கரூர் டைரீஸ், பயணம் - 2

                                            

நெடுந்தூரப் பயணங்களில் காத்திருப்புகள் என்னவாக இருக்கின்றன? மனம் நாம் அடைய எண்ணும் இடத்தை நோக்கிக் குவிந்திருக்கையில், அதை நாம் உதறிவிட்டு, அந்தக் காத்திருப்பு நம்மில் ஒரு எடையாக ஆகாமல் இருக்க பல செயல்களில் பாவனைகளில் மூழ்குகிறோம். ஆனாலும் விமான நிலையங்கள் முழுக்க இந்தக் காத்திருத்தலின் உஷ்ணத்தை உணரமுடிகிறது. கரூரை நோக்கிய என்னுடைய பயணம் ஒன்பதாயிரத்து எழுநூற்று எண்பது மைல்கள் கடந்த ஒன்று. 

ஏப்ரல் 1, 2023 கொலம்பஸ் மாநகரின் புறநகரான டப்ளின் நகரில் காலை பதினொரு மணிக்கு மெல்லிய தூரலுடன் தொடங்கிய என் பயணம், கரூர் நகரின் புலியூர் காளிபாளையம் கிராமத்தை ஏப்ரல் 3, 2023 மதியம் பன்னிரண்டு மணிக்கு தகிக்கும் வெயிலில் அடைகையில் முடிந்தது.

கொலம்பஸ் நகரின் ஜான் க்ளென் விமான நிலையம் - மூன்றரை மணிநேரக் காத்திருப்பு, ஒன்றரை மணிநேரப் பயணம்
நியூ யார்க் நகரின் ஜே எஃப் கே விமான நிலையம் - நான்கரை மணிநேரக் காத்திருப்பு, பன்னிறண்டரை மணிநேரப் பயணம்
கத்தார் நாட்டின் ஹமத் விமான நிலையம் - இரண்டரை மணிநேரக் காத்திருப்பு, நான்கு மணிநேரப் பயணம்
தாம்பரம் இரயில் நிலையம் - இரண்டரை மணிநேரக் கத்திருப்பு, நான்கு மணிநேரப் பயணம்
திருச்சிராப்பள்ளி இரயில் நிலையம் - பத்து நிமிடங்கள், கரூர் நோக்கி ஒன்றரை மணிநேர சாலைப் பயணம்

நான் இதுவரை இந்தியப் பயணங்களுக்கு கத்தார் மற்று லுஃப்தான்ஸா ஆகிய இரண்டு நிறுவனங்களின் விமானச் சேவைகளில் மட்டுமே பயணித்திருக்கிறேன். கத்தார் நன் விரும்பும் ஒரு விமானச் சேவை மையம். விரிந்த பயண இருக்கைகள், துல்லிய காட்சித் தரத்துடன் அமைந்த ஒளிச் சட்டங்கள், மிகச் சுவையான உணவு, அழகிய பணிப்பெண்கள், மிகச் சுத்தமான விமானம் என மிகவும் தரம்வாயந்த சேவைகளில் ஒன்று. மற்ற நாடுகளுக்குச் செல்ல பிற விமானச் சேவைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன், கத்தார் விமானச் சேவையின் தரத்திற்கு வெகு தொலைவில் மற்ற சேவைகள் இருக்கின்றன.

ஜே எஃப் கே நிலையத்திலிருந்து தோகா பயணத்திற்கு அமெரிக்கன் விமானத்தில் பயணித்தேன். கத்தார் அமெரிக்கன் விமானச்சேவைகளின் கூட்டு உடன்பாட்டில் அமைந்த கொடூரமான ஒரு பயணம். பதிவு செய்கையிலேயே என் மனம் வேறொரு நாளைத் தேர்ந்தெடுக்க எண்ணியது, ஆனாலும் இருநூறு டாலர்கள் மலிவு என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். இனி இந்தத் தவறைச் செய்யவே மாட்டேன்.

வயதான அமெரிக்க கருப்பின பணிச்சேவகர்கள், ஆம் ஆண்களும் உண்டு. நீண்ட பயணத்தில் ஒரு ஆண் சேவகரை, அதிலும் நாற்பதுகளின் மையத்திலிருக்கும் ஒருவரை நான் எதிர்பார்க்கவில்லை. பெண்களும் நாற்பது கடந்தவர்கள் தான். நம் ஊர் நகரப் பேருந்துகளின் இருக்கைகளை ஒட்டிய தரம், பழைய சிறிய ஒளிச் சட்டகங்கள், காதுகளுக்கு ஒரு டாலர் தரத்தில் அமைந்த ஒலி மொட்டுகள், சலிக்கும் சுவையற்ற விமான உணவு என ஒரு கொடுங்கனவான பயணம். மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் உறங்கியிருப்பேன். ஒரு பெரிய பிளாஸ்டிக் டம்ளர் முழுக்க சிவப்பு ஒயினை தாரளமாக அளித்தார்கள். அவர்களுக்கே தெரிகிறது, இது போன்ற ஒரு பயணத்திற்கு அது அவசியம் என்று, அதனால் தாரளம்.

தோகாவிலிருந்து சென்னை செல்ல கத்தார் விமானச் சேவை. விமானத்தில் ஏறியவுடன் அரபு மொழியில் ஒலிக்கும் வரவேற்புக் குரல் என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று, எப்போதும் ஒரு மந்திரம்போல ஒலிப்பது. 'உன்னை பாதுகாப்பாக இருப்பிடத்தில் சேர்ப்பேன்' என்று சொல்வதுபோல. மிகத் தரமான ஒளிச் சேவை, சுவையான உணவு என நான்கு மணிநேரங்கள் கடந்த வேகமே தெரியவில்லை. சிறிது நேரம் அரபி இசையும், ஆப்பிரிக்க இசையும் கேட்டேன். Family Guy, Bob's Burgers இயங்கு படங்கள் மூன்று பகுதிகளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன்.

சென்னையை அடைந்ததும் விமானத்திலேயே மேல் அங்கியைக் கழட்டி தோள்ப்பையில் திணித்துக்கொண்டேன், தமிழ்நாட்டின் வெக்கையை உணரமுடிந்தது. விடிகாலை இரண்டேகால் மணிக்கு சென்னை விமான நிலையம் வந்திருந்தேன். வழக்கத்திற்கு மாறாக சற்று விரைவாகவே என்னுடைய பெட்டிகள் வந்துசேர்ந்தன. டாக்ஸி சேவையை முன்பதிவுசெய்துகொண்டு தாம்பரம் இரயில் நிலையத்திற்கு நான்கு மணிக்கே வந்துவிட்டேன். ஆறு இருபதிற்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ், இரண்டு மணிநேரங்கள் இருள் மறைந்து வெளிச்சம் பரவும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு, கோடைக் காலக் கொசுக்களின் மெல்லிய தீண்டல்களுக்கிடையில் வியர்வையுடன் ஒரு காத்திருப்பு. இரண்டு பெரிய பெட்டிகள் இருந்ததால் விழிப்புடன் அமர்ந்திருக்க நேர்ந்தது. நம் ஊருக்கு வந்தவுடன் இந்த ஒரு கவனம் இயல்பாகத் தொற்றிக்கொள்கிறது.

மூன்றரை மணிநேரத்தில் திருச்சி இரயில் நிலையம் செல்லும் அதிவிரைவுச் சேவை. இரண்டு பெட்டிகளையும் இரயிலில் நகர்த்திக்கொண்டு, அவற்றை பெட்டிகளுக்கான மேல்தளத்தில் அமைத்துவிட்டு சற்று மஞ்சள் பாவிய பச்சை வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டு ஒரு பயணம். இரண்டு நாட்கள் பயணமும், முழு உறக்கமின்மையும் உடலில் உஷ்ணத்தை கிளப்பிக்கொண்டிருந்தது. காலை பத்து ஐந்திற்கு திருச்சியை அடைந்தேன். நைனா வந்து காத்துக்கொண்டிருந்தார்கள். 

காரில் ஏறியவுடன் சப்பாட்டுப் பை இருந்ததைக் கவனித்தேன். 

"ஏன் நைனா சப்பிடலயா?". 

"ஏங்கப்பா கேக்கராங்க, வேண்டாம் வேண்டாங்கறேன் போட்டுக் குடுத்துட்டாங்க. பசிக்கல, எனக்கு உன்னையப் பாத்தாப் போதும்".

திருச்சி நகரம் ஒரு சிறுநகருக்கே உரிய சுறுசுறுப்புகளுடன் இயங்கிக்கொண்டிருந்தது. கரூர் பைபாஸ் ரோட்டைத் தொட்டவுடன் மெல்ல இளகிக்கொண்டேன். நைனா மிகவும் பாதுகாப்பாக, அவர்களுக்கே உரிய நிதானத்துடன் ஓட்டிநார்கள். காவிரி ஆற்றில் அங்காங்கே தீற்றல்களாத் தண்ணீர், கோடையின் காட்டம் தெரிந்தது. பன்னிரண்டு மணிக்கு வீட்டை அடைந்தேன். அமெரிக்காவின் வீட்டிலிருந்து புலியூர் காளிபாளையத்தின் என் இருப்பிடத்திற்கு நேரடியான ஒரு பயணம். 'இந்த முப்பத்தாறுமணிநேரச் சாகசத்தை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்' என்று எண்ணிக்கொண்டேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை