கரூர் டைரீஸ், கோவை பயணம் - 3

                                                    

இளம் எழுத்தாள நண்பர் நவினைச் (நவீன் அல்ல) சந்திக்க கோவை கிளம்பினேன். சனிக்கிழமை (ஏப்ரல் 22, 2023) காலை எட்டரை மணிக்கு காரில் கிளம்பி பதினொன்றே முக்காலுக்குச் அவருடைய வீட்டை அடைந்தேன். நூற்றி அறுபது கிலோமீட்டர் மேற்கு நோக்கிய பயணம், கிட்டத்தட்ட மூன்றே முக்கால் மணிநேரம். கோவை நகரம் அடர்ந்து பிதுங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி ஒருமணிநேரம் நகருக்குள் நெரிசலில் வண்டியை மெல்ல நகர்த்திக்கொண்டு ஓட்டியது சிறிய சலிப்பை ஏற்படுத்தியது.

நவினின் வீடு மருதமலையிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்த ஒரு அழகான குடியிருப்பு. குடியிருப்பின் ஒரு மூலையில் அமைதியாக அமைந்திருந்த விசாலமான வீடு. சென்ற வருடம் திருமணம் செய்துகொண்டு மனைவி கிருபாவுடன் ஈரோட்டில் இருந்தவர், மூன்று மாதங்களுக்கு முன் கோவையில் வீடமைத்துக்கொண்டு வந்திருக்கிறார். அருகிலேயே கவிஞர் ஆனந்த்குமார், எழுத்தாளர் கோபலகிருஷ்ணன், விஷ்ணுபுரம் அலுவலகம் ம் மற்றும் சில இலக்கிய நண்பர்கள் சூழ வாழ்கிறார்.

வல்லினம் இதழில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுகிறார். தொன்மங்களை கதைக்கூறுகளாக அமைத்துக்கொண்டவை அவருடைய சிறுகதைகள். தன்னுடைய முதல் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். நாவலின் அடிப்படையையும், உந்துதலையும் குறித்து சுருக்கமாக விளக்கினார். கூத்துக்கலைஞர்களில் கணியான் ஒருவனின் வாழ்வைக் குறித்த நாவல், அவருடைய சிறுகதை ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட கருவை நாவலாக்கியிருக்கிறார். உற்சாகமும் எதிர்பார்ப்புமாக நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். அன்றாடம் காலையில் மூன்றிலிருந்து நான்கு மணிநேரங்கள் எழுதுவதாகச் சொன்னார். இந்த வருடம் ஜூலை மாதத்தில் நாவல் நூல்வடிவம் காணும் என்று தெரிகிறது.

kavithaigal.in எனும் கவிதைகள் குறித்த இணைய இதழை கவிஞர் மதாருடன் இணைந்து நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி கிருபா ஆங்கிலத்தில் வாசிப்பவர். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் வாசித்துக்கொண்டிருப்பதாகவும், வெண்முரசு வாசிக்கத்தொடங்கியிருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். புதிதாக திருமணமானவர்களுக்கே உரிய பாவனைகளும் செல்லமான முறையீடுகளுமாக கணவனும் மனைவியும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு திருமணமாகி பத்துவருடங்கள் நிறைவுறப்போவது ஏனோ நினைவிற்கு வந்தது.

எழுத்தாளர் ஜெயமோகனின் மகள் சைதன்யா நவினின் வீட்டில் தங்கியிருந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கோண்டேன், தெரியும் என்றார். அவருடைய தாயார் எழுத்தாளர் அருண்மொழி நங்கையின் மூலம் என்னுடைய பெயர் அறிமுகமாகியிருக்கிறது. சற்று தயக்கத்துடன் மெல்லிய குரலில் பேசத்தொடங்கியவர் அமெரிக்கா குறித்தும் அதன் பரந்த நிலப்பரப்பு குறித்தும் வியப்பாக பேசினார். மதிய உணவுக்காக மீன் உணவு. உணவின்போது முனைவர் படிப்பிற்காக கிறுஸ்தவ மாயவாதம் எனும் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், மெடீவல் காலகட்டத்தில் குறிப்பாக சில தத்துவஞானிகளின் பெயர்களைச் சொல்லி அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விவரித்தார். நிறைய கனவுகளுடன் இருக்கிறார், அவர் நீலி இதழில் எழுதிய கட்டுரைகளை நான் இன்னும் வாசிக்கவில்லை என்று சங்கடாமாகச் சொன்னேன், பரவாயில்லை என்றார்.

உணவுக்குப் பின் பாயசம் அளித்தார்கள், அதீத இனிப்பும் அடர்ந்த பாலும் கலந்து செய்யப்பட்ட ஒன்று. கடையிலிருந்து வரவழைத்ததாகச் சொன்னார்கள். "கடையிலிருந்து இதையெல்லாம் பிரத்யேகமாக வாங்கமுடியுமா" என்று என்னுடைய அறியாமையை வெளிப்படுத்தினேன். ஒவ்வொரு வருடமும் ஊருக்கு வந்துகொண்டிருந்தாலும், இந்தியா வேறொன்றாக மாறிக்கொண்டிப்பதை உணர்ந்துகொண்டே இருக்கிறேன். சைதன்யா நாகர்கோவிலில் பாயசத்திற்கென்றே தனியாக ஒரு கடை இருப்பதாகச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். 'அடைப் பிரதமன்' குறித்துச் சொன்னார். சவ்வரிசியைத் தட்டையாக்கி உலர்த்தி அதைப் பாயசத்தில் பயன்படுத்துவதே அதன் முறை என்று விளக்கினார். ஜெயமோகனின் 'பிரதமன்' சிறுகதை நினைவுக்கு வந்தது.

அருகிலிருக்கும் விஷ்ணுபுரம் அலுவலகத்திற்கு என்னுடைய காரிலேயே சென்றோம். நான் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தேன். நாவல்கள், ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகள் என கலவையான ஒரு தேர்வு. சைதன்யா எனக்காக நிறைய விலையைக் குறைத்துக்கொண்டார். அடுத்தமாதம் இமயமலையில் தன் தோழியுடன் கூடாரத்தில் ஒருமாதம் தங்கவிருப்பதாகச் சொன்னார். அமெரிக்காவில் காரோட்டிப் பழகிய எனக்கு இங்கு ஓட்டுவது சிரமமாக இல்லையா என்று கேட்டார், "இல்லை எனக்கு இதில் ஒரு சாதனையுணர்வு இருக்கிறது" என்று பதில் சொன்னேன். நவினையும், சைதன்யாவையும் மீண்டும் குடியிருப்பில்கொண்டு விட்டுவிட்டு கரூர் நோக்கி கிளம்பினேன்.

இரவு ஏழரை மணிக்கு வீட்டை அடைந்தேன். சைதன்யா எனும் பெயரை ஒரு புனைவுப் பாத்திரமாகவே ஜெயமோகன் என்னுடைய மனதில் நிறுவியிருக்கிறார் என்பதை சற்று வியப்புடனே எண்ணிக்கொண்டேன் ('ஜே சைதன்யாவின் சிந்தனை மரபு' நூல்). நவின் "மிகவும் மகிழ்வாகக் கழிந்த ஒருநாள் அண்ணா" என்று பதில் அனுப்பியிருந்தார். "நானும் அப்படியே உணர்ந்தேன்" என்று மறுசெய்தி அனுப்பினேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை