந்த பச்சை வயல்வெளியில் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தார்கள்’. 

நீண்ட நேரம் உறங்கியதைப் போல உணர்ந்து எழுந்துகொண்டாள். தன் உடலின்மேல் கருங்கல்லை வைத்து அழுத்தியது போன்ற அசதி. தலைக்கு குளிர்ந்த நீரை ஊற்றிக் குளித்து, அதே ஈரத்துடன் ஊரின் மூலைப் பிள்ளையார் கோவிலில் விளக்கேற்றினாள். படுக்கையில் வலியுடன் அசைந்துகொண்டிருந்த பொம்னாபாடியாரை ஒருமுறை பார்த்துவிட்டு பொருட்களை வண்டியில் ஏற்றத் தயாரானாள். 

முதலில் பொம்னாபாடியாரை கட்டிலுடன் வண்டியில் ஏற்றினார்கள், அவரைச் சுற்றி பொருட்கள் கூடின. அன்னம்மாள் பொருட்களை சேதாரமில்லாமல் ஏற்றுவதில் திணித்துக்கொண்ட முனைப்புடன் இருந்தாள். பல திசைகளில் சிதறடித்து சூறாவளியாய் அலைக்கழித்த மனதைக் கட்டுப்படுத்தப் போராடினாள். வேலை முடிய இரண்டு மணிநேரமாகிவிட்டது. அதிகாலையின் மென்னிருட்டில் வீடுகளில் விளக்கு வெளிச்சம் ஒளிரத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேவல்களின் கூவல் கேட்டு அடங்கியது. 

பங்களா வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொள்கையில் எப்போதும் போல அந்தப் பழைய இரும்புப் பூட்டை இருமுறை இழுத்துப் பார்த்துகொண்டாள். பின் அந்தச் செயலின் அர்த்தமின்மையை உணர்ந்து, வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்க்க கூப்பாடுபோட்ட மனதின் வேட்கையை அடக்கிக்கொண்டு வண்டியை நோக்கி நடந்தாள்.  

மகேஸ்வரன் எத்தனை கேட்டுக்கொண்டும் வண்டியின் முன் பகுதியில் பயணிக்க மறுத்த அன்னம்மாள், பொம்னாபாடியாரின் கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்துகொண்டாள். வண்டியின் இயந்திர ஒலியை மீறி குச்சாயியின் விசும்பல் சப்தம் அவளுக்கு தெளிவாகக் கேட்டது. 

வண்டி சல்லிக்கல் சாலையில் புழுதியை எழுப்பிக் குலுங்கியவாறே ஊர்ந்தது. ஊரின் விளிம்பைத் தாண்டும்வரை அவள் திரும்பிப்பார்க்கவில்லை. பொருட்களுடன் பொம்னாபாடியாரையும் அன்னம்மாளையும் சேர்த்துச் சுமந்த வண்டி, நக்கசேலம் மைய சாலையில் நுழைந்து கரூரை நோக்கி வேகமெடுத்தது. 

தேக அயர்ச்சி அன்னம்மாளின் பாதி மூடிய கண்களை ஆழ்ந்த உறக்கத்துக்கு வாசலாக்கியது. வாசலில் ஏதோ உரத்த ஓசை! ஊசல் கடிகாரம் தொலைவிலும் அருகாமையிலுமாய் ஒலித்ததைக் கேட்டு கண்களைத் திறந்தாள். 

அஞ்சு மணியாயிருச்சு, செந்தில்வேலன் வந்திருப்பான்!என்ற வார்த்தைகளைத் தன்னையறியாமல் உதிர்த்தாள்.

Comments

Popular posts from this blog

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்