எனது கவிதைகள், சொல்வனம் இதழ்

                                                    

               

சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

1)

தெருவிளக்குகளே

ஏன்

இத்தனை தலைகுனிவு

சற்றே

நிமிருங்கள்,

ஒளியைத்தானே

பாய்ச்சுகிறீர்கள்?

 

2)

உறைநீர் ஏரியின்

பொத்தலில்

தூண்டில் அமிழ்த்திய

மீனவக் கிழவன்

கனவு காத்தான்

குளிர் அங்கியினுள்,

நிலைத்த வெளியை

குறுக்கு வெட்டிக்

கீறியது

சிறகு படபடத்த

பறவை,

ஏரிக்கரை பாலத்தின்

பனி விரவிய

தண்டவாளத்தில்

வெம்மூச்சுடன் சீறியது

இரயில் வண்டி,

அக்கணம்

சுண்டி அடங்கியது

தூண்டில் 

ஒரு முறை

ஒரே

ஒரு முறை

மீனவக் கிழவனின்

கனவு கலைத்து.

 

3)

ஊதா நிறச் சட்டைக்காரர் -

அவருக்கு

ஒரு பெயர் இருந்தது

அந்தச்

சிறிய கிராமத்தில்

அவருக்கு

ஒரு பிம்பம் இருந்தது,

வெகுளியானவர்

கருணை மிகுந்தவர்

தெரு நாய்களிடம்

அதி பிரியமாய்

இருந்தவர்

தந்தை இல்லாமல்

வளர்ந்தவர்,

அன்றாடம்

இரவில்

பிசுக்கேறிய

ஊதா நிறச்

சீருடையில்

தெருவிளக்குகளினூடாக

அவர்

தள்ளாடிச் செல்கையில்

புன்னகையுடன் தலையாட்டுவது

குறித்து

சில கதைகளும்

இருந்தன,

இப்போது

இறந்தும் விட்டார்,

அவருடைய பிம்பம்

கிராமத்தின்

சிறிய தெருக்களில்

மேலும்

பல கதைகளாகப்

பெருகியது

அடங்கியது

அவர் குறித்த

நினைவுகள் மங்கி

மறக்கவும் பட்டார்,

பிறகு

எஞ்சினார்

அவரை அறிந்த

சிலரின்

அரிதான

கனவுகளிலும்

தொலைதூரவாசிகளின்

கவிதைகளிலும்.

 

4)

பரபரப்பான சாலையில்

உக்கிரமான

சிவப்பு விளக்கு,

வீடிலியின்

பதாகையில்

கலைந்த சொற்கள்,

அனிச்சையாய்

கைகளில் தென்பட்ட

இருபது பணம்

சில ஒற்றைகளாய்

இல்லாமலிருப்பதன்

கனம்,

வாகனக் கண்ணாடி

கீழிறங்கி

வெளிவருகிறது

புனிதக் கை

பலநூறு கைகளின்

பிரதிநிதியாய்,

பெற்றுக்கொண்டவன்

உச்சரித்த

அந்த வார்த்தை

ஒலிக்கிறது

சாலையெங்கும்

ஒரு

கூட்டுப் பிரார்த்தனையின்

உச்ச வரியாய்.

 

5)

நான்

ஒரு அழகிய நகரில்

வாழ்கிறேன்

இங்கு மரங்கள்

நெருப்பை அணிகின்றன

ஆறு கடல் குளங்களில்

குருதி ஓடுகிறது

அணுக்கமானவர்களை

கட்டி அணைக்கையில்

கத்தியால்

மெல்லக் கீறுகிறார்கள்

குழந்தைகள் 

ங்களைவிடப் பெரிய

நிஜத் துப்பாக்கிகளைக் கொண்டு

வானில்

சுட்டுப் பயில்கின்றனர்

அன்பு கருணை கண்ணீர்

போன்ற வார்த்தைகள்

உச்சரிப்புத் தடைகொண்டன

எல்லோரும்

சங்கேத வார்த்தைகளில்

பாடினார்கள்

இறப்பு வீடுகளில்

மனிதர்கள் பால் கருதாமல்

புணர்ந்தார்கள்

நான் ஒரு கவிஞனின்

இறுதிச் சடங்கிற்கு

சென்றேன்

இனிய கவிதைகள் மட்டும்

எழுதியவன்

கழுவிலேற்றப்பட்டவன்

எதிலிருந்தோ விடுபட்ட

சாயலுடன்

உறைந்த அவன் முகத்தைப்

பார்த்து

சில கவிதை வரிகளை

முணுமுணுத்துவிட்டு

என்னுடன் இணைய

அழைத்த

பெயர் தெரியாத

மிருகம் ஒன்றுடன்

இருளில் ஒதுங்கினேன்.

 

6)

சாதாரண நாள்

கடந்தது

சலனமின்றி,

அப்போது

எண்ணவில்லை

ஒரு

சாதாரண நாளுக்கு

அர்த்தம் பூசும்

இரகசியக் கையேடுகள்

சில்வர் கிண்ணத்தில்

அளிக்கப்படும்

செந்நிறம் பாவிய

முந்திரி பதிந்த

நெய்யில் ஊறிய

கேசரி வடிவிலும்

இருக்கலாம்

ன்பதை.

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

கேலரி பியர், சிறுகதை - ஆவநாழி இதழ்

அமெரிக்கா, இரு வீடுகள்