புதிய நகரம் - கவிதை
ஜூலை 15, 2025
நான் ஒரு அழகிய நகரில்
வாழ்கிறேன்
இங்கு மரங்கள்
நெருப்பை அணிகின்றன
ஆறு கடல் குளங்களில்
குருதி ஓடுகிறது
அணுக்கமானவர்களை
கட்டி அணைக்கையில்
கத்தியால்
மெல்ல கீறுகிறார்கள்
குழந்தைகள்
தன்னைவிடப் பெரிய
நிஜத் துப்பாக்கிகளைக் கொண்டு
வானில்
சுட்டுப் பயில்கிறார்கள்
அன்பு கருணை கண்ணீர்
போன்ற வார்த்தைகள்
உச்சரிப்புத் தடைகொண்டன
எல்லோரும்
சங்கேத வார்த்தைகளில்
பாடினார்கள்
இறப்பு வீடுகளில்
மனிதர்கள் பால் கருதாமல்
புணர்ந்தார்கள்
நான் ஒரு கவிஞனின்
இறுதிச் சடங்கிற்கு
சென்றேன்
இனிய கவிதைகள் மட்டும்
எழுதியவன்
கழுவிலேற்றப்பட்டவன்
எதிலிருந்தோ விடுபட்ட
சாயலுடன்
உறைந்த அவன் முகத்தைப்
பார்த்து
சில கவிதை வரிகளை
முணுமுணுத்துவிட்டு...
பின்
என்னுடன் இணைய
அழைத்த
பெயர் தெரியாத மிருகம்
ஒன்றுடன்
இருளில் ஒதுங்கினேன்...
நான் வாழும்
நகரம்
அழகியது.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment