எழுகை, சிறுகதை - சொல்வனம் இதழ்
“உனக்கு அதிசயங்களில் நம்பிக்கை இருக்கிறதா?” என்ற கேள்வியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ வினோத உலகிலிருந்து நேரடியாக இங்கு வந்து விழுந்தவரைப் போல அந்த மனிதர் இருந்தார். அவரிடமிருந்து சம்பிரதாயமான கேள்விகள் ஏதேனும் எழுந்திருந்தாலும் எனக்கு அது விசிதிரமாகவே தோன்றியிருக்கும்!
எனக்கு மிகவும் பரிச்சயமான நகர், ஆனாலும் இந்தப் பகுதிக்கு அதுவரை வந்ததில்லை. வீடுகளுக்கு இடையில் நெடுந்தொலைவும், ஓங்கி உயர்ந்த மரங்களும், வயல்வெளிகளும், மண்டிய புதர்களுமாக கிராமத்துச் சாலையின் ஒதுக்குப்புறமான பகுதியில் அவருடைய வீடு இன்னும் தனிமைப்பட்டுக் கிடந்தது. வீட்டு முகப்பில் இருந்த விளக்குக் குமிழுக்குள் கசடுகள் நிறைந்து, அதிலிருந்து வெளிச்சம் பலகீனமாகக் கசிந்தது. அங்கு ஆண்டுகளாக யாரும் குடியிருக்கவில்லை என்று சொன்னாலும் நம்பலாம்!
நான் வேலை செய்யும் நகராட்சி அலுவலகத்திற்கு வழக்கமாகச் செல்லும் சாலை, பராமரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த வீடு அமைந்திருந்த கிளைச் சாலை மேடும் பள்ளமுமாகக் கிடந்தது. ‘சான்டா க்ளாஸ் விற்பனைக்கு’ என்ற பதாகையைக் கண்டுதான் பொதியுந்தை அவருடைய வீட்டை நோக்கிச் செல்லும் மண் பாதைக்குள் நுழைத்தேன்.
அந்த வீடு ஒரு புல்வெளிச் சரிவின் உச்சியில் இருந்தது. வீட்டின் பின்பகுதி நகரை ஊடுருவிச் செல்லும் அகன்ற ஆற்றின் கரையைத் தொட்டுக்கொண்டிருந்தது. கடும் குளிர் காரணமாக ஆற்றின் தண்ணீர் பெரும்பகுதி உறைந்து அசைவின்றி காணப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் உறையாத நீர் தீவைப்போல மின்னிக்கொண்டிருந்தது. வீட்டின் பக்கவாட்டில் கவிழ்ந்திருந்த சிறிய மீன்பிடித் தெப்பத்தின் பலகைகள் கரிய பூசனத்தால் சூழப்பட்டிருந்தது.
பனிக்காலத்தின் தொடக்கம் என்பதால் அந்த வீட்டைச் சுற்றிய உயரமான ஓக் மரங்களிலிருந்து விடுபட்ட உலர் இலைகள் மென்மையாகத் தரையில் இறங்கின. தரையில் வீழ்ந்த இலைகளைக் குளிர்ந்த காற்று கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது. ஒரு நொடி அங்கிருந்து திரும்பிவிடலாமா என்று எண்ணிய எனக்கு, லிவோனாவின் முகம் நினைவுக்கு வந்தது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே “அப்பா, இந்த வருடமாவது சான்டா நம் வீட்டுக்கு வந்துவிடுவார் அல்லவா?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
“வீட்டில் யாரும் இருக்கிறீர்களா?” என ஓரிருமுறை குரல் கொடுத்துப் பார்த்தேன். கிராமத்துச் சாலையின் ஓரமாக ஒரு மரக் குச்சியைத் தரையில் பதித்து, அதன் மேல் பகுதியில் செவ்வக வடிவப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. சிவந்த மையில் தோய்ந்த சொற்கள், கைகளால் எழுதப்பட்டதற்கான ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. திரும்பிவிட எத்தனித்தபோது அந்த வீட்டை ஒட்டிய சேமிப்புக் கிடங்கின் இருளுக்குள் இருந்து ஒரு மனித உருவம் வெளிவருவதைப் பார்த்தேன்.
கலைந்த அழுக்கான உடைகள், கறைபடிந்த மேலங்கி, நைந்து தேய்ந்த காலணிகள், வெள்ளையும் கோதுமை நிறமும் கலந்து கொடிபோலச் சுருண்ட தாடியுடன், முதல் பார்வையில் ஐம்பது என்றும் எழுபது என்றும் கணிக்கமுடியாத தோற்றமளிக்கும் சுருக்கம் வேய்ந்த முகமுமாக, அவர் எனக்கு சில அடிகள் முன் நின்றிருந்தார்.
சற்று கூன் விழுந்திருந்ததால் அவருடைய இயல்பான உயரத்தைக் கணிக்கமுடியவில்லை. கிழக்கு ஆசிய முகங்களுக்கே உரிய துடுக்குத்தனம் தெரிந்தது, ஆனால் வெள்ளையர். சிரித்தால் கண்கள் இன்னும் சுருங்கக்கூடும். ஸ்னேகத்துடன் என்னுடைய கண்களைக் கூர்ந்து பார்த்தார்.
‘மந்திரவாதியோ!’ எனத் தோன்றிய எண்ணத்தை, “உனக்கு அதிசயங்களில் நம்பிக்கை இருக்கிறதா?” என்ற அவருடைய கேள்வி கலைத்தது. அந்த வீடும் அங்கு தோன்றிய மனிதரும் குறித்த முன் எண்ணங்களில் இருந்து தற்காலிகமாக விடுபட்டேன்.
நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன், அந்த மனிதர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார், இனி திரும்புவதற்கில்லை!
“நான் உனக்கு அளிக்கும் சான்டா க்ளாஸ் என்னுடன் நெடுங்காலமாக இருக்கிறார்…” அந்த மனிதர் எனக்கு அதைக் கொடுக்க முடிவுசெய்துவிட்டாரா என்ன? இன்னும் விலைகூடப் பேசவில்லையே!
“பனி பொழிந்து வெண்மை மூடிய இந்த ஆற்றின் மேல் வரைமான்களுடன் விளையாடிக் களிப்பவர்.” என்று ஒலித்த அவருடைய குரல், சற்றுத் துறுவேறிய தகரத்தைக் கீறியதைப் போல வெளிப்பட்டது. நான் அவர் குறித்த முன் எண்ணங்களுக்கு மீண்டேன். தீவிர மதுப்பழக்கம் அல்லது ஆண்டுகளாக போதைப் பொருள் பயன்பாடு இவற்றால் ஆட்கொள்ளப்பட்டவராக இருக்கலாம் எனத் தோன்றியது.
“என் மகளுக்கு எட்டு வயதாகிறது. அவள் சான்டா க்ளாஸை இன்னும் நம்புகிறாள்.” அவருடைய முந்தைய கேள்விக்கான பதிலை சற்று தாமதமாகவே கூறினேன். அலர்ந்த முகத்தசைக்குள் அந்த வினோத மனிதரின் கண்கள் வசீகரமாக ஒளிர்ந்து அடங்கியது.
“எனக்கு விடைபெறும் தருணம் வந்துவிட்டது. சான்டாவுக்கு நல்ல இருப்பிடம் வேண்டும் என எண்ணுகிறேன். ஒரு வகையில் அவர்தான் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறார்.” மேலும் ஏதோ கூற விரும்புபவரைப் போன்ற பாவனையுடன் இருந்தார்.
“நான் அதைப் பார்க்கலாமா?” என்னை மீறி வார்த்தைகள் வந்து விழுந்தன. சேமிப்புக் கிடங்கை நோக்கி நடக்கத் தொடங்கிய அவரை நான் பின்தொடர்ந்தேன்.
கொம்புகள் நீண்ட வரைமான்களுடன், சிறிய பனிச் சறுக்கு வண்டியில் அமர்ந்திருந்த சான்டாவின் உருவம் மலர்ந்த முகத்துடன் காணப்பட்டது. மெல்லிய மரவேலைப்பாடுகளால் ஆன எடையற்ற உருவங்கள். தனித்தனியாகவே அவற்றை பொதியுந்தின் பின்பகுதியில் ஏற்றினேன். மான்களையும், சான்டாவின் பனிச் சறுக்கு வண்டியையும் இணைக்கும் விதமாக நூதனமான இணைவுக்குழிகள் இருந்தன.
முன் கால்களைத் தூக்கிக்கொண்டிருந்த வரைமான்கள் காற்றில் எழத் துடிக்கும் பாவனை கொண்டிருந்தன. பொதியுந்தில் ஏற்றிய பிறகு சான்டா, மான்களுடன் காற்றில் எவ்விப் பறந்துவிடுவதைப் போன்ற பிரமை, ஒரு கணம் என் கண்களுக்குள் எழுந்து அடங்கியது.
மங்கிய விளக்கு வெளிச்சத்தின் கீழ் நின்றுகொண்டிருந்த அந்த மனிதரின் உருவத்தை, பின்புறக் கண்ணாடியில் மறையும்வரை பார்த்தவாறே நகர்ந்தேன். மெல்லிய துகள்களாக விழத் தொடங்கிய பனி, சிறிய கொத்துகளாக மாறியிருந்தது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று பனி பொழிந்து பல வருடங்களாகிவிட்டது. ஒரு மாதம் முன்பிருந்தே பனிப்பொழிவுக்கான சாத்தியங்களை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் ஆவேசமாக அறிவித்தவண்ணமிருந்தனர். ‘சான்டா இந்த வருடம் பனியுடன் வருகை தருவாரா?’ என வானொலியில் நாடகீயமாக வந்த அறிவிப்புகள் எனக்கு சற்று அபத்தமாகத் தெரிந்தன.
அந்த மனிதருடைய வீட்டுக்குச் சென்று திரும்பிய நாளன்று தொடங்கிய பனிப்பொழிவு இடைவெளியற்று மௌனமாக வீழ்ந்துகொண்டே இருந்தது.
“அப்பா, வேலை முடிந்து சீக்கிரமே திரும்பிவிடு. இன்று சான்டா நம் வீட்டுக்கு நிச்சயம் வருவார் அல்லவா..” என்று விரிந்த கண்களுடன் லிவோனா என்முன் நின்றுகொண்டிருந்தாள். கனமான தோல்தடித்த பனிக் காலணிகளை நான் சிரத்தையுடன் அணிந்துகொண்டிருந்தேன். வீடு முழுக்க கிறிஸ்துமஸ் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பனிப்பொழிவு தொடங்கிய ஒரு வாரமாகவே எனக்கு கடினமான வேலை இருந்தது. சாலையில் குவியும் பனிக்குவியல்களை அகற்றுவதும், மீண்டும் விழும் பனி குவியாமல் உருகுவதற்காக உப்புப் பரல்களைத் தெளிப்பதுமாக, வழக்கமான வேலைநேரம் தாண்டியும் என்னுடைய நாட்கள் நீண்டன. பனியை அகற்றுவதற்காக ஒரே நாளில் இரண்டுமுறை வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
லிவோனாவின் விருப்பத்திற்கு ஏற்ப சான்டா க்ளாஸையும், வரைமான்களையும் அவளுடைய அறைக்கு எதிரிலேயே அமைத்திருந்தேன். சான்டாவுக்கும், வரைமான்களுக்கும் ஒளிரும் மின்சாரக் குருத்துக்களையும் பொருத்தினேன். பனியின் மென்பட்டுப் போர்வை மூடிய வீட்டின் தோட்டத்துக்குள், மின்சார விளக்குகள் ஒளிரும் சான்டா க்ளாஸை தன் அறையின் சாளரக் கண்ணாடி வாயிலாக லிவோனா விரிந்த கண்களால் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
தெருவின் இரு புறமும் சிறியதும் பெரியதுமான அலங்கார விளக்குகள் பிரகாசித்தன. நகரெங்கும் மரங்கள் தங்க நிற மின்சார விளக்குகளால் சுழன்று அணைக்கப்பட்டிருந்தன. அந்த மரங்கள் ஈன்ற பழங்களைப் போலவே அதில் நட்சத்திர வடிவ விளக்குகளும் தொங்கின. சில வீடுகளின் பூங்காக்களிலும், சிலவற்றில் மேற்கூரைகளிலும் சான்டாவின் உருவம் மின்னிக்கொண்டிருந்தது. எங்கோ தொலைவிலிருந்து எழும் கிறிஸ்துமஸ் பாடலின் மணியோசை மெட்டு எப்போதும் சன்னமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.
