என் கவிதைகள் - அளிக்கப்படுபவை
மார்ச் 31, 2023
என்னுடைய சேமிப்புகளில்
வசந்தகாலங்கள்
எண்பெருக்காய்க் கிடந்தன
கடவுள்
ஒரு தாராளவாதி,
எண்ணிக்கையறியா செலவாளியாக
நண்பர்கள் உறவினர்கள்
எதிர்படும்
வயதான காதலர்கள்
என பரிசளித்தேன்,
உண்ணாத பழங்களாய்
வீணடித்தேன்,
மருந்துகளை வெறுக்கும் நோயாளியாய்
தந்திரமாய் வீசியெறிந்தேன்
வறியவனானேன்,
துயிலற்ற இரவுகளில்
எண்ணிக்கைகளைக் கணக்கிட்டு
பெருமூச்சுவிடுபவனாகவும்
புதிதாக யாசகம் செய்பவனின்
தயக்கத்துடன்
கடன் கேட்பவனாகவும்
யாசகமிட்டவற்றை
திரும்பப் பெறும் குரூரியாகவும்
மாறினேன்,
மூன்று வயது பாலகனிடம்
வசந்தகாலங்களை
வழிப்பறி செய்பவனாகவும்.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment