ஒரு நகரத்தின் ஓசை - கவிதை
கரிய
தார்ச் சாலையை
அனேகமாகக் கடந்துவிட்ட
சாரைப் பாம்பின்
மல்லாந்த நிர்வாணம்,
வாகனச் சீறலுக்கு
அதிர்ந்தடங்கும்
வயிற்றுத் துளை
பாவிய தெருநாயின்
நாசி தீண்டும்
குருதி வாசம்,
மின்சாரத் தொடுகையில்
நிலம் நாடிய
அண்டங் காக்கைக்கு
பலநூறு உறவுகளின்
ஒப்பாரிச் சத்தம்,
வருகைப் பதிவுகளை
முனவுகிற
அலுவலகக் கதவுகளில்
ஒரு
நகரத்துக் காலையின்
முடிவுறா எக்காளம்.

Comments
Post a Comment