இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு கவிதை - தொடர்ச்சி

                                                    


அகழ் இதழில் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதிய 'இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு' என்ற கவிதையின் தொடர்ச்சியாக எழுதியது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

குணா திரைப்படத்தை

வெறுப்பது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

தனிமை தகிக்கும்

தொலைதூர மாலையில்

அருவருப்பான தேனீர் 

எனும் பான(க)த்தைக்

குடித்து குமட்டுவது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

பகல்நேர பேருந்து பயணங்கள்

தீராமல் நீள்வதை

மருட்சியோடு பார்ப்பது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

திருவிழாக்களை

கதவு சன்னல்களை

மூடி

புதுமையாகக் கொண்டாடுவது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

வாழ்வின் பரிசான

எதிர்பாராத் தருணங்களின்

அழுகையை

மௌனமாக நிகழ்த்துவது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

மன அழுத்த

மாத்திரைகளுக்கு

அலமாராவில் தாராள

இடமளிப்பது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

காதுகளில் பொருத்திக்கொள்ளும்

இசைக் கருவிகளை

கடலில் வீசுவது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

மூளையின்

நினைவுச் சுரப்பிகளை

வெட்டி வீசுவது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

மதுவால் ஈரல் அவிந்து

மரித்த நண்பனை

இன்னொரு கோப்பையால்

நினைவுகூராமல்

மறப்பது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

சாரு நிவேதிதா

எனும் எழுத்தாளனை

தயக்கத்துடன்

எண்ணிப் பார்ப்பது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

ஆன்மாவை

நெருப்புக்கு தின்னக்கொடுத்து

சவம்

என அலைவது,


இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது

கைகளை விரித்துக்

கூவி

அந்த மேதையின்

இசையில் கரைவது,


சில கையேடுகளை

சுக்குநூறாகக்

கிழித்து 

காற்றில் வீசுவது.

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

அமெரிக்கா, இரு வீடுகள்

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்