கரூர் டைரீஸ், கவிஞர் தேவதேவன், ஒரு சந்திப்பு - 7

                                                

பத்துவருடங்கள் இருக்கலாம், கல்யாண்ஜி கவிதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். கவிதைகளின் மேல் இயல்பான ஒரு ஈர்ப்பு இருந்தது. மொழியின் சுருங்கிய வடிவத்தில், கவித்துவமான உவமைகளில், நம் உள்ளார்ந்த உணர்வுகளைத் தீண்டும் இலக்கிய வடிவமாக கவிதைகள் இருந்தன. படிமம் என்ற வார்த்தையோ அதன் அர்த்தமோ அப்போது தெரியாது. சென்னையிலிருந்து கரூருக்கு வாரம் ஒருமுறை வந்துவிடுவேன், ஞாயிறன்று மங்களூர் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்புவேன். கை(பை)யில் எப்போதும் புத்தங்கள் இருக்கும். கவிதைத் தொகுப்புகள் அளவில் சிறியவையாக இருந்தமையால் பயணங்களில் இலகுவாக எடுத்துச் செல்ல முடிந்தது.

கல்யாண்ஜி கவிதைகள் எனக்கு பிடிக்கக் காரணம் அதிலிருந்த மண் சார்ந்த தன்மை (Nativity). அவர் வசிக்கும் திருநெல்வேலியைச் சார்ந்த காட்சிகளைக் கவிதைகளில் துல்லியமாகக் கையாண்டிருப்பார். எந்த வாசகனும் ஈடுபடும் இலக்கிய வகைமைகளில் அடுத்து என்ன என்றே சிந்திப்பான் இல்லையா? நானும் அவரிடமிருந்து தேவதேவனுக்கு நகர்ந்தேன். இந்த நகர்வுக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் தளம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

தேவதேவனை முதலில் நான் கண்டுகொண்டது இந்தக் கவிதை வரிகளினூடாக, 

"அமைதி என்பது 
மரணத் தருவாயோ?
வந்தமர்ந்த பறவையினால் 
அசையும் கிளையோ?"

இந்த வரிகளை வாசித்ததும் என்னில் படர்ந்த பரவசம், நிலைகொள்ளாமை ஆகிய உணர்வுகள் இன்றும் நினைவிலிருக்கின்றன. இந்தக் கவிதை வரிகளுக்கு இன்னும் எனக்கு அர்த்தம் தெரியாது, தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. கவிதைகள் அர்த்தப் புரிதல் எனும் வரையறையை உடைப்பவை. இந்தக் கவிதையிலிருக்கும் வார்த்தைகளின் செறிவு (அமைதி, மரணம், அசையும் கிளை, பறவை), அவை இணைந்து உருவாக்கிய உணர்வெழுச்சி ஆகியவையே என்னை ஆட்கொள்ளக் காரணம் என இன்று உணர்கிறேன்.

தேவதேவனுடைய கவிதைகளை இயல்பாக தேடத் தொடங்கினேன், தொகுப்புகளை வாங்கினேன். தேவதேவன் கவிதைகள் குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளைக் கூர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் தேவதேவனைத் தவிற எதையும் வாசிக்கவில்லை, ஒரு பைத்திய நிலை என்று சொல்லலாம். ஒரு வருட காலம் இருக்கலாம், தேவதேவனுடைய தளத்தில் இருந்த கவிதைகளையும் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

அவரிடமிருந்து கவிஞர் அபிக்கு சென்றவன் பிறகு தேவதேவனை அவ்வப்போது மட்டுமே வாசிப்பவனாக மாறினேன். ஒரு கவிஞராக, கவி எனும் ஆளுமையாக தேவதேவன் குறித்த ஒரு பிரமிப்பு எப்போதும் என்னில் இருந்தது, இன்றும் இருக்கிறது. இந்த வருட கரூர் பயணத்தில் வெள்ளிமலையில் நிகழ்ந்த குருநித்யா காவிய முகாமில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவரைப் புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்தவன், நேரில் கண்ட தருணம் அற்புதமானது. 

ஐந்தடிக்கு சற்று அதிகமான உயரம், நரைத்த தலை, தாடி, தோள்பை என புகைப்படங்களின் பிம்பத்திற்கு சற்றும் விலகாமலிருந்தார். முதல் நாள் கவிதை நிகழ்வுகளுடன் முகாம் தொடங்கியது. முன் வரிசையில் அமர்ந்திருந்தவர் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். என் கண்கள் இயல்காக அவரைத் தொடர்ந்துகொண்டிருந்தன. என் அருகிலும் கவிஞர்களின் குழாம் தான், போகன் சங்கர், மோகனரங்கன் இருவரும்.

