கனவும் ஒரு இறப்புச் செய்தியும்

                              

"Paramesh Anna Dead" என்ற செய்தியுடன் அலைபேசி ஒலித்து ஒளிர்ந்துகொண்டிருந்தது - அனுப்புநர் தம்பி அருள். விடிகாலை ஐந்தரை மணி என்ற எண்களின் பிண்ணனியிலிருந்த அந்தச் செய்தியை அலைபேசியின் முகப்பைத் திறக்காமலேயே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் ஒளி அடங்கி செய்தி மறைந்தது. அந்தச் செய்திக்கு முன் சில மணிநேரங்களாக உறக்கம் நீங்கிப் புரண்டுகொண்டுதானிருந்தேன். வழக்கமான ஒரு அன்றாடச் செய்தியையும் துக்கமான இந்தச் செய்தியையும் ஒரே தொனியில் அறிவிக்கும் அலைபேசியின்மேல் ஒரு வெறுப்பு எழுந்து அடங்கியது. 

"ராஜூ, நாஞ்செத்தா ஒன்னு ஹார்ட் அட்டாக்கு இல்லன்னா எவனாவது என்னை அடிச்சுக் கொல்லுவான்".

பரமேஸ் அண்ணன் சுவற்றில் ஒரு தலைகாணியை முதுக்குக் கொடுத்து, வயிறு முன்னோக்கிப் பிதுங்கிய நிலையில் அடர்த்தியாக மூச்சுவிட்டுக்கொண்டு உதடுகளில் ஒரு கசந்த சிரிப்புடன் சொன்னார். சிவப்புக் கோடுபோட்ட டீ-சர்ட் அவருடைய கனத்த வடிவத்துக்கு வினோதமாக நெகிழ்ந்துகொடுத்துக்கொண்டிருந்தது. நான் அளித்த ஊதா நிறக் கைலியினுள் ஒரு காலை மடக்கியும், மடித்த ஒரு காலின்மேல் வலது கையை முட்டுக்கொடுத்தும் தரையில் அமர்ந்திருந்தார். அவருடைய தோற்றம் ஐந்து வயதைக் கூட்டி ஐம்பது என்றது.

"தரைல உக்காந்தே பல வருசமாச்சுடா தம்பி" என்று அசௌகரியமாக நெளிந்தார்.

கரூரில் ஒரு நில ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக வந்திருந்தார். நாள் முழுக்க நானும் தம்பியும் அவருடன் பல இடங்களில் அலைந்துவிட்டு இரவு உணவுக்குப் பின் பேசிக்கொண்டிருந்தோம். அம்மா சமைத்திருந்த ஆட்டுக்கறி வறுவலும், நீர்த்த கறிக்குழம்பும், எறுமைத் தயிரும் அவரை மிகவும் தளர்த்தியிருந்தது.

"கரூர்ல மட்டுந்தான் இவ்ளோ ருசியான தயிர் கெடைக்குது சித்தி".

அவருடைய உருவம் முதல் தலைமுறைப் பணக்காரர் என்று அப்பட்டமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. இந்தச் செய்தி தொழில்வட்டத்தில் ஒரு பலகீனம் என்பதால் அதை வெளிக்காட்டாத ஒரு உடல்மொழியைப் பயின்றிருந்தார். தலைமுறைகளாகப் பணத்தில் ஊறியவன் எனும் பாவனையைக் காட்ட கண்களில் ஒரு நூதனமான உதாசீனத்தையும் சூட்டிக்கொண்டார்.

எங்கள் குடும்பத்தில் அம்மாவுடன் பிறந்த ஐந்து சகோதரிகளின் வாரிசுகள் என அண்ணன் தம்பிகள் ஆறுபேர் - எனக்கு இரண்டு அண்ணன்கள், நான்கு தம்பிகள், என்னுடைய உடன்பிறந்த தம்பி அருள் உட்பட. பரமேஸ் அண்ணன் பெரம்பலூர் பெரியம்மாவின் மைந்தர். எட்டாவதுடன் படிப்பை முடித்துக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி சரக்குந்து ஒன்றில் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார். பின் போலி விசாவில் ஜப்பான் சென்று, கடுமையான உடலுழைப்பில் பணம்சேர்த்து எட்டு வருங்கள் கழித்து ஊருக்குத் திரும்பினார். முதலில் ஒரு சரக்குந்து வாங்கியர், பத்து வருடங்களில் இருபத்தேழு நீர்தாங்கிகளுக்கு உரிமையாளராக உருவெடுத்தார். திருச்சி நகரம் முழுக்க மருத்துவமனைகள், பெரிய விடுதிகள் என காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்து விநியோகித்துக்கொண்டிருக்கிறார். அசுர வேகத்தில் கோடீஸ்வரரானவர், களத்தில் சில கடுமையான தொழில்முறைப் போட்டியாளர்களுக்கும், உடலுக்குள் சில நோய்களுக்கும் இடம்கொடுத்திருந்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன் வேப்பூர் அருகே ஒரு கும்பல் அவரை அடித்து சாலையின் பக்காவாட்டில் வீசியெறிந்திருந்தது. அவரே மீண்டெழுந்து வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அமர்த்திக்கொண்டார். தன் தொடர்புகளால் போலீசுக்குத் தெரியாமல் அந்த மருத்துவமனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு செய்திருந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பின் இன்னும் தீவிரமாகத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தன் தொடர்புகளையும் பெரிதாக்கிக்கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களாக கரூரில் டெக்ஸ்டைல் உரிமையாளர்களுக்கு அணுக்கமான ஃபைனான்ஸியராக உருவெடுத்திருந்தார். அவருடைய மூன்றரை கோடிப் பணம் கரூர் நகரத்தில் பல வடிவங்களில் புழங்கிக்கொண்டிருந்தது. 

"நீ இங்கியே இருதிருந்தா இன்னும் நல்லா இருக்குன்டா".

குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதாலும் வெளிநாடு வாழ் இந்தியன் என்பதாலும் என்மேல் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார். அவருடைய அசுர வளர்ச்சியின்மேல் இருந்த ஒரு விலகலும், அவர் குறித்து எங்கள் குடும்ப உறவுகளுக்குள் அலையும் அசாதாரணமான ஊகங்களும், கதைகளுமாக அவர் எனக்குள் ஒரு விசித்திர பிம்பமாகவே நிலைத்தார். அவரும் எங்கள் குடும்ப உறவுகளிடமிருந்து தொலைவைக் கடைப்பிடித்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் முற்றிலுமாக மாறிவிட்டார் என்றும் மிகுந்த கனிவுடன் பழகுகிறார் என்றும் அருள் சொல்லியிருக்கிறான். 

முதலில் மிகுந்த முன்கோபக்காரர் என்று பெயரெடுத்தவர், கடந்த சில வருடங்களாக மிகவும் இளகிய மனதுடன் உறவுகளிடம் தன்னை முன்னிருத்திக்கொண்டிருந்தார். குடும்ப நிகழ்வுகளில் தலைமை தாங்கி எங்கள் அனைவருக்குமான முகமாக மாறினார். ஊர்த் திருவிழாக்களுக்கு பெரிய நிதிக்கொடையும், தெருக்களைக் கழுவ இருபது வண்டிகளில் தண்ணீரும் அளிக்கத் தயங்காதவர். படிப்பு, ஒழுக்கம், நிலையான வேலை என சாகசமற்ற வாழ்வை அடையப் பயின்ற எனக்கும் தம்பிக்கும் இளம் வயதிலேயே அவருடைய ஆளுமையின்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. 

"அவரு கிராமத்து தோட்டத்துல ஒரு ஃபார்ம் ஹவுஸ் கட்டி வருசம் ஒருதடவ நாம அண்ணன் தம்பிங்கல்லாம் ஒன்னா இருக்கனும்னு சொன்னார்டா".

நோய்கள் இரக்கமற்றவை, மனிதனைப் பலகீனமாக்கி ரசிப்பவை. அதன் இன்னொரு நிலை உள்ளத்தை மிகவும் கனிவுள்ளதாக மாற்றிவிடுகிறது. நாம் சுற்றத்தின் நினைவுகளில் எவ்வாறு நிலைக்கவிருக்கிறோம் என்ற பிரக்ஞை வாட்டியெடுக்கிறது. கடந்த சிலவருடங்களுக்குள்ளான அவருடைய மாற்றத்தை இப்படித்தான் நான் புரிந்துகொண்டிருந்தேன்.

"நீ தம்பி பொறந்தச் சொல்லாததுல அவருக்கு கொஞ்சம் வருத்தம். உன்னக் கோவிச்சுக்கிட்டாரு, நீ ஒருதடவ பேசீரு" என்றான். ஏனோ ஒரு தயக்கம், அவரிடம் அழைத்துப் பேச நான் முயலவில்லை. அயல்வாழ்வு தூரம் மனம் என்று உறவுகளிடமிருந்து என்னைத் தொலைதூரம் கொண்டு நிறுத்திவிட்டது.

அவரை என் பள்ளிப்பருவத்தின் கோடைவிடுமுறைகளில் பார்த்த அண்ணனாகவே காண விரும்பினேன். தோட்டத்திலிருந்து இளநீர்க் குலைகளையும், பப்பாளிப் பழங்களையும் தோளில் சுமந்துகொண்டு மாடுகளுடன் விரிந்த புன்னகை தவிழ அவர் வீடு திரும்பி "வாடா ராஜூ" என்று விரும்தோம்பிய தோற்றம் என்னால் மறக்கவியலாதது. காலம் அவரை வேறொரு மனிதனாக மாற்றிக் களித்தது. 

படுக்கையறையிலிருந்து வெளியேறி, 

"என்னடா சொல்ற" என்றேன். 

"கொரொனாடா, அண்ணிக்கும் அவருக்கும் ஒரே நேரத்துலதான் வந்திருக்கு, ஒரு வாரம் வீட்லயே ட்ரீட்மெட் எடுத்துக்காம இருந்திருக்காங்க. போனவாரந்தான் ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிடல் போயிருக்காங்க. ஹாஸ்பிடல் எல்லாம் ஃபுல்லு, அப்புறாம் ஒரு சின்ன எடத்தில அட்மிட் ஆயிருக்காங்க போல". அவர் ஓடி ஓடித் தண்ணீர் விநியோகித்த மருத்துவமனைகளும், பெரிய இடத்துத் தொடர்புகளும் அவரைக் கைவிட்டிருந்தன. 

மனதில் வெறுமையும் சோர்வும் சுழன்றுகொண்டிருந்தது. இரண்டு இளம் மகன்களுக்குத் தந்தை, ஒருவனுக்கு ஏழு வயது, மூத்தவனுக்குப் பதினொன்று.

"ஆம்புலன்ஸ்லயே ஏற மாட்டேன்னு ஒரே பிரச்சன போல. ஒரு மாசம் முன்னாடி கூட கரூர் வந்தப்ப எனக்கெல்லாம் ஒன்னும் வராதுடான்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. நாந்தான் கொஞ்சம் கவனமா இருங்கண்ணேன்னு சொன்னேன்".

அவருடைய இயல்பு அப்படி. பிடிவாதமாகத் தொழில் கற்றுக்கொண்டு வீம்புடன் சமூகத்தில் தன்னை முன்னிருத்திக்கொண்டவர். அவர்மேல் அர்த்தமற்ற கோபம் எழுந்தது. உலகை நீங்கிவிட்ட ஒரு மனிதனிடம் ஏற்படும் கோபத்தின் பயனென்ன?.

"ஹாஸ்பிடல்லகூட வயரயெல்லாம் பிடிங்கிவிட்ருக்காரு. நர்ஸுங்க ரொம்பக் கஸ்டப்பட்டிருக்காங்க".

"ஏன் வாசைன் போட்டுக்கலயா?".

"ரெஜிஸ்டர் பண்ணி வெச்சிருந்திருக்காங்க, என்னாச்சுன்னு தெரியல".

"அண்ணி எப்படி இருக்காங்க?".

"அவங்களுக்கு சரியாயிருச்சு. ஒரே ஒரு ரெம்டெசிவிர்தான் இருந்திருக்கு, அத அண்ணிக்குக் கொடுக்கச் சொல்லியிருக்காரு", கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

இந்தச் செய்தி அறிந்த சில மணிநேரங்களுக்குமுன் வந்த கனவில் பரமேஸ் அண்ணன் ஒரு தொழில்முறைக் கூட்டத்திலிருந்தார். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைக்கையில்தான் விழித்தேன். நீண்ட காலமாகத் தொடர்பிலில்லாத ஒரு உறவை ஆழ்மனம் என்முன் நிறுத்தியதற்கான காரணங்களைத் தேடிப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன்.

"எத்தன மணிக்குத் தவறினாரு?", இந்தக் கேள்வியை என் மனம் குறுஞ்செய்தியைக் கண்ட அடுத்தகணமே உருவாக்கிக்கொண்டுவிட்டது. வெளிப்பாட்டிற்கான தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன்.

"இப்பதான் ஒருமணிநேரமாச்சு".

'அவர் இறந்து மூன்று மணிநேரங்களாகிவிட்டன' என்று அவனிடம் சொல்ல விரும்பி அந்த எண்ணத்தைத் தவிர்த்தேன். அவருடைய இறப்பையும் எனக்கேற்பட்ட கனவையும் தற்செயல் என்று வகைப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. இரு நிகழ்வுகளுக்கிடையிலும் தர்க்கங்களுக்கடங்காத ஒரு இசைவு இருக்கிறது, அது எனக்குமட்டுமேயானது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை