ஒரு கவிதையும், விவாதமும்
ஏன்
இத்தனை தலைகுனிவு
சற்றே
நிமிருங்கள்,
ஒளியைத்தானே
பாய்ச்சுகிறீர்கள்?"
சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
அன்புள்ள பாலாஜி ராஜு அவர்களுக்கு,Thousands of Boston’s street lights are “dark sky friendly.” All lighting units designed or modified since the year 2000 are of a medium cut-off type construction; 95% of the light shines down toward the ground instead of up toward the sky.
The Street Lighting Division is in a public/private partnership with “Historic Boston” and “Light Boston” to provide architectural floodlighting on historical landmarks and church steeples around the City. The organizations supply the floodlights, bracket arms, lamps, and expertise. The Street Lighting Division provides the mounting platforms, energy, installation, and maintenance.
கவிஞர்களுக்கு என்ன வேண்டுமானாலும் தோன்றும், ஆனால் அவை பயனற்ற பிரலாபங்களாக ஆவது யாருக்கும் நன்மை தராது.
அன்புள்ள மைத்ரேயன் அவர்களுக்கு,
உங்கள் விரிவான வாசிப்பிற்கும் பதிலுக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் விரிவாக பதில் எழுதியதால், நானும் விரிவாகவே சிலவற்றைச் சொல்கிறேன்.
இந்தக் கவிதையை ஏன் முதல் கவிதையாக வைத்தேன் என்பது குறித்துச் சொல்கிறேன். கவிதை எழுதுகையில் மிகக் கூர்மையான ஒருமை நிலை ஒன்று நிகழும் வாய்ப்புகள் அவ்வப்போது அமைகிறது (எல்லாத் தருணங்களிலும் அது அமைவதில்லை). மொழியும், கவிதை எதைத் தாங்கி எழுதப்படுகிறதோ (‘பேசுபொருள்’ என்ற வார்த்தையை இங்கு தவிர்க்கிறேன்) அந்த ஒன்றும், சொல்லிசைவும் சரியான புள்ளியில் சந்திக்கையில் நிகழும் அரிதான ஒரு நிலை அது.
ஒரு கிரிக்கெட் எடுத்துக்காட்டையே இதை விளக்கச் சொல்கிறேன். நான் ஒரு பந்து வீச்சாளன், முப்பத்தைந்து வருடங்களாக கிரிக்கெட் விளையாடுகிறேன். சில பந்துகளை வீசுகையில் மட்டும், பந்து கையில் மிகச் சரியான கோணத்தில் அகல்வதையும், பந்து நீங்கிய பிறகு இலக்கை நோக்கி முன் நகரும் என் உடல் அசைவுகளும், பிறகு பந்து வீசிய விசையால் சற்று குனிந்திருக்கும் நான் மெல்ல உயர்ந்து சமநிலைக்கு வருவதையும் பல முறை உணர்ந்திருக்கிறேன் (‘Poetry in motion’). அந்த நிலையில் நான் வீசிய சில பந்துகள் சிக்ஸர்களாகப் பறந்து காணமல் போனதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்படி எனக்குள் உணரும் அந்த நிலைதான் இன்றும் விளையாட மைதானங்களுக்கு என்னை அழைத்துச் செல்லும் குன்றாத ஊக்கமாக இருக்கிறது.
அப்படி ஒருமை அமைந்ததை சில நாட்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதையில் உணர்ந்தேன். நான் அனுப்பிய ஆவணத்தில் இந்தக் கவிதை இல்லை,
‘சித்திரை
வெயிலில்
எங்கள் ஊர்
ஆளரவமற்றுத்தான் கிடக்கிறது,
மொழி தெரியாத
குல்ஃபி ஐஸ்காரனின்
மணி
ஒலிக்கும்வரை’
இன்னொன்று, இந்தத் தெருவிளக்குகள் எனும் பிம்பம், (‘படிமம்’ என்று இங்கு நான் சொன்னால் சற்று அதீதமாக உங்களுக்குத் தோன்றலாம், அதனால் அதையும் தவிர்க்கிறேன்) நான் தற்போது வேலை செய்யும் அலுவலக அறைக் கண்ணாடியில் எப்போதும் தெரிந்துகொண்டே இருந்தது. பல மைல்கள் தாண்டி நெடுஞ்சாலையில் அமைந்த விளக்குகள் அவை. வெறுமனே காட்சிகளாக இப்படித் தெரிந்துகொண்டிருந்தவை, மொழியில் வெளிவர ஐந்து ஆண்டுகள் ஆனது. ஆனால், இந்தக் கவிதையை எழுதுகையில் அந்தக் காட்சியை நான் எண்ணவில்லை; எழுதிய பிறகுதான் ஒரு துணுக்குறல் ஏற்பட்டது. நனவிலி மனம் உள்வாங்கிக்கொண்ட காட்சி இந்தக் கவிதையாக மாறியிருக்கிறது..
இவையெல்லாம் இந்தக் கவிதை முன்வைக்கப்பட்டதற்கான தனிப்பட்ட காரணங்கள்; மற்றபடி என்னுடைய நோக்கம் ‘தந்திரம்’ எல்லாம் இல்லை. இந்தக் கவிதை மூலம் தந்திரமாக வாசிப்பவரை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் நான் மிகைக் கனவுகள் காண்பவனும் அல்ல. உங்களுக்கு அப்படித் தோன்றியது மிகவும் துரதிஷ்டவசமானது.
எழுதியவுடன் சில முறை வாசித்ததும் தோன்றிய இன்னொரு எண்ணம், இந்தக் கவிதை சற்று வானம்பாடிக் கவிதைகளுக்கான தொனியைக் கொண்டிருக்கிறது என்பதுதான். நான் வானம்பாடிக் கவிதைகளை வாசித்ததில்லை, அப்படி இருக்கும் என்று தோன்றியது. இந்தக் கவிதையை மிகைக் கற்பனாவாதக் கவிதை என்றும் வரையறுக்கலாம்.
சரி, இதே கவிதையை மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்தால் எப்படி ஒரு வாசிப்பு நிகழும்? தேர்தலில் தோற்ற திராவிடத் தலைவர்களை நோக்கி ‘தளராதீர்கள்!’ என்று சொல்லும்படியான கோணத்தில் ஒரு வாசிப்பை அளிக்கலாம் அல்லவா? அப்படிப்பட்ட சாத்தியங்களையும் இந்தக் கவிதை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதாலும் இதை அனுப்பினேன்.
கவிதை வாசிப்பு என்பது முழுக்க முழுக்க நம்முடைய ரசனைகளால், உள்ளுணர்வுகளால் ஆனது. அது நாம் வாசிக்கும் கவிஞர்கள் சார்ந்தும், ஓரளவு நம் சுய தேர்வுகளாலும் அமைவது. நீங்கள் கவிதைகளை தர்க்கரீதியாக அணுகுபவர் என்று புரிந்துகொள்கிறேன். ஒரு கவிதைக்கு இப்படியும் ஒரு வாசிப்பு நிகழும் என்பதையும் இன்று புரிந்துகொண்டேன். ஒரு கவிதை வாசிப்பவருக்குள் இத்தனை கசப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொண்டேன்.
நான் கவிதைகளை முழுக்க முழுக்க தர்க்கங்களைத் தவிர்த்து கற்பனைகளால் அணுகுபவன். நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள், என்னுடைய நம்பிக்கைகளை அவர்கள்தான் கட்டமைத்திருக்கிறார்கள். ஆம், உங்களுடைய வாசிப்பு நிச்சயம என்னுடைய் ரசனைப் புள்ளிகளை விட்டு நெடுந்தொலைவில் இருப்பதுதான். அதையும் இயல்பானது என்றே எடுத்துக்கொள்கிறேன்.
உங்களுடைய பதிலில் பாஸ்டன் பெருநகரில் தெருவிளக்குகள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்துகொண்டேன். பாஸ்டன் என்ன, கரூர் மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமமான காளிபாளையத்திலும் தெருவிளக்குகள் அப்படித்தான் மாறியிருக்கின்றன. சென்ற இரண்டு மாதங்கள் அங்கு சென்று தங்கிவிட்டுத் திரும்பியவன், அந்த விளக்குகளை மிக அருகில் கண்டவன் என்ற முறையிலும் இதைச் சொல்கிறேன்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிர்காலத்தில் தெருவிளக்குகளே இல்லாமல் வெளிச்சம் தோன்றும் சாத்தியங்கள் அமைந்தாலும், என்னுடைய கவிதைகளில் அவை இடம்பெறும்.
பிற கவிதைகளையும் தாராளமாக நீங்கள் நிராகரிக்கலாம். உங்களுக்கு நிறைய படைப்புகள் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றன என்பது புரிகிறது. இவ்வளவு விரிவான பதில்கள் எழுதவேண்டிய கட்டாயம் இல்லை. இவை பிரசுரத் தகுதிபெறவில்லை என்று ஒற்றை வரியில் சொன்னாலே போதுமானது. நான் ‘ஏன் நிராகரிக்கப்பட்டது?’ என்றெல்லாம் காரணங்களைக் கோருபவன் அல்ல.
அன்புடன்,
பாலாஜி ராஜூ

Comments
Post a Comment