மாலை நிகழ்வுகளுக்கு இடையில் ஒரு மணிநேரம் நடை செல்வதற்கான நேரத்தில் அவர் தனியாக நடப்பதைக் கண்டு ஆர்வத்துடன் பேசத் தொடங்கினேன். தன்னறம் வெளியீட்டில் அவருடைய பதிப்பாகாத கவிதைகள் இரு பெருந்தொகுப்புகளாக வெளிவந்தன. அவற்றை சென்ற வருடமே நண்பரிடம் வாங்கி வைக்கச் சொல்லியிருந்தேன், கரூர் சென்றவுடன் வாசிக்கத்தொடங்கினேன்.

இந்த தொகுப்பிலிருந்து நினைவிலெழுந்த கவிதைகளை ஆர்வமாக, சற்று பதற்றமாக அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதில் அவருடைய 'கைப்பை' குறித்த கவிதையைச் சொன்னதும், "எனக்கு தெரியும், அந்தக் கவிதைக்கு ஒரு வாசகன் எப்பவாவது வந்துவிடுவான் என்று" என சிலாகித்தார். உரையாடலில் இதற்குபின் இருவருக்கும் உற்சாகம் மிகுந்துவிட்டது. கவிதைகளைத் தவிற எதையுமே பேசாதவராகவே இருக்கிறார். கவிஞர் மதாரும், ஆனந்த் குமாரும் அவருடைய இந்த இயல்பைக் குறித்து உரையாடல்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை நேரில் உணர்ந்துகொண்டிருந்தேன்.

என்னுடைய தோளில் கைகளைப் போட்டுக்கொண்டார், சில நிமிடங்கள் வரை விலக்கவே இல்லை. ஒருகட்டத்தில் அவரிடம் ஆர்வத்திலும், பதற்றத்திலும் "படிமத்துக்கும் உவமைக்குமான வேறுபாடாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்" என்று கேட்டுவிட்டேன். மிக அடிப்படையான கேள்வி, அவருடைய வார்த்தைகளில் எப்படி பதில் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பே காரணம். ஆனால் முன்னால் சென்றுகொண்டிருந்த ஜெயமோகனிடம் கேள்வியைக் கடத்திவிட்டார். 

ஜெயமோகன் அவருடைய வழக்கமான கிண்டலில் "பூவ பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம்" என்று சொல்லிவிட்டு, பல்வேறு அர்த்த சாத்தியங்களை வாசிப்பில் அளிக்கும் தன்மைகொண்டவையே படிமங்கள், ஒன்றைச் மட்டும் சுட்ட இன்னொன்றைப் பயன்படுத்துவது உவமை. எனக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது, ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று என்னை நானே கடிந்துகொண்டேன். அருகில் இருந்த ஒரு நண்பர் உடனே, "சார், அப்படீன்னா" என்று ஆரம்பித்தார். ஜெயமோகன் "ஓரு கருத்த சொல்லி இன்னும் ஒரு நிமிசம் கூட ஆகல, அத கொஞ்சமாவது மனசில ஏத்திக்க அவகாசம் வேண்டாமா, உடனே அடுக்கடுக்கா கேள்வி கேட்கிறது சரியா?" என்று சற்று நகைச்சுவையாகக் கடிந்துகொண்டார்.

தேவதேவன் என்னிடம் "போல என்று எழுதப்படுவதெல்லாம் உவமைகளும் அல்ல" என்று சொன்னார். இடையில் உரையாடல் அங்கு அமைந்திருந்த ஒரு கல்சுவர் மீது படிந்தது. "எவ்வளவு அழகா இருக்கு பாருங்க" என்று அதன் அழகைச் சொல்லி சிலாகித்தார். "இதுக்குமேல நாம செமென்ட பூசி குலைச்சிடுறோம்" என்று சற்று வருத்தமும் அடைந்தார். அவர் குறித்து என்னில் இதுவரை உருவாகியிருந்த பிம்பம் அப்படியே குலையாமல் இருந்தது. அங்கு அவரிடம் ஒரு புகைப்படம் எடுக்க கோரலாமா என்று மனம் அரற்றிக்கொண்டே இருந்தது, ஆனாலும் தயக்கம், கேட்கவில்லை.

மறுநாள் காலை தேனீர் இடைவேளையில் அவருடன் ஒரு புகைப்படம் கோரினேன், மகிழ்வாக சம்மதித்தார். முதலில் எடுத்த படத்தில் எங்களுக்குப் பின் சூரிய ஒளி இருந்ததால் நன்றாக வரவில்லை. அதை வாங்கிப் பார்த்தவர், பிண்ணனியில் இருந்த மலைகளையும், தூரத்து கிராமத்தையும், வயல்வெளிகளையும் கண்டு, "அழகா இருக்கு, பத்திரமா வெச்சுக்கோங்க" என்று சொன்னார். சரியான வெளிச்சத்தில் வேறு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். புதிய புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர், சற்று முன் எடுத்த படத்தைப் பார்த்துவிட்டு "அழகா இருக்கு" என்று மீண்டும் சொன்னார். எங்கே அதை அழித்துவிடுவேனோ என்று ஒரு பதற்றம் அவருக்கு. இயற்கையை இத்தனை காதலுடன் தரிசிக்க முடியுமா என்ற வியப்பு இன்னும் எனக்கு மறையவில்லை. அந்தப் புகைப்படத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

