சித்திரச் சபை சிறுகதை, தமிழினி - ஒரு வாசிப்பு

                                                 

சுரேஷ் பிரதீப் என்ற பெயரை முதலில் கண்டுகொண்டது ஜெயமோகனின் வளைத்தளத்தில் அவர் 'குற்றமும் தண்டனையும்' நாவலுக்கு எழுதிய மதிப்புரை வாயிலாகத்தான். அந்தக் கட்டுரை ஒரு நாவலை இதனை கூர்மையாக வாசிக்க முடியுமா எனும் வியப்பை அளித்தது. இணைய இதழ்களில் அவர் எழுதும் விரிவான விமர்சனக் கட்டுரைகளால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் சியமந்தகம் இதழில் ஜெயமோகனின் சிறுகதையுலகு குறித்து மிகச் சிறந்த மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். 

தமிழினி இதழில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பின் 'சித்திரச் சபை' சிறுகதையை வாசித்தேன். சிறுகதை வாசித்தவுடன் மனதில் ஆழ்ந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. மகனிடம் அதிகாரம் செலுத்தும் தந்தை, தந்தையின் முன் சுயமைதுனம் செய்து மாட்டிக்கொள்ளும் மகன் குணசேகர், மனஓட்டங்களை விசித்திரமான ஓவியங்களாக வரையும் குணசேகரின் மனம் பிறழ்ந்த நண்பன் நசீர் உசேன், நசீரின் அன்னை ஷம்ஷாத் பேகம் என சிறுகதையின் நான்கு முக்கிய கதாப்பாத்திரங்கள். 

குணசேகர் காமத்தின் பிடியில் தவிக்கும் ஒரு இளைஞன். கண்ணில் படும் எல்லாப் பெண்களுமே புணர்வுக்கு என்று எண்ணும் பருவத்தில் இருப்பவன். தந்தை தன் மீது செலுத்தும் அதிகாரத்தை வெறுக்கிறான், தந்தையை மீறுதலே அவனுக்கான நோக்கமாக இருக்கிறது. நசீர் உசேன் குணசேகரனின் நண்பன், ஆறு பெண் பிள்ளைகளுக்குப் பிறகு ஏழாவதாகப் பிறந்தவன், வறுமையால் உடல் மெலிந்தவன். உடல் மெலிந்ததாலேயே கல்லூரியில் இழிவுக்கு உள்ளாகிறான். நாசீரின் அன்னை ஷம்சாத் பேகத்தின் கதாப்பாத்திரம் பூடகமாகவே சொல்லப்படுகிறது. கதையில் குணசேகருக்கு ஷம்ஷாத் பேகத்தின் மீது உள்ள ஈர்ப்பும் மறைமுகமாகவே வெளிப்படுகிறது.

குணசேகருக்கு தந்தை, நசீருக்கு தாய் என எதிர்மறையான விளைவுகளை இந்த இளஞர்களிடம் ஏற்படுத்தும் இரு கதாப்பாத்திரங்கள். குணசேகர் காமத்தில் திளைக்கிறான், நசீர் ஓவியத்தில் கரைகிறான். உறவுகள், சக மனிதர்கள் என சமூகம் தனி மனிதனின் மேல் செலுத்தும் ஆதிக்கம் ஆழமானது. பெரும்பாலான மனிதர்கள் இந்த அழுத்தங்களை ஒரு போர்வையால் மூடிக்கொண்டு சராசரியான வாழ்வை வாழக் கற்றுக்கொள்கிறார்கள். நசீர் போன்றவர்கள் விளிம்புக்குத் தள்ளப்பட்டு பிறழ்வடைகிறார்கள். 

கதையின் வறண்ட தஞ்சை மண்ணின் பின்மதியச் சூழல் குறித்த சித்திரம் விரிவாக வெளிப்படுகிறது. சிறுகதையில் குணசேகரின் அக ஓட்டங்களை அருவமாக இது சுட்டுகிறது. செயலற்ற மனம் ஒரு பின்மதியச் சூழலில் கொள்ளும் அலைவுகள் வாசகனாக என்னில் ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்தியது. நசீர் ஓவியன், கல்வி கற்பதைவிட ஓவியங்களில் கவனம் செலுத்துகிறான். அவன் வரையும் காமமும், வன்முறையும் பொதிந்த ஓவியங்கள் ஒரு ஆழ்மனதின் உக்கிரத்தை உணர்த்துகின்றன. 

காமமும் வன்முறையும் ஒன்றின் மற்றொரு பிம்பமே என்று உணர்த்தும் ஒரு சிறுகதை இது. சுரேஷ் பிரதீப் பிக வெளிப்படையாக இந்தக் கதையில் காமத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார், அசாத்தியமான நம்பிக்கை தெரிகிறது. அவருடைய பிற சிறுகதைகளையும், நாவல்களையும் வாசிப்பதற்கான தூண்டுதலை இந்தச் சிறுகதை எனக்கு அளிக்கிறது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை