நெடும்பாதைகள், மிக்ஷிகன் கதை விவாதம்

                                                    


அன்புள்ள நண்பர்களுக்கு,


என்னுடைய கதையை வாசிக்க நேரம் அளித்தமைக்கு முதல் நன்றி. விவாதம் குறித்த பதிவை மதுநிகா பகிர்ந்திருந்தார். அதில் எழுந்த சில கேள்விகள், கருத்துகள் குறித்த என்னுடைய எண்ணங்களைப் பகிர்கிறேன்.


கதையின் முதல் வரி


கதையின் முதல் வரியை அனைவருமே கூர்ந்து வாசித்திருக்கிறீர்கள். நான் இந்தக் கதையை சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி அப்படியே வைத்திருந்தேன், கதை என்னுள் எழ மறுத்தது. 


அன்னம்மாள் அந்தக் கடிகார ஒலியை எதிர்கொள்ளும் தருணத்தில் இருந்தே கதையை நான் முதலில் தொடங்கியிருந்தேன். இந்தக் கதையில் காலம் ஒரு கதாப்பாத்திரம் போலவே ஊடாடுகிறது. மேலும் கடிகாரம் காலத்துக்கான குறியீடு என்பது இலக்கிய வாசகர்கள் அனைவருக்குமே பரிச்சயமான ஒன்று என்பதால் அது சரியான தொடக்கமாக இருக்கும் என்றும் எண்ணினேன். ஆனால், அது மிகவும் சம்பிரதாயமான ஒரு தொடக்கம் என்றும் தோன்றியது.


மேலும், கதையை அங்கிருந்து என்னால் விரித்து எழுத முடியவில்லை. நான் இதுவரை பதினைந்துக்கும் குறைவான கதைகளையே எழுதியிருக்கிறேன் (எல்லாக் கதைகளையும் நான் பிரசுரத்துக்கு அனுப்புவதில்லை). சிறுகதையின் முதல் வரி அல்லது பத்தி சரியாக அமையாவிட்டால் அது வளராமல் முரண்டு பிடிக்கும் என்பதே இதுவரையிலுமான என்னுடைய அனுபவம். இதை மற்றவர்களும் உணர்ந்திருக்கலாம்.


இதன் தொடக்க வரிகள் வேறு ஏதோ செயலில் இருக்கையில் வந்து விழுந்தது. அதுவே நான் கதையை எழுதி முடிப்பதற்கான உந்துதலாகவும் அமைந்தது. ஒரு வகையில் கதையின் அடிப்படைத் தத்துவார்த்த அம்சத்துக்கு அடித்தளமாகவும் அமைந்தது. புனைவு எழுத்தில் தற்செயல் எனும் கடவுளின் பங்கு மிகவும் பெரியது என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.


இதுவரை பேசப்பட்ட ஒரு அம்சத்தையே இந்தக் கதையும் சொல்கிறதா?


ஆம், உண்மை. இலக்கியத்தில் அடிப்படை மனிதத் தேடல்கள், கேள்விகள் அனைத்துமே பேசப்பட்டுவிட்ட ஒன்றுதான். தல்ஸ்தோயும், ஜெயமோகனும் எழுதாத ஒன்றை புதிதாகப் படைத்துவிடமுடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.


ஆனால், அதே அடிப்படைக் கேள்விகளுக்கு நம்முடைய கோணத்தை, நமக்கே உரிய பார்வையை அளிக்கமுடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இவையெல்லாம் புதிய இலக்கியக் கண்டடைதல்கள் அல்ல, உங்களுக்கு மிகவும் பரிச்சயமான கருத்துக்களாகவும் இருக்கலாம். 


ராஜி சொனதைப் போல நம் வாழ்வின் ஒரு தருணத்தை கதை தொடுகிறதா, நம்மால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறதா என்பது கதையை அளக்க நல்ல அளவுகோல்.


கதையை இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமா? அந்த ஆணின் கோணம் விரித்து எழுதப்பட்டிருக்கலாமா?


ராஜி மற்றும் லக்ஷ்மண் பேசுகையில் இதைக் குறிப்பிட்டார்கள். ஆம், உங்கள் கூற்றில் எனக்கும் உடன்பாடே, கதையில் அதற்கான சாத்தியங்கள் இருந்தன. பொம்னாபாடியார் குறித்து இன்னும் சிலவற்றைச் சொல்லலாமா என்று நானும் எண்ணினேன். ஆனால் இந்தச் சிறுகதை அன்னம்மாளின் கோணத்தை இயல்பாக எடுத்துக்கொண்டது. மற்றவர்களின் கோணம் கதையின் ஒருமையைச் சிதைக்குமோ என்ற ஐயத்தால் வேறு எதையும் நான் கதைக்குள் கொண்டுவரவில்லை. 


லக்ஷ்மண் சொன்னதைப் போல எழுதும்போது நானே எனக்கு அளித்துக்கொண்ட வரையறைதான். இதில் சரி தவறுகள் இல்லை.


கதையின் தலைப்பு


கதையின் தலைப்பு என்னையறியாமல் ஒரு கணத்தில் எழுந்த ஒன்றுதான். அது உதித்தவுடன் கதையின் பார்வைக்கும் பொருத்தமான ஒன்றாகத் தோன்றியது. லக்ஷ்மண் குறிப்பிட்டதைப் போல கதையை எழுதி முடித்த பிறகே தலைப்புகளை நான் யோசிக்கிறேன்.  


மதுநிகாவின் கோணம் மிகக் கூர்மையானது. இங்கு எல்லாவற்றுக்கும் அதற்கான பாதைகள் இருக்கின்றன. ராஜியும் இதைக் குறிப்பிட்டிருந்தார்கள். 


கவிதைகளின் மீதான பரிச்சயம் கதைகளில் எப்படி வெளிப்படுகிறது?


நான் கவிதைகள்தான் எழுதிக்கொண்டிருந்தேன், இன்றும் எழுதுகிறேன். நூறு கவிதைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறேன் (நிறைய மோசமான கவிதைகளும் எழுதியிருக்கிறேன்). தயக்கம் காரணமாக இதுவரை நான் என்னுடைய கவிதைகளை எங்கும் பிரசுரத்துக்கு அனுப்பியதில்லை, இனி அனுப்பலாம்.


நான் அடிப்படையில் என்னைக் கவிதை வாசகன் என்றே நம்பிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன். கவிதைகள் எழுதுவது எனக்கு சிறுகதைகளுக்கான வடிவ போதத்தை அளிக்கிறது. இதுவரை நான் எழுதிய கதைகளில் எழுந்த கவித்துவமான பகுதிகள் கூட அதன் விளைவுகள்தான். நான் எப்போதுமே நிறைய கவிதைகளை வாசிக்கிறேன், வாசிக்க எண்ணுகிறேன். கதைகள் எழுதும்போது இயல்பாக எழும் படிமங்களை அடையாளம் காணவும், அவற்றை சரியாகப் பயன்படுத்தவும் இது உதவுகிறது.


மெய்யழகனை நினைவு படுத்துகிறதா?


மெல்லுணர்வுகளைத் தொட்டுப் பேசுவதால் இந்தத் தொடர்பு உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மதுநிகா தயக்கமாக இதைச் சொன்னார். ஆனால் கதை வாசிப்பில் எல்லா சாத்தியங்களுக்கும் இடம் உண்டு. எழுதுபவர்களுக்கு கதைகள் எப்படி வாசிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதும் மிகவும் உதவிகரமானது.


இறுதியாக…


இந்தக் கதையில் அன்னம்மாளை நான் உறுதியான பெண்ணாகவே முன்னிறுத்த எண்ணினேன். வாசகர்களுக்கு அன்னம்மாள் மீது பரிதாப உணர்வு தோன்றிவிடக்கூடாது, empathy மட்டுமே இருக்கவேண்டும் என்பதே நான் கதையை எழுதி முடித்தவுடன் எதிர்பார்த்தது. ஆனால் இது எப்படி வாசிக்கப்படும் என்பதில் சிறிது பதற்றம் இருந்தது. உங்கள் வாசிப்பு எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.


விவாதத்திற்கு கதையை எடுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். 

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்