பூஜ்யத்துக்கும் குறைவான பாகை குளிர்காற்று, சாலையில் குவிந்திருந்த பனிப் பரப்பின் தளர்ந்த மேற்பகுதியை அளைந்துகொண்டிருந்தது. பனியின் ஒளிரும் வெண்மையும், அலங்கார விளக்குகளின் வெளிச்சமுமாக நகரமே ஏதோ கனவுக்குள் மூழ்கிக்கிடப்பதைப் போலவும், புரதான காலத்தில் நிகழும் கிறிஸ்துமஸ் சித்திரப் படக் கதைக்குள் வரையப்பட்ட வண்ண ஓவியங்களின் தோற்றத்தையும் ஒத்திருந்தது,
எனக்கு நகரின் மையத்தில் நான்கு தெருக்களைத் தூய்மைப் பணிக்காக நகராட்சி ஒதுக்கியிருந்தது. பொதியுந்தின் முகப்பில் இணைக்கப்பட்டிருந்த பனிவாரியை இயக்கிய என் கைகள் தளர்ந்திருந்தன. வீழ வீழக் குறையாத பனியின் மீது எனக்கு சலிப்பு ஏற்படத் தொடங்கியது. பனிக்குவியலை வாரி சாலையின் ஓரத்தில் குவிப்பதும், சில மணி நேரங்களிலேயே அவற்றின் மீது மேலும் பனிப் போர்வை மூடுவதுமாக இருந்தது. நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன்.
லிவோனாவுக்காக நான்கு வருடங்களாக நானும் எமிலியும் எல்ஃப் பொம்மையை இரவில் அவள் உறங்கியபின் வீட்டின் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி வைத்துக்கொண்டிருந்தோம். ஒருநாள் வேலையின் அலுப்பில் எல்ஃப் பொம்மையை மாற்றிவைக்க மறந்துவிட்டேன்.
“அப்பா, நேற்று எல்ஃப் சான்டாவைக் காணச் செல்லவில்லையா? இல்லையென்றால் என்னுடைய நன்நடத்தை குறித்து சான்டாவுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேள்விகளாக அடுக்கத் தொடங்கிவிட்டாள். எமிலி வேறு கதைகளைச் சொல்லி அவளைச் சமாதானப்படுத்தினாள்.
“நீ ஏன் இப்படி எதிலும் ஆர்வமற்றவனாக மாறிக்கொண்டிருக்கிறாய்? உன் மனதைக் கொடுத்து இந்த விளையாட்டில் பங்கெடுக்கவேண்டும், இல்லையென்றால் இது வெறும் சடங்காகவே உனக்குத் தோன்றும்.” என்றாள் எமிலி.
ஏட்டு வயதைத் தொடும் சிறுமி இன்னும் சான்டா, எல்ஃப் போன்ற கதைகளில் நம்பிக்கையுடன் இருப்பதில் எனக்கு உவப்பில்லை. சிறு வயதில் கிறிஸ்துமஸ் தினத்தையும் எனக்கு வரும் பரிசுகளையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த நாட்கள், கடந்த கால நினைவுகளாகக் கூட என்னில் எழுவதில்லை.
“இது நம்பிக்கை சார்ந்த சம்பிரதாயம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய். நாம் இருவரும் நம்முடைய பால்ய காலத்துக்கு திரும்புவதற்கான அழகிய வாய்ப்பு இது. இந்த மாபெரும் நாடகத்தில் நாம் பங்கெடுத்து நடிப்பதில் பெரும் உவகையிருக்கிறது, நம்மை மறந்து ஒன்றில் ஈடுபடுவதன் மாயம் இருக்கிறது. அது ஏன் உனக்குப் புரிவதில்லை?” என்ற எமிலியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.
அந்த வினோதமான மனிதரிடமிருந்து சான்டாவையும், வரைமான்களையும் வாங்கி வந்த நாளிலிருந்து லிவோனா பித்துப் பிடித்தவளைப் போல இருக்கிறாள். பள்ளி நூலகத்திலிருந்து கிறிஸ்துமஸ் புத்தகங்களாக எடுத்துக்கொண்டுவந்து வாசிக்கிறாள். இரவில் அந்தப் புத்தகங்களிலிருந்து கதைகளை வாசிக்கச் சொல்லி வற்புறுத்தத் தொடங்கியிருக்கிறாள்.
நகராட்சியில் என் சக வேலையாட்களின் குழந்தைகள் இந்த எளிய நம்பிக்கைகளிலிருந்து விடுபட்ட செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். “நீ லிவோனாவுடைய குழந்தைகள் மருத்துவரிடம் கூட இதைக் குறித்துப் பேசலாம்.” என்று அறிவுரைகளும் வந்துகொண்டிருந்தன.
சான்டா க்ளாஸ் என்பவர் உண்மையான நபர் அல்ல, வெறும் கற்பனைக் கதை என்று லிவோனாவிடம் சொல்லிவிடலாமா என்றுகூட யோசித்தேன். இல்லை, அது குரூரமான செயல். அவளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். எமிலியும் அதை விரும்பமாட்டாள். லிவோனா அளவுக்கே அவளும் இந்த கிறிஸ்துமஸ் நாடகத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்று தோன்றியது.
எமிலியின் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் நாளின் முந்தைய தினம் மதிய உணவு விருந்துக்கு வந்திருந்தார்கள். லிவோனா சக குழந்தைகளிடம் சான்டா குறித்த பேச்சுகளாகவே இருந்தாள். எல்ஃப் ஒவ்வொரு நாளும் இடம் மாறிக்கொண்டிருப்பதையும், சான்டா அன்றைய இரவு தனக்கு பரிசுகளை அளிக்க வருவார் என்றும் உணவுமேசையில் ஆர்வமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
நகரெங்கும் வாகனங்கள் பனியில் சறுக்கி விபத்துகளுக்கு உள்ளாகிக்கொண்டிருந்த காரணத்தால், நான் அன்றும் வேலைக்குச் செல்ல நிர்பந்தம் வந்தது. மதிய உணவு விருந்தை முடித்துவிட்டு உடனடியாகக் கிளம்பினேன். எனக்கு சான்டாவை அளித்த வினோத மனிதர் குறித்த எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருந்தது.
‘நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது’ என்று அவர் குறிப்பிட்ட காரணம் என்ன? வயோதிகம் காரணமாக முதியோர் வசிப்பிடத்திற்கு செல்கிறாரா? அவர் அதுபோன்ற இடங்களில் தங்குபவரைப் போலத் தெரியவில்லை. அவருடைய வீடு இருந்த சாலை வழியாக மீண்டும் சென்றேன். ‘சான்டா க்ளாஸ் விற்பனைக்கு’ என்ற பதாகையைக் காணவில்லை. ஆது பனியால் மூடப்பட்டிருக்கலாம்!
சாலையில் இருந்தவாறே அடர்ந்த புதர்களும், மரங்களும் சூழ இருந்த அந்த வீட்டை ஒருமுறை நோக்கினேன். வீட்டின் முகப்பு விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. சேமிப்புக் கிடங்கிலும் ஆள் நடமாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த வீட்டிலிருந்து கிறிஸ்துமஸ் மணிகள் ஒலிக்கும் சப்தம் கேட்டதா!
‘இது என்ன பைத்தியக்காரத்தனம்?’ என்று எண்ணிக்கொண்டே பனித்தூய்மை செய்யவேண்டிய இடத்திற்கு நகர்ந்தேன்.
நான் தொடர்ச்சியாக வேலை செய்து அலுத்திருந்தேன். நன்றாக உறங்கிப் பல நாட்களாகிவிட்டன. பனிப்பொழிவு, அன்று இரவுடன் முடிவுக்கு வரும் என்று அறிவிப்பு வந்தது. வீடு திரும்பி நிம்மதியாக உறங்கவேண்டும். நாளையுடன் கிறிஸ்துமஸ், சான்டா க்ளாஸ் குறித்த கவலைகள் அகன்றுவிடும். அடுத்த வருடம் லிவோனா இன்னும் முதிர்ந்துவிடுவாள், அவளுக்கு இவையெல்லாம் எளிய விளையாட்டாகத் தோன்றலாம்.
தெருக்களில் பனியைச் சுரண்டி நீக்கி, உப்புப் பரல்களைத் தெளித்துவிட்டு வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினேன். பனிக்குவியல்களில் வழுக்காமல் இருக்க சற்று வரிகள் மிகுந்த முரடான சக்கரங்களை மாற்றியிருந்தேன். சக்கரங்களின் அடியில் நெறிபடும் பனியின் சப்தம் என் காதுகளில் பெரும் ஓசையாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
இரவு நேரம். ஆனால் வெண்பனிக்குவியலால் மூடப்பட்ட நகரம், அலங்கார விளக்குகளின் ஒளியுடன் சேர்ந்து மாலையா, அதிகாலையா என அறியமுடியாத ஒரு மயக்கமான பொழுதை ஒத்திருந்தது.
வீட்டுக்குத் திரும்புகையில் இரவு பதினொன்றைத் தாண்டிவிட்டது. லிவோனாவுக்கு எமிலி கிறிஸ்துமஸ் கதைகளை வாசித்திருப்பாள், அவளும் உறங்கிவிட்டாள். நான் லிவோனாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தைச் சொல்லி, நெற்றியில் முத்தமிட்டு உறங்கவைக்கவேண்டும் என எண்ணியிருந்தேன், அது நிகழாத வருத்தம் என்னில் இருந்தது.
வீட்டின் தோட்டத்தில் மின்சார விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்த சான்டாவும், வரைமான்களும் காற்றின் விசைக்கு ஏற்ப மெல்ல அசைந்துகொண்டிருந்தார்கள்.
வீட்டுக்குள்ளும் விளக்குகளே தேவைப்பாடத அளவு வெளிச்சம் இருந்தது. தளர்வான உடைகளை மாற்றிக்கொண்டு சமையலறையின் உணவு மேசை நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். அதீத உடல் அயர்ச்சி, ஆனால் உறக்கம் வரவில்லை. கண்ணாடிக் கோப்பையில் ஒரு உருளை பனிக்கட்டியைப் போட்டு கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக்கொண்டேன்.
தரையிலிருந்து மான்களுடன் விடுபட்டு காற்றில் பறந்துவிடும் சான்டா க்ளாஸின் தோரணை மீண்டும் ஒரு கணம் என்னில் தோன்றி மறைந்தது. குளிர்ச்சியும் மென் சூடுமாக விஸ்கி தொண்டையில் இதமாக இறங்கியது.
சான்டாவை எனக்குக் கொடுத்த அந்த வினோத மனிதரின் வீட்டு விலாசத்தை இணையத்தில் தேடிப் பார்த்தேன். அந்த வீடு இருபது வருடங்களுக்கு முன்னரே விற்கப்பட்டதற்கான ஒரு குறிப்பு அதில் இருந்தது. ‘யார் அந்த மனிதர்?’ என்ற குழப்பமான கேள்வியுடன் சாளரக் கண்ணாடியில் தெரிந்த சான்டா க்ளாஸின் உருவத்தைப் பார்த்தேன்.
விளக்குகளின் ஒளி இன்னும் கூடியிருக்கிறதா! சான்டா க்ளாஸ் வரைமான்களுடன் தரையிலிருந்து விடுபட்டு, காற்றில் மிதந்து, லிவோனாவின் அறைச் சுவரை ஊடுருவிச் செல்வதைக் கண்டேன். அவருடைய கைகளில் ஒரு பெரிய பரிசுப்பொதியும் இருந்தது.
கிறிஸ்துமஸ் மணியோசை மிக அருகில் ஒலிப்பதைக் கேட்டேன்.

Comments
Post a Comment