நம்பிக்கையாளன், அறிவியல் புனைகதை - ஒரு வாசிப்பு
சிறுகதைகான இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/55/
ஒரு பேரழிவுக்குப் பின்னான சூழலில் (post apocalyptic) இறை நம்பிக்கையுள்ள மெய்யிறைப் போராளிகள் ஒன்பதுபேர் பாலைவனக் குகையொன்றில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களில் ஒரு இளைஞனும் ஒரு முதிய மதகுருவும் உள்ளனர். வெளியுலகுடனான அவர்களுடைய ஒரே தொடர்பு வானொலிப் பெட்டியொன்றால் நிகழ்கிறது. அதை அந்த இளைஞனைத் தவிர எல்லோரும் இறைவனுக்கெதிரான ஒரு கருவி என்று சாடுகின்றனர். பத்து வருடங்களாக இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறை மறுப்பாளர்களுக்கும் போர் நடந்து வருகிறது.
வானொலி அறிவிப்பில் அணு ஆயுதப் போர் செய்யப்பட்டிருப்பதும், உலகமெல்லாம், நுண்கிருமிகள் உட்பட பெரும்பாலான மனிதச் சமூகங்களும் மறைந்துவிட்டதற்கான செய்தி அறிவிப்பு வருகிறது. இந்தச் செய்தியை இறை நூலில் சொல்லப்பட்ட உலக அழிவுக்கான சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு குகையை விட்டு வெளியேறி தன்னை அழித்துக்கொள்ள முடிவுசெய்கிறார்கள். இதன் மூலம் இறைவனின் அடிக்குச் சேரலாம் என்றும், மீண்டும் இறைவன் உலகில் தோன்றி இறை நம்பிக்கைக்கெதிரானவர்களை அழித்துவிடுவார் என்றும் நம்புகிறார்கள். வானொலியில் பதினைந்து நாட்கள் கதிரியக்கம் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும், குகைக்குள் இருப்பவர்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் சொல்லப்படுகிறது.
இளைஞன் அவர்களை வெளியே செல்லவேண்டாம் என்று கண்ணீருடன் கோருகிறான், அவனைத் தவிர அனைவரும் வெளியேறுகிறார்கள். வானொலியில் போர் முடிந்துவிட்டதற்கான செய்தி கேட்கிறது, மக்கள் அணுக்கதிர்வீச்சின் தாக்கம் முடிவுற்றதையும், போர் முடிந்துவிட்டதையும் வீதிகளில் இறங்கிக் கொண்டாடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. சிறுகதையின் கடைசி வரியில் அந்த இளைஞனின் செய்கையைச் சொல்லி வாசகனின் கற்பனையைத் தூண்டுகிறார் ஆசிரியர், சிறுகதை முடிவுக்குப் பின் நம் மனதில் தொடர்கிறது.
குகைக்குள் இருக்கும் மனிதர்களின் இறைநம்பிக்கைகள் குகை அளவுக்கு இருண்டும், குறுகியும் உள்ளது. எதிர் நிலையாக இறை மறுப்பாளர்களும் ஒற்றைப்படையான பார்வையில் உலகை நோக்குகிறார்கள், போர் புரிகிறார்கள், அணுஆயுதப் போர் செய்கிறார்கள்.
இது கிறித்துவத்துக்கும், இஸ்லாமுக்குமான போரா? கதையின் இறுதியில் வளர்ந்த நாடுகளான அமெரிக்காவும், ஐரோப்பவும் சேதங்களில்லாமல் இருப்பதும், கீழை நாடுகள் பேரழிவுக்குள்ளாகியிருப்பதும் சொல்லப்படுகிறது. அந்த இளைஞன் மனதில் அவனுடைய பாலைவன கிராமத்தையும், ஒளிமிக்க வானையும், பசுமைமிகுந்த பூமியையும் கற்பனை செய்துகொள்கிறான். இங்கு நம்பிக்கையாளன் யார்? அந்த இளைஞன் தானே? இந்த நம்பிக்கையே வெளியில் செல்லவிடாமல் அவனைத் தடுக்கிறது.
பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் சிறுகதையிது. வரலாற்றில் மதங்களின் பெயரால் நிகழ்ந்தப்பட்ட அழிவுகளின் மறு சித்தரிப்பாகவும் இந்தக் கதையை வாசிக்கலாம். அறிவியல் புனைவுக்கேயான மிகைக் கற்பனையையும் சேர்த்துக்கொண்டால் மனதில் ஆழமான சலனங்கள் ஏற்படுகிறது. சிறுகதை குறித்த என்னுடைய எண்ணங்கள் ஒருவகை சிதறல்களாகவே உள்ளன. கதையின் முடிவில் அந்த இளைஞனின் செயலுக்கான காரணங்களை எண்ணிப் பார்க்கிறேன், இறுதியில் அவனும் நம்பிக்கையிழக்கிறானா? அவனும் மற்றவர்களுடன் முன்னரே வெளியேறியிருக்கவேண்டும் என்று எண்ணுகிறானா, அதனால் அந்த முடிவை எடுக்கிறானா? இறுதியில் குருட்டுத்தனமான மத நம்பிக்கையே வெல்கிறது.
Comments
Post a Comment