விசும்பு, அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு
'விசும்பு' கதையின் இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/62/
'வலசை போதல்' எனும் பதத்தை நாம் எல்லோரும் ஒருமுறையாவது கேட்டிருப்போம். விலங்குகளும், குறிப்பாக பறவைகளும் பருவகால மாற்றங்களை உணர்ந்துகொண்டு இடம்பெயர்வதைக் குறிக்கும் ஒரு அழகான சொல். ஆயிரமாயிரம் மைல்கள் பயணித்து செல்ல வேண்டிய இடத்தை அடைகின்றன பறவைகள். இப்படி இடம்பெயர்வதற்கான உந்துதல் பறவைகளுக்கு எப்படி ஏற்படுகிறது? வான் எனும் பிரம்மாண்டமான கூரையின் கீழ் பறக்க அவைகளுக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது, இலக்குக்கான பாதைகளை, திசைகளை அவை எப்படித் தீர்மானிக்கின்றன என்று எண்ணும்போதே இயற்கை எனும் பேராற்றலின் வலிமை நம்மைத் திகைக்கவைக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் 'விசும்பு' எனும் இந்தக் கதையை பறவைகளின் இடப்பெயர்வைக் களமாகக்கொண்டு அறிவியல் புனைவாக்கியிருக்கிறார். குறிப்பாக பறவைகள் திசையறிய நுண்கதிர்களைப் பயன்படுத்துவதன் சாத்தியங்களை நம் கற்பனையைத் தூண்டும் வகையில் சொல்லிச் செல்கிறார். பூமியைச் சூழ்ந்துள்ள புற ஊதா, அகச் சிவப்புக் கதிர்களின் அதிர்வுகள் இடங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன எனும் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் கருதுகோளின் மூலம், பறவைகள் இக்கதிர்களையும் அதன் வேறுபாடுகளையும் உணர்ந்து இடம்பெயர்கின்றனவா எனும் கேள்வியே கதையின் அடிப்படை.
கருணாகர ராவ் பாரம்பரிய மனநிலை கொண்ட ஒரு மருத்துவர். அவருடைய மகன் நஞ்சுண்ட ராவ் பறவையியலாளர். இவர்களுக்குச் சொந்தமான பறவைச் சரணாலயத்தில் நஞ்சுண்ட ராவ் ஆராய்ச்சி செய்கிறார். இங்கு வேலை செய்யும் ஒரு மேலாளரின் பார்வையில் தொடங்கும் கதை, நஞ்சுண்ட ராவ் தான் செய்யப்போகும் ஆராய்ச்சியில் நுண்கதிர்களை பறவைகள் பயன்படுத்துகின்றனவா என்று சோதிக்கவிருப்பதைத் தொட்டுக்கொண்டு நகர்கிறது.
கருணாகர ராவ் பறவைகளின் வலசை போதல் என்பதை இயற்கையின் அறிய முடியாத விந்தையாகக் காண்கிறார். மகன், அறிவியல் பார்வையுடன் இதை நோக்குகிறார். தந்தையின் பார்வையில் இது இயற்கையிலேயே பறவைகளுக்கு அமையப்பெற்ற உள்ளுணர்வு, மரபணுவில் கடத்தப்பட்டுவிட்ட ஒரு செய்தி. மகனுக்கு இதன் அடிப்படைகள் நவீன அறிவியல் நோக்கில் அறியப்பட வேண்டிய ஒரு சாத்தியப்பாடு. இருவருக்குமிடையில் மாட்டிக்கொள்ளும் ஒரு மேளாலரின் பார்வையில், பகடியான ஒரு நடையுடன் சுவாரசியம் குறையாமல் சொல்லப்பட்ட ஒரு கதை இது.
இப்படி பறவைகள் இயற்கையாக கதிர்களின் வேறுபாடுகளை அறிந்து வலசை செல்வதை, செயற்கையான ஒரு அலைவரிசை மூலமாக திசைமாற்றி, ஆராய்ச்சியாளர்கள் முன்கூட்டியே தீர்மானிக்கும் ஒரு இடத்துக்கு இடம்பெயர்க்க வைக்க இயலுமா என்பதே சோதனை. சைபீரியப் பறவை Mangolian Sand Plover, இவர்களுடைய சரணாலயத்துக்கு வரும் பாதையை மாற்றி எகிப்துக்கு அனுப்பப்படுவது திட்டம். திட்டப்படியே அவை கெய்ரோவுக்குச் சென்று சேர்ந்து தவிக்கின்றன எனும் செய்தியை மகன் நஞ்சுண்ட ராவ் ஆர்ப்பாட்டமாகச் சொல்கிறார், சோதனை வெற்றிபெற்றுவிட்டதன் மகிழ்ச்சி அவருக்கு.
கதையின் முடிவில் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் முழுமையைப் பறைசாற்றும் ஒரு முடிவு வருகிறது, சில வியப்பான சம்பவங்கள் நிகழ்கின்றன. கதையின் முடிவு அறிவியல் புனைவுக்கேயான, சிறுகதைகளுக்கேயான அசாத்திய சத்தியத்தியங்களைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் என்பது முழுமை, அதன் துளிகளைத்தான் அறிவியல் எனும் பெயரில் ஆராய்கிறோம் எனும் தந்தை கருணாகர ராவின் சொற்கள் மனதில் ஆழமாக இறங்குகின்றன, ஒட்டுமொத்த கீழைத் தத்துவத்தின் குரலாக அவை ஒலிக்கின்றன.
பறவைகள் வானின் (விசும்பின்) ஒரு துளி என்பது எத்தனை பெரிய படிமம், பல்லாயிரமாண்டுகாலப் பாறையாய் அடர்ந்துவிட்ட இதன் இறுக்கத்தை, இந்தப் படிமத்தை, துளித் துளியாகப் பிரித்துக் கொடுத்தாலும் உலகம் உள்ள வரையில் அது மனிதனின் மனதில் சலனங்களை ஏற்படுத்திக்கொண்டுதானிருக்கும், அந்தப் பாறை சாசுவதமானது, கரையாதது, ரகசியமானதும்கூட.
Comments
Post a Comment