வெள்ளிமலையில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் இரவு உறங்க அனைவருக்கும் புதிய தாற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டன, நாமே அமைத்துக்கொள்ளவேண்டும். ஜெயமோகனே நேரில் வந்து அனைத்தையும் மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். என்னிடம் "உங்களுக்கு இடம் கெடைச்சிருச்சில்ல" என்று அக்கறையுடன் விசாரித்தார். நான் இரண்டு மதுரை இளைஞர்களுடன் அதில் தங்கியிருந்தேன். இரண்டாம் நாள் இரவு தேவதேவன் தனக்கு கூடாரத்தில் உறங்க விருப்பம் இருப்பதைத் தெரிவித்தார். அவருடன் உடன் தங்க ஜி. எஸ். எஸ். வி. நவின் என்னைக் கோரினார், நானும் மகிழ்வாகச் சம்மதித்தேன். ஆனால் ஏனோ அவருக்கு ஒரு தனித்த கூடாரம் வழங்கப்பட்டது. அன்றிரவே அவர் கூடாரம் குறித்த ஒரு கவிதையை எழுதியதாக ஜெயமோகன் குறிப்பிட்டார்.

கவிஞர் போகன் சங்கருடனான உரையாடலில் அவருடைய கவிதைகளில் ஒன்றை வாசித்துக் காண்பித்தேன். அதில் கவிஞன் இறப்பு வீட்டுக்கு செல்கிறான், அங்கிருந்த ஒரு அறிவுஜீவியின் மகளிடன் தூரத்தில் இருக்கும் பனி மலையைக் காண்பித்து, "அது ஒரு ஐஸ்கிரீம், அதை நாம் தின்னலாம்" என்று கூறுவதாக வரிகள் அமைந்திருக்கும். அருகிலிருந்த தேவதேவன் அந்தக் கவிதையைக் கேட்டுக்கொண்டு, "அந்தக் கவிதையோட அழகே அந்த மலையும் பனிவெளியும்தான்" என்று சொன்னார். நான் சற்று நம்பமுடியாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது வாழ்வின் அபத்தத்தைக் குறிப்பிடும் ஒரு கவிதை, அதிலும் அவர் காண்பது இயற்கையை என்பதை இன்னும் என்னால் வியக்காமல் எண்ணமுடியவில்லை.

பிறகு கவிஞர் இசையின் "காந்தியம்" என்ற கவிதையை நினைவிலிருந்து சொன்னேன். அது இப்படி முடியும் "உலகை வெல்வது இருக்கட்டும், முதலில் இந்த உளுந்த வடையை வெல்வோம்". அதைக் கேட்டுவிட்டு அவர் "அது என்ன கவிதை, எனக்கு அனுப்புங்க" என்று ஆர்வமாகக் கேட்டார். ஆனால், அங்கு அலைபேசித் தொடர்ப்பு மிகவும் குறுகியது, இணையம் வேலை செய்யாது என்று ஏமாற்றமாகச் சொன்னேன். கிளம்வுவதற்குள் அந்தக் கவிதையை அவரிடம் முழுதாக வாசித்துக் காட்டவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. முகாம் ஞாயிரன்று மதிய உணவுடன் நிறைவுபெற்றது. ஊருக்குச் செல்லவேண்டிய பதற்றத்தில் வழியில் இறக்கிவிடவேண்டிய நண்பர்களை அழைத்துக்கொண்டு காரை கிளப்பிவிட்டேன்.

தேவதேவனைச் சந்தித்த கணங்களும், அவருடைய தோற்றமும் என்னில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும். அவர் என்னுடைய தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு நடந்த தருணங்களை ஒரு வாசகனாக என்றும் நினைவில் வைத்திருப்பேன். எல்லா கோணங்களிலும் ஒரு முழுமையான கவிஞர் என்று அவரைச் சொல்லலாம். ஜெயமோகன் ஏன் அவரிடன் பெரும் பற்று கொண்டிருக்கிறார் என்று நன்றாக உணரமுடிகிறது.

மதிய உணவாக மிகவும் குறைந்த அளவில் சோறு உண்கிறார், ஒரு பள்ளிச் சிறுவன் உண்ணும் அளவு அது. மிகக் கவனமாக தானே கரண்டியை வாங்கி ஒரு கைப்பிடிக்கும் குறைவான சோற்றை சிரத்தையாக எடுத்து தட்டில் போட்டுக்கொள்கிறார். உணவு இடைவேளையில் அங்கு இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன் "அவர் என்னங்க, எல்லாத்துலயும் கொஞ்சம் எடுத்துப் போட்டுக்கறாரு, இல்லன்னா அந்த பதார்த்தம் ஏமாந்துபோவும்னு சொல்றாரு".  எனக்கு இதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அதுதான் தேவதேவன், அதனால்தான் அவர் தேவதேவன்!

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை