அமெரிக்கா, இரு வீடுகள்
நான் கொலம்பஸின் புறநகரமான டப்ளின் நகருக்கு (Dublin, Ohio) குடிபெயர்ந்தது 2021ம் ஆண்டு ஜூன் மாதம். 2014 ம் ஆண்டிலிருந்து வசித்த டொலிடோவை (Toledo, Ohio) ஒட்டிய பெரிஸ்பெர்க் நகரிலிருந்து (Perrysburg, Ohio) தெற்காக 120 மைல்கள் தொலைவில் அமைந்த நகரம் டப்ளின். டப்ளின் நகரில் நான்கு வருடங்களுக்கு மேலாக வசிக்கும் இந்த குடியிருப்புக்கு வந்து வீடுகளையும் நகரையும் சுற்றிப் பார்த்துவிட்டு சென்ற நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.
அமெரிக்கா முழுக்கவே பசுமையால் ஆனது என்ற எண்ணம் இருந்தாலும் இந்த நகரின் பசுமையும் குடியிருப்பை ஒட்டி உருவாக்கப்பட்ட நீண்ட ஓடையும் உடன் மனதைக் கவர்ந்துவிட்டது. என்னுடைய புதிய அலுவலகத்தை ஒட்டிய சற்று வாகன அடர்த்தியும் கடைகளின் அருகாமையும் மக்கள் நெருக்கமும் அமைந்த நகரில் இருக்க வாய்ப்பிருந்தும் பத்து மைல்கள் தள்ளி அமைதியாக கட்சியளிக்கும் டப்ளின் நகரையே குடியிருக்கத் தேர்ந்தெடுத்தேன்.
டப்ளின் என்ற பெயர் அயர்லாந்து நாட்டு தலைநகரின் பெயரைத் தாங்கியிருக்கிறது. அயர்லந்து நாட்டைச் சார்ந்த ஜான் ஷீல்ட்ஸ் (John Shields) என்பவருடைய பிறப்பிடத்தின் நினைவாக இந்தப் பெயர் அமைந்திருக்கிறது. உலகின் பெரிய ஐரிஸ் திருவிழா (Irish Festival) மூன்று நாட்கள் நிகழும் நகரம் என்ற பெருமையும் கொண்டது. நகர் முழுக்க பச்சைப் புல்வெளிகளும், நீண்ட நெடிய மரங்களும், பூங்காக்களும், கால்ஃப் மைதானங்களும், கிரிக்கெட் மைதானங்களும், நடைபாதைகளும், சிறிய ஓடைகளும், ஆறுகளும், தேவாலயங்களுமாக மனதைக் கொள்ளைகொள்ளும் சிறு நகரம்.
டப்ளின் நகரில் நான் வசிக்கும் தற்போதைய விடு முப்பது வருடம் பழைய குடியிருப்பின் பெரிய ஓடையை ஒட்டிய பலநூறு வீடுகளில் ஒன்று. வீட்டின் பின்புறக் காட்சி எப்போதும் நிலைப்படமாக மாறக் காத்திருக்கும் ஒன்று என்ற எண்ணத்தை அளிக்கும். கோடைக்காலங்களில் தூரத்து மரங்களின் பசுமையும், இலையுதிர் காலத்தில் வண்ண நிறங்களும், குளிர்காலத்தில் பனியைப் போர்த்திய ஓடையின் வெண்நிறமும் என பல காட்சிகளாக நிறங்களாக என் மனது முழுக்க நிறைந்த நகரில் அமைந்த வீடு இது.
இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் மாலை இப்போதைய வீட்டில் நான் கழிக்கவிருக்கும் இரண்டு மாலைகளில் ஒன்று. நாளை இரவுக்குள் வீட்டைத் துப்புறவு செய்து சாவியை குடியிருப்பாளர்களின் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். வீடு எடையற்று நிர்வாணமாக விரிந்து கிடக்கிறது. இந்த நகர் முழுக்க ஓட்டப்பயிற்சி செய்திருக்கிறேன், நடைப் பயிற்சி செய்திருக்கிறேன், கிரிக்கெட் விளையாட வீட்டின் அருகில் சில மைல்களில் அமைந்த எனக்குப் பிடித்த நான்கு மைதானங்களுக்குப் பயணித்திருக்கிறேன்.
வீட்டின் நுழைவு முகப்பில் ஒரு பெரிய மரம் இருக்கிறது. துளிர்காலத்தில் மரம் முழுக்க வெண்ணிற பூக்களாக ஆனால் மீன் கவிச்சி எழுப்பும் விந்தையான மரம் (Callery Pear). கோடை காலத்தில் முழுக்க பச்சை இலைகள் தாங்கி வேறொன்றாக மாறியிருக்கும். முற்றத்திலிருந்து இந்த மரத்தையும் வானில் நட்சத்திரங்களையும் பார்க்காமல் நான் உறங்கச் சென்றதில்லை.
இந்த வீட்டிலிருந்துதான் நான் என்னுடைய வலைத்தளத்தை தொடங்கினேன். எண்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், குறைந்தது பத்து சிறுகதைகளையும் எழுதியிருக்கிறேன். நான் இலக்கிய வாசகன் என்ற நிலையிலிருந்து எண்ணங்களைச் சொற்களாக மாற்றி எழுதும் திறனை வளர்த்துக்கொண்ட நாட்கள் இந்த வீட்டில் நிகழ்ந்தது. தன்னம்பிக்கை வாயந்தவானாக, மிகுந்த சலனங்களும் உணர்வுக் கொந்தளிப்பு நிறைந்தவனாக, அரோக்கியமானவனாக, மதுவைக் கொண்டாடியவனாக நான் திகழ்ந்த நாட்கள் இந்த வீட்டைச் சார்ந்தவை.
இங்கிருந்து பத்து மைல்கள் வடகிழக்காக இருக்கும் பவல் (Powell, Ohio) என்ற நகரில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்கிறேன். இடப்பெயர்வு என்பது எப்போதும் மீண்டும் நிகழ வாய்ப்பில்லாத தருணங்களின் மீதும் அடர்ந்த நினைவுகளின் மீதும் நிகழ்வதுதான். மனதில் ஆழமான நினைவேக்கமும் பிரிவாற்றாமையும் எழுகிறது.
கரூர் காளிபாளையம் எனும் சிற்றூருக்கும் பவல் என்ற இந்த அமெரிக்க சிறு நகருக்குமான பாதையை வரைந்தது யார்? இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில் என் பங்கு மிகவும் சிறியது என்று மட்டும் நிச்சயமாகச் சொல்வேன். நீண்ட நெடிய இந்தப் பாதையின் இருபுறமும் ஆர்வமுடன் வேடிக்கை பார்க்கும், பாதையின் தொலைவால் அவ்வப்போது சற்று அயர்ச்சியும் அடையும் ஒரு பயணி நான்.
Comments
Post a Comment