Disclosure Day - ஒரு பார்வை
கடந்த வெள்ளிக்கிழமை 'Disclosure Day' திரைப்படம் பார்த்தேன். படத்திற்கான முன்னோட்டத்தை சிலமுறை பார்த்திருந்தேன். இது வேற்று கிரகவாசிகள் குறித்த வழக்கமான ஹாலிவுட் திரைப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் என்னைத் தடுத்தது. ஆனால், ஸ்பீல்பர்க் படம் என்பதால் ஆர்வமும் குறையவில்லை.
'Rosewell Incident' என்று பரவலாக அறியப்பட்ட, மிகவும் விவாதத்துக்கு உள்ளான 1980 ன் நிகழ்வை ஒட்டிய திரைப்படம் என்று விக்கிபீடியாவில் வாசித்தேன்.
வேற்று கிரக வாசிகள் குறித்து அரசாங்கம் மறைத்து வைத்திருக்கும் ஒரு இரகசியத்தை, இணைய பாதுகாப்பு நிபுணன் ஒருவனும், தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராக இருக்கும் ஒரு பெண்ணும் மக்களுக்கு எடுத்துச் செல்ல முயல்கிறார்கள். அதற்கான காரணங்கள், அவர்கள் இருவரும் ஏன் இதில் தொடர்புற்று இருக்கிறார்கள் என்பதை சற்று முதிர்ந்த தொனியில் இயக்குனர் திரைப்படமாக்கியிருக்கிறார்.
வெறும் சாகசப் படம் இல்லை என்பதை முதல் பத்து நிமிடங்களிலேயே உணர்ந்துவிட்டேன். ஆனால், திரைக்கதை சுவாரசியம் குன்றாமல் இருந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியர்களா எனும் கேள்வி நம் எல்லோரையும் தனிப்பட்டும், ஒட்டுமொத்த சமூகமாகவும் அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது.
அப்படி இல்லை, நம்மை விட அறிவார்ந்த, திறன்வாய்ந்த உயிர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டு என்று தெரிந்தால் அதை நாம் எப்படி எதிர்கொள்வோம் எனும் கேள்வியை தத்துவார்த்தமாக ஸ்பீல்பர்க் கையாண்டிருக்கிறார். இந்தக் கேள்விக்கான மத ரீதியான கோணத்தை அளிக்க, ஒரு கிறித்தவ சந்நியாசியும் படத்தில் முதன்மைப் பாத்திரமாக வருகிறார்.
வேற்று கிராகவாசிகளை சிறையிட்டு, ஆராய்ச்சி எனும் போர்வையில் கொடுமைப்படுத்தும் காட்சிகள் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. கிறித்தவ சந்நியாசியான தன் காதலிக்கு, வேற்று கிரக வாசிகள் துன்புறும் கோப்புகளை காட்டுகிறான் கணிப்பொறி நிபுணன். அப்போது அவள் கேட்கும் முதல் கேள்வி, 'அவர்கள் குழந்தைகளா?' என்பதுதான். மிகக் கூர்மையான காட்சி என்று தோன்றியது.
எமிலி பிளண்ட அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திடீரென எல்லாம் புரிபடும் திறன் பெறுவதையும், ரஷ்ய மொழியில் பேசுவதையும், உள்ளுக்குள் பரிதவிப்பதையும், தன் வாழவிற்கான அர்த்தம் உண்மையை வெளிப்படுத்துவதுதான் என்று உணர்வதையும், தொலைக்காட்சி அறிவிப்புக்கு தாமதமாகச் சென்று பதைப்பதையும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்பீல்பர்க் இங்கு எழுப்பும் கேள்வி, ஒருவேளை இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தனியானவர்கள் அல்ல என்பது தெரிந்தால், அதை கிரகித்துக்கொள்ளும் மனநிலை மனித குலத்திற்கு உண்டா என்பதுதான். அரசாங்கம் இந்த உண்மையை ஏன் மறைக்கிறது என்பதற்கான கோணத்தையும் ஓரளவு உணரவைத்திருக்கிறார்.
தங்களுடைய பக்கத்தின் உண்மையை பூமியின் மனிதர்களுக்கு உணர்த்த இந்த இருவரையும் குழந்தைகளாக இருக்கையிலேயே வேற்று கிரகவாசிகள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் சில சக்திகளையும் அளிக்கிறார்கள். எண்ணும்போதே சிலிர்க்கவைக்கும் ஒரு கதைக்கரு.
எமிலி பிளண்ட முதன் முதலில் சந்திக்கும் கார்டினல் எனும் குருவி, எனக்கு கவித்துவமான ஒரு காட்சியாகவே தெரிந்தது. பல்வேறு மிருகங்கள் வாயிலாக கிரகவாசிகள் தமக்கான நேரத்துக்காக காத்திருக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரு சிறுகதையின் முடிவு போலவே இருந்தது. 'Listen' என்ற வார்த்தையுடன் படம் முடிகிறது. பாதுகாக்கப்பட்ட இரகசியத்தை உலகம் கேட்கத் தயாராகிறது.

Comments
Post a Comment