2025 ம் ஆண்டு - பத்து சிறுகதைகளும், ஐம்பது விக்கெட்டுகளும்

                                                    

2025ம் ஆண்டு உத்வேகத்துடன் தொடங்கியது. கரூர் சென்று திரும்பிய டிசம்பர் 2024, ஒருநாள் விடிகாலையில் 'ஐஸ்கிரீம்' சிறுகதைக்கான கரு மனதில் உதித்தது. 'ஐஸ்கிரீம்' என்பதை ஒரு உருவகமாக வைத்து ஐம்பது வயதுப் பெண்ணின், உடல் மற்றும் மன அவசங்களைச் சொல்ல முனைந்த கதை. அதை என்னுடைய ஊரின் அண்டை வீட்டுப் பெண் ஒருவரின் பிம்பத்தை மையமாக வைத்து எழுதினேன். கொங்கு வட்டார வழக்கில் எழுதி 'சொல்வனம்' இதழுக்கு அனுப்பினேன், எந்த எதிர்வினையும் இல்லாமல் அவர்கள் பிரசுரித்தார்கள். 

ஜனவரி மாதமே 'இருபது ரூபாய்' சிறுகதையை எழுதினேன். அதையும் ஊரில் வசிக்கும், பாலிடெக்னிக் முடித்துவிட்டு பைனான்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பள்ளி நண்பன் ஒருவனை மனதில் வைத்து எழுதினேன். அந்தக் கதையும் 'சொல்வனம்' இதழில் பிப்ரவரி மாதம் வெளிவந்தது. அதே மாதம், 'உறம்பரையான்' சிறுகதையை எழுதினேன். சிறுவன் ஒருவனின் நட்பு, பிறகு அமானுஷ்ய அனுபவத்துடன் முடியும் கதையாக அதை எழுதியிருந்தேன். எழுதிய பிறகு எங்கும் அனுப்பாமல் அப்படியே வைத்திருந்தேன். அந்தக் கதை மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. மிகவும் எளிய மொழியில் அமைந்த கதை என்றும், முதிர்வற்ற படைப்பு என்றும் தோன்றியதால் தயங்கினேன்.

'அந்திமழை' இதழில் வருடாந்தர சிறுகதைக்கான போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். நண்பர் ஜெகதீஷ் குமாரிடம் பேசும்போது, அதற்கு ஒரு கதையை அனுப்பியதாகச் சொன்னார். அதனால் உந்தப்பட்டு, கதை அனுப்ப விதிக்கப்பட்ட கெடுவின் கடைசிநாள், எதையும் எதிர்பார்க்காமல் அனுப்பி வைத்தேன். பரிசு குறித்து எண்ணவில்லை, அவர்கள் பதிப்புக்காகவாவது எடுத்துக்கொள்வார்கள் என்றே எண்ணினேன். ஆச்சரியமாக, அந்தக் கதையை மூன்றாம் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் படைப்பூக்கத்துடன் இருந்தேன். அதே விசையில், 'நெடும்பாதைகள்' சிறுகதையைத் தொடங்கி சில பத்திகள் எழுதியிருந்தேன். பிறகு மனதில் பல சிதறல்கள், கதையை அப்படியே தொடராமல் விட்டுவிட்டேன். கதையுடன் போராடத் தேவையான கவனத்தை என்னால் அளிக்கமுடியவில்லை. வீடு வாங்கலாம் என்று முடிவுசெய்து, அதற்கான தேடல் மற்றும் திட்டமிடலில் அடுத்த சில மாதங்கள் கழிந்தன. இடையில் வழக்கம்போல நிறைய கிரிக்கெட் என் நேரத்தையும், கவனத்தையும் எடுத்துக்கொண்டது.

இந்த வருடம் ஐம்பது மேட்சுகள் ஆடி, ஐம்பத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்திருக்கிறேன். கொலம்பஸ் நகருக்கு வந்து நூற்று ஐம்பது விக்கெட்டுகள் எனும் எண்ணிக்கையை இந்த வருடம் அடைந்தேன். ஆயிரம் ரன்களையும் கடந்துவிட வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு நெருக்கமாக சென்று எண்ணிக்கை நின்றுவிட்டது. அடுத்த வருடம் அதைக் கடப்பேன், முப்பது நாற்பது ரன்கள் எடுத்தால் போதும்.

வீடு, கிரிக்கெட், மது என மனதைத் தொலைத்தவன் எழுத்தையும், வாசிப்பையும் சில மாதங்கள் முற்றிலும் துறந்திருந்தேன். ஜெயமோகனின் தத்துவ வகுப்புகளுக்கு பதிவு செய்திருந்தேன். அக்டோபர் மாதக் கடைசியில் அவர் வந்தார். அக்டோபர் மாதம் கிரிக்கெட் சீசன் முடிந்து வீட்டில் இருக்கும் சூழலும் அமைந்தது. ஜெயமோகன் எனும் ஆளுமை அளித்த ஊக்கத்தின் காரணமாக, பாதியில் நின்ற 'நெடும்பாதைகள்' சிறுகதையைத் தொடர்ந்து எழுதி முடித்தேன். 

எழுதி முடித்தவுடன் கதையின் மேல் எனக்கு நிறைய கேள்விகளும், நம்பிக்கை இன்மையும் இருந்தது. ஒரு ஞாயிறு இரவு 'ஆவநாழி' இதழுக்கு அனுப்பி வைத்தேன். சுதேசமித்திரமன், சில ஊக்கமான வார்த்தைகளுடன், பிரசுரத்துக்கு எடுத்துக்கொள்வதாக உடனே மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த உந்துதலில், தொடர்ச்சியாக மீண்டும் எழுதத் தொடங்கினேன்.

'பொம்மைகள்' என்று ஒரு சிறுகதையை அதற்கடுத்து எழுதினேன். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவன், மனதளவில் அடையும் சிதைவைச் சொல்லும் கதை அது. அருவமான ஒரு கதைக்கருவை மட்டும் வைத்துக்கொண்டு, சிறுகதையாக அதை எழுதி மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. ஒரு கதைக் கருவுடன் தொடர்ந்த கவனத்துடன் இருப்பதைப் பயின்றேன்.

நீண்ட நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்த கிறிஸ்துமஸ் மனநிலை குறித்த கதையை 'எழுகை' என்ற தலைப்பில் எழுதினேன். சில வாரங்களாக கதையை எப்படித் தொடங்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தவன், ஒருநாள் சனிக்கிழமை காலை ஒன்றரை மணிநேரத்தில் எழுதி முடித்துவிட்டேன். இந்தக் கதை எனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. எழுதியவுடன் தோன்றும் வழக்கமான ஐயங்கள் ஏதும் இல்லாமல் இருந்தேன். 'சொல்வனம்' இதழில் டிசம்பர் மாதம் வெளிவந்தது.

அந்தக் கதை அளித்த ஊக்கத்தில், மனதில் இருந்த சில கருக்களைத் தொடர்ந்து எழுதினேன். டிசம்பர் மாதம் முழுக்க எனக்கு நிறைய விடுமுறை நாட்கள் இருந்தன. குளிரும், தனிமையும் தரும் சோர்வும் என்னை அலைக்கழித்தன. கரூர் குறித்த நினைவேக்கம் மன அழுத்தமாக மாறியது. அதைக் கடக்கவே கதைகள் எழுதுவதில் முழுதாக ஈடுபட்டேன்.

'குளிர்மை', 'பசி', 'காலரி பியர்', 'சிபாரிசு' என டிசம்பர் மாதம் மட்டும் 'எழுகை' கதையோடு சேர்த்து ஐந்து கதைகள் எழுதினேன். மிகவும் படைப்பூக்கத்தோடும், மனக் குவிப்போடும் இருந்தேன். இந்தக் கதைகள் எதையும் இன்னும் நான் பிரசுரத்துக்கு அனுப்பவில்லை. ஒன்றிலிருந்து இன்னொரு கதைக்கு என நகர்ந்துகொண்டிருந்தேன். 

கதைகள் எழுதுவதற்கு ஆழமான மனக் குவிப்பும், தொடர் கவனமும், பலமும் தேவைப்படுகிறது. தூக்கம் அதற்கு முதன்மையானது என்பதைப் புரிந்துகொண்டேன். சொற்களோடு உறங்கச் சென்று, சொற்களோடு எழ முடியுமா என்று பார்த்தேன். தூக்கத்தையும், வாசிப்பையும் முதன்மையாக்கினேன். அக்டோபர் மாதம் முழுக்கவே மிகவும் அரிதாகவே மது அருந்தினேன். வாரம் ஒருநாள் சில கோப்பைகள் சிவப்பு ஒயின் மட்டும் அருந்தினேன். அதுவும், ஏதாவது திருப்திகரமாக எழுதினால் மட்டுமே என்று ஒரு கட்டுப்பாட்டையும் வைத்துக்கொண்டேன். மது அளிக்கும் எழுச்சியை விட, ஒரு கதை எழுதி முடித்ததும் வரும் நிறைவு அதிகம் என்பதை உணர்ந்தேன்.

இந்த வருடம் புத்தக வாசிப்பு மிகவும் பின்தங்கிவிட்டது. சென்ற ஆண்டு வாசித்ததை விட இந்த ஆண்டு பாதி அளவுதான் வாசித்திருக்கிறேன். எழுதுவது முழுதாக நிறைய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால் வாசிப்பு மட்டுமே எழுதுவதற்கான உந்துப்புள்ளி என்பதை உணர்கிறேன். ஜெயமோகனின் 'புனைவுக்களியாட்டுக் கதைகளையும்', அசோகமித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளையும் தொடர்ந்து வாசித்தேன். 'காடு' நாவலை மறு வாசிப்பு செய்தேன்.

கிரிக்கெட், மது, எழுத்து, வாசிப்பு என அனைத்துமே மனைவி ஷர்மிளா, குழந்தைகள் தீக்ஷா, குமரன் ஆகியோருடன் நான் செலவழிக்கும் நேரத்தை மிதித்து எழுபவை. இந்தச் செயல்கள் அனைத்துமே சுயநலமான செயல்பாடுகள்தான், கூட்டாகச் செய்ய முடியாது. அது குறித்த குற்ற உணர்வும் என்னிடம் இருக்கிறது.

அடுத்த வருடம் தொடங்க இன்னும் சில மணிநேரங்களே இருக்கின்றன. வாசிப்பு குறைந்ததில் ஏமாற்றம் இருக்கிறது. ஆனாலும், பத்துக் கதைகள் எழுதியிருக்கிறேன் என்பதில் நிறைவும், அடுத்த வருடம் எழுதுவதற்கான நம்பிக்கையும் மனதில் நிறைகிறது. அடுத்த வருடம் நிறைய வாசிக்கவேண்டும், எழுதவேண்டும், கிரிக்கெட் ஆட வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். வாசிப்பிலும், எழுத்திலும் ஈடுபடும் போது மனம் இயல்பாகவே மதுவைப் புறந்தள்ளுகிறது.

'வெண்முரசு' நாவல்களில் கடைசியாக 'சொல்வளர்காடு' மார்ச் மாதம் வாசித்திருக்கிறேன். அதற்கு பிறகு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. அடுத்த வருடம் மீண்டும் வெண்முரசு நாவல்களை வாசிக்கத் தொடங்கவேண்டும். தினமும் ஒரு அத்தியாயமாவது வாசிக்கவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். அது தவிர, செவ்வியல் நாவல்கள் நிறைய வாசிக்க இருக்கிறது, பார்க்கலாம். 'போரும் அமைதியும்' நாவல் இன்னும் வாசிப்பில் இருக்கிறது, அதையும் முடிக்கவேண்டும்.

இந்த வருடத்தின் உச்சம் என நான் எண்ணுவது சில நாட்கள் முன் 'காடு' நாவலின் கடைசி அத்தியாயத்தை முடிக்கையில், 'நீலி' கதவுக்கு வெளியே 'ஏமானே' என்று கெஞ்சிக்கொண்டும், அழுதுகொண்டும் இருக்கும் தருணத்தை வாசித்து மன எழுச்சியுடனும், கண்களில் கண்ணீருடனும் அமர்ந்திருந்த சில நிமிடங்களே என்று சொல்லத் தோன்றுகிறது. பெரும் நாவல்களை வாசிப்பதால் ஏற்படும் நிறைவும், நிலைகுலைவும் வாசகனாக இருப்பதன் பேரின்பங்களில் ஒன்று.

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

அமெரிக்கா, இரு வீடுகள்

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்