புரவி இதழ், மதார் கவிதைகள்
குறிப்பு எழுதப்பட்ட நாள்: ஏப்ரல் 1, 2023
அன்புள்ள மதார்,
கவிதைகளை வாசித்தேன், மிகவும் கவர்ந்தன. முதல் கவிதை அதன் அமைப்பில்,
சொல்முறையில் பாடல்தன்மைகொண்டதாக, ஒரு நாட்டுப்புறப்பாடலைப் போன்று அமைந்துள்ளது.
ஒரு மனதின் பிரயாசையை நேரடியாக வெளிப்படுத்தினாலும், கவிதையின் ஆழம், அது வாசகனுக்கு
கடத்த விரும்பும் அனுபவம் என மிகத் தேர்ந்ததாக மாறிவிடுகிறது. நிழல் எத்தனை பூடகமானது!
இரண்டாவது கவிதை ஒரு அறிவிப்புடன் தொடங்கி இயல்பாக விரிந்துகொள்கிறது.
தற்செயல்களில்தானே கடவுள் ஒளிந்துகொண்டிருக்கிறான்! இங்கு ஈ அதன் முடிவை அடைந்துவிடுவதால்
நிகழும் எதிர்பாராத ஒரு திடுக்கிடல் வாசிக்கும் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது.
ஒரு காட்சி அல்லது அனுபவம் இயற்கை விதிகளின் மேலான விசாரமாக மாறுகிறது,
தொடக்கமும் முடிவுமற்ற ஒரு ஆடலின் ஆழத்தை அறிந்துகொள்ள முடியாத ஏக்கமாக விரிந்து, கவிதையின்
கடைசிப் பகுதியில் மிகப் பூடகமான தளத்திற்கு செல்கிறது. என்னை மிகவும் பாதித்த
கவிதை இது.
மூன்று கவிதைகளுமே முற்றிலும் வேறான வாசிப்பனுபவம் அளித்தன, நல்ல தேர்வு, வாழ்த்துக்கள் மதார். நான் இந்தவாரம் ஊருக்கு வருகிறேன், அழைக்கிறேன், விரைவில் சந்திப்போம்.
Comments
Post a Comment