கரூர் டைரீஸ், கவிஞர் போகன் சங்கர், ஒரு சந்திப்பு - 8
போகன் சங்கர் எனும் பெயரை ஜெயமோகனின் தளத்தில் அவருடைய கவிதைகள் சார்ந்து எழுதியிருந்த குறிப்புகளினூடாக அறிந்துகொண்டேன். பிறகு 'தடித்த கண்ணாடி போட்ட பூனை' எனும் தொகுப்பை சில வருடங்களுக்கு முன் வாசித்தேன், மிகச் சிறந்த கவிதைகள் அதிலிருந்தன.
2020ம் ஆண்டு கவிஞர் விக்ரமாதித்யனுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழாவில் போகன் சங்கரை சந்தித்து ஒரு சிறு அறிமுகம் செய்துகொண்டேன். 'தடித்த கண்ணாடி போட்ட பூனை' தொகுப்பிலிருந்த ஒரு நீள்கவிதை குறித்தும் அவரிடம் பேசியிருந்தேன். அந்தக் கவிதையில் கவிஞன் கோவாவில் போதையிலிருக்கும் ஒரு ஹிப்பியுடன் இரவைக் கழிப்பான். அவர்களுடையை அறையில் உள்ள மாதா புகைப்படத்தின் மீது கலங்கரை விளக்கின் வெளிச்சம் விழுந்து மறைந்துகொண்டிருப்பதாக ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்தக் கவிதையை ஒரு சிறுகதையாக எழுதியிருக்கவேண்டும் என்றும், சோம்பேறித்தனம் காரணமாக கவிதையாக எழுதியதையும் வெகு இயல்பாகப் பகிர்ந்துகொண்டார்.
சென்ற வருடம் போகன் சங்கருடைய 'வெறுங்கால் பாதை' தொகுப்பை வாசித்துவிட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன், kavithaigal.in தளத்தில் அது வெளிவந்தது. அதிலிருந்த சிறந்த கவிதைகள் என்னை ஒரு கட்டுரையாக எழுதத் தூண்டின. சில மாதங்களுக்கு முன் 'திரிபுகால ஞானி' எனும் தொகுப்பையும் வாசித்தேன். ஒரு வாசகனாக மிகுந்த உத்வேகத்தோடு தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கையில், வாசிப்பில் மனம் ஒட்டாமல் பல வாரங்களை வீணாக்கிக்கொண்டு அதனால் ஏற்படும் குற்றஉணர்வால் பீடிக்கப்பட்டும் இருப்பவன் நான். அந்த தருணங்களில் மாஸ்டர்களின் கவிதைகளை வாசித்து சற்று ஆற்றுப்படுத்திக்கொள்வேன், குறிப்பாக கவிஞர் அபியின் கவிதைகள்.
இந்தச் செயலை வாசிப்புக்கான அடிப்படைகளுக்குச் செல்லும் ஒன்றாக நான் கருதுகிறேன். சமீபத்தில் கவிஞர் போகன் சங்கருடைய கவிதைகளை மீள்வாசிப்பு செய்பவனாக மாறியிருக்கிறேன். அவருடைய கவிதைகளில் உள்ள சொற்சிக்கனம், தீட்டிய கத்தியைப் போன்ற வரிகள், உணர்வுகளை வாசகனில் ஆழமாக விதைக்கும் தன்மை, நேரடியான மொழி என நம்மை மீண்டும் வாசிக்க வைக்கும் பண்புகள் அதிகம். அவர் கவிதைத் தொழிநுட்பத்தை எப்படி கையாளுகிறார் என்பதையும் கூர்ந்து நோக்குகிறேன்.
2023ம் ஆண்டு குருநித்யா காவிய முகாமில் போகன் சங்கருக்கு அருகிலேயே அமர்ந்திருந்தேன். நிகழ்வுகளில் தொடர்ச்சியாக தன் கருத்துக்களை பல புத்தகங்களை மேற்கோள் காட்டி முன்வைத்துக்கொண்டே இருந்தார். முகாமில் முதல் நிகழ்வு கடலூர் சீனுவின் கவிதைகள் குறித்த ஒன்று. அதில் கவிஞர் துரையின் 'முகம்' கவிதை குறித்த விவாதம் எழுந்தது. ஒரு தருணத்தில் "நான் ஒரு கவிஞன், என்னால் எத்தகைய கூரிய உணர்வுகளையும் கவிதைகளில் தருவிக்க முடியும்" என்று செருக்கோடு சொன்னார். ஜெயமோகன் பல முறை "போகன் உங்களுடைய கருத்து என்ன?" என்று அவரை விவாதங்களில் உள்ளிழுத்தார்.
இன்னொரு நிகழ்வில் விக்னேஸ் ஹரிஹரன் ஃப்ராங்க் ஒஹாராவின் 'Lana Turner has collapsed' கவிதை குறித்து நீண்ட ஒரு உரையை ஆற்றியிருந்தார். அவர் உரையில் தீவிரமான வாசிப்பும் உழைப்பும் இருந்தாலும், அந்த கவிதையை முன்வைத்து இத்தனை மெனக்கெடலா எனும் அதிருப்தி எனக்கு ஆழமாகவே எழுந்தது, சற்று எரிச்சலும் உருவாகியது, மிக எளிய ஒரு பகடிக் கவிதை அது. அதீதமாக ஒரு கவிதையை அலசுவதில் உள்ள குறைபாடுகளை போகன் சங்கர் சற்று அசூயையோடு சொன்னார். அருகிலிருந்த கவிஞர் மோகனரங்கனும் இதே உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
முகாமின் இரண்டாம் நாள் இரவு அமர்வில் 'நவீனக் கவிதைகளின் போக்கு' எனும் தலைப்பில் போகன் ஒரு உரையாற்றினார். அதில் தன்னுடைய வாழ்வின் இந்த கட்டத்தில் கவிதைகளில் ஒரு ஆற்றுப்படுத்தும் தன்மையை எதிர்பார்ப்பதாகவும் (solace), இன்றைய கவிஞர்கள் பலர் போலியாகவும், பாவனையாகவும் தீவிர உணர்வுகளைப் புனைவதாகவும் சொன்னார். கவிஞர் மதார், ஆனந்த் குமார் ஆகியோர் இந்த மனநிலைகளுக்கு எதிரான சிறந்த கவிதைகளை எழுதினாலும், அடிப்படையாக அவர்கள் தனக்கான தத்துவப் பின்புலம் இல்லாமல் இருக்கிறார்களோ என ஐயப்படுவதாகவும் சொன்னார். போகன் நிகழ்வில் சற்று உடல் தளர்ந்திருந்தார், அமர்ந்துகொண்டே உரையாற்றினார்.
தேவதேவனின் தொடக்க கால கவிதைகளில் ஒன்றையும், தற்போதைய கவிதைகளில் ஒன்றையும் வாசித்து அதில் கவிஞராக அவர் அடைந்த மாற்றத்தை ஒப்பிட்டு விவரித்தார். தொடக்க கால கவிதையில் குடிப் பழக்கம் குறித்து அருவருப்பு தொனிக்கும் சில வரிகள் இருந்தன, மிகச் சாதாரணமான கவிதை அது. தேவதேவனின் தற்போதைய கவிதைகளில் இயற்கை குறித்த ஒன்றை வாசித்துவிட்டு, இந்தக் கவிதை குறித்து நான் கருத்தெல்லாம் சொல்லமாட்டேன் என்றும் கூறினார். கவிஞர் பெருந்தேவி கவிதைகளில் சீற்றம் இருந்தாலும், மிகவும் மெல்லிய உணர்வுகளையும், அமைதியையும் கடத்த அவர் ஸ்ரீவள்ளி எனற புனைப் பெயரில் எழுதுவதையும் முன்வைத்தார்.
என் அருகிலிருந்த கவிஞர் ஆனந்த் குமார் போகனின் இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளவிலை, ஆனால் அதற்கான எதிர்வினையை அவர் தீர்க்கமாக முன்வைக்கவும் இல்லை. எனக்கு போகனின் கூற்று ஆச்சரியாமாக இருந்தது. அவருடைய பெரும்பாலான கவிதைகளில் வாழ்வில் உள்ள கசப்புகளும், முரண்களும், அபத்தங்களுமே வெளிப்பட்டிருக்கும். ஆனால் கவிதைகளில் ஒரு வாசகனாக எதிர்பார்ப்பது அமைதியை என்று சொன்னது குறித்து அவரிடம் கேட்க எண்ணினேன். ஆனால் நிகழ்வில் அனைவரின் முன்னிலையிலும் அதைக் கேட்க ஒரு தயக்கம் இருந்தது. அவருடன் தனித்த உரையாடல் ஒன்று அமையும் சூழலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
போகன் முன்வைத்த இன்னொரு மிக மிக்கியமான கருத்து இன்றைய புனைவெழுத்தாளர்கள் ஏன் விவிலியத்தை வாசிக்கவேண்டும் என்பதைக் குறித்தது. விவிலியம் முழுக்க வாழ்வின் அனைத்து அடிப்படைத் தருணங்களும் தீர்க்கமாக நிகழ்வுகளினூடாக முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் ஒரு எழுத்தாளனைத் தூண்டும் கச்சாப் பொருட்கள் கணிசமாக உண்டு என்றும் கூறினார். அவருடைய கவிதைகளிலும் கிறித்துவம் குறித்தவை நிறைய உண்டு. மிக விரிவான வாசிப்பு பின்புலம் உள்ளவர் என்பதை அவருடைய பேச்சில் நான் உணர்ந்துகொண்டே இருந்தேன்.
முகாமின் மூன்றாம் நாள் காலை அற்புதமாக விடிந்தது. தற்காலிக குடிலில் மெல்லிய குளிருடன் ஆழமான உறக்கமும், முகாமில் இரண்டு நாட்களும் அரிய அனுபவங்கள் அமைந்த நிறைவும் இருந்தது. எல்லோரும் உணவுக் கூடத்தில் இருக்கையில் போகன் சங்கர் தனியாக ஒரு கல் நாற்காலியில் அமர்ந்து வெயில் பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் ஒரு வாசகர் அவரிடம் நாவல்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். நான் காலை உணவைத் தவிர்த்துவிட்டு அவரிடம் சென்று உரையாடச் சென்றேன். அவரை ஒரு மாஸ்டர் என்று கருதுவதையும், தொடர்ச்சியாக கவிதைகளை வாசிப்பதையும் சொல்லிவிட்டு உரையாடலைத் தொடங்கினேன்.
முந்தைய நாள் நிகழ்வில் அவர் வெளிப்படுத்திய கருத்திற்கும், அவருடைய கவிதைகளில் உள்ள முரணுக்குமான காரணத்தை விவரிக்க முடியுமா என்று கேட்டேன். மிக விரிவான ஒரு பதிலைக் கூறினார். கவிதைகளில் உள்ள கசப்புகளும், அபத்தங்களும் தன்னுடைய வாழ்வனுபவங்கள் சார்ந்தவை என்றும், அதை வாசகனுக்கு கடத்துவதன் அவசியம் கருதியும், மனதில் இருந்து அவற்றை அகற்றிவிட வேண்டிய தேவைகள் கருதியும் எழுதுவதாகக் கூறினார். நான் எழுதிய கட்டுரையை முன்னரே அலைபேசியில் திறந்து வைத்திருந்தேன். அவருக்கு அதில் சில கவிதைகளை வாசித்தும் காட்டினேன்.
கவிதைகளில் இருக்கும் வலி என்பது தன்னுடைய வாழ்வு சார்ந்தது என்று கூறினார். அவருடைய கவிதைகள் ஒரு வாசகனாக என்னைத் தொடுவது, என்னுடைய வாழ்வின் துயரங்களை எங்கோ ஒரு புள்ளியில் தீண்டுவதால் இருக்கலாம் என்றும் தீர்க்கமாகச் சொன்னார். அவருடைய பேச்சில் கார்ல் யுங் வந்துகொண்டே இருந்தார். என்னுடைய வயதை ஒருமுறை கேட்டுக்கொண்டார் "உங்களுக்கு என்ன முப்பது வயசு இருக்குமா?".
உரையாடலில் நான் வாசித்துக் காட்டிய கவிதைகளில் இரண்டு கவிதைகளுக்கான உந்துதலையும், உண்மை நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். 'நகரம் என்பது மாபெரும் திங்கட்கிழமை' என்று தொடங்கும் கவிதையில் சென்னை திருவல்லிக்கேணியின் சிறிய மேன்சனில் வேலையில்லாமல் இருக்கும் ஒருவனைப் பற்றிய கவிதை அது. தான் கண்ட ஒரு காட்சியையே கவிதையாக மாறியதை விவரித்தார்.
ஒரு மனிதனாக கசப்பான சூழல்களில் தன்னுடைய கடமையைச் செய்ய எண்ணித் தோற்பதையும், வாழ்வின் பாதையில் அந்த நிகழ்வுகளை மறந்துவிட்டு நகர்வதன் நிதர்சனங்களையும் விவரித்தார். பத்து நிடங்கள் கழித்து இந்த உரையாடலில் கவிஞர் தேவதேவனும், எங்களைச் சுற்றி ஒரு ஏழெட்டு வாசகர்களும் கூடிவிட்டார்கள். நான் தொடர்ச்சியாக என்னுடைய கேள்விகளை அவரிடம் முன்வைத்துக்கொண்டிருந்தேன்.
கவிதைகளின் வடிவம் குறித்து அவருடைய பெரும்பாலான கவிதைகள் ஏன் குறுங்கவிதைகளாக இருக்கின்றன என்று கேட்டேன். அதற்கு முகநூலில் எழுதுவதையும், உடனடியாக வாசகனின் கவனத்தைக் கோரவேண்டிய அவசியத்தையும் காரணங்களாக முன்வைத்தார். தான் மிகவும் அழுத்தமான பணிச்சூழலில் இருப்பதாகவும், நேரமின்மை நீள் கவிதைகள் எழுத ஒரு தடையாக இருப்பதையும் விளக்கினார். ஒரு அனுபவத்தை சரியாக கடத்துகிறோமா என்றே தான் பார்ப்பதாகவும், குறுங்கவிதைகள் அதற்கு உதவுகின்றன என்றும் கூறினார். தான் சில நீள் கவிதைகளும் எழுதியிருப்பதைக் கூறினார். 'தடித்த கண்ணாடி போட்ட பூனை' தொகுப்பில் இருந்த ஹிப்பி குறித்த கவிதையை எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
உரையாடலின் சுவாரசியத்தில் ஒரு மணிநேரம் கடந்த பிரக்ஞையே இல்லை, எங்களைச் சுற்றி இன்னும் சில வாசகர்கள் கூடிவிட்டார்கள். அவருடன் ஒரு புகைப்படம் கோரினேன், அருகில் தேவதேவனும் இருந்தார். உடனிருந்த வாசகர் தேவதேவனையும் புகைப்படத்துக்கு அழைத்துவிட்டார். போகன் சங்கருடன் தனியாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவே விரும்பினேன், ஆனால் அதைச் சொல்ல எனக்கு ஒரு தயக்கம். இதே போன்ற ஒரு நிலை கவிஞர் விக்ரமாதித்யனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கும் நேர்ந்தது. அவர் அருகிலிருந்த கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணனை அழைத்துக்கொண்டார்.
எப்போதும் இரண்டு கவிஞர்களாகவே புகைப்படங்களில் எனக்கு அமைகிறார்கள். தேவதேவனை அடுத்து போகன் சங்கருடன் கூர்ந்த விரிவான ஒரு உரையாடல் அமைந்தது எனக்கு மிகவும் நிறைவை அளித்தது. எழுத்தாளர் ஜெயமோகன் வாசகர்களிடம் நிகழ்வுகள் கடந்து எழுத்தாளுமைகளுடன் தனிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்துமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார். காவிய முகாமை நிகழ்த்துவதன் முதன்மைக் காரணங்களில் ஒன்று எழுத்தாளர்களுடன் நேரடியான உரையாடலுக்கான களம் அமைப்பதையே என்றும் வலியுறுத்தினார்.
போகன் சங்கருடைய தொகுப்பு குறித்து கட்டுரை எழுதியதையோ, என்னுடைய பெயர் என்ன என்பதையோ அவருக்கு நான் தெரிவிக்கவில்லை. உரையாடலின் சுவாரசியத்திலும், என்னுடைய உள்ளார்ந்த தயக்க உணர்வினாலும் இதை நான் செய்யவில்லை. எண்ணிப் பார்த்தால் அது அவ்வளவு முக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகிறது. அடுத்த சந்திப்பில் அவர் என்னை நினைவுகூரலாம், பார்ப்போம்.
Comments
Post a Comment