நாக்கு, அறிவியல் புனைகதை - ஒரு வாசிப்பு
சிறுகதைக்கான இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/53/
பஞ்ச காலங்களில் மனிதன் நரமாமிசம் உண்டிருப்பானா? அதற்கான சாத்தியங்கள் வரலாற்றில் உள்ளனவா? இந்தக் கேள்விகளை ஆசிரியர் நம்முன் வைக்கிறார்.
ஒரு அமெரிக்க இந்திய தொழிலதிபனுக்கு, கெய்ரோ நகரைச் சார்ந்த அவனுடைய தொழில் பங்குதாரர் விருந்து கொடுக்கிறார். இந்தியன் சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். விருந்தில் சாஷ் எனும் பிரத்யேக மது அளிக்கப்படுகிறது, அதன் சுவையில் மயங்குகிறான். இந்தியனுக்கு வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளது. அந்த நகரில் முன்னாள் வரலாற்று ஆய்வாளர் ஒருவர் நர மாமிசம் உண்ட காலத்தை எழுதி வைத்த குறிப்புகளைப் பற்றி பேசுகிறான். அவனுடைய நம்பிக்கை நாக்கின் ருசி காலம்காலமாக மருவி வேறுவடிவில் இன்னும் தொடரும் என்பது. எதோ ஒரு வகையில் தற்காலத்திலும் இந்த வழக்கம் தொடர்கிறது என்றும், அந்த நகரின் உணவு முறைகள் குறித்து அறிந்துகொள்ள விருப்பம் என்றும் சொல்கிறான்.
அவனால் அதற்கான தடயங்களை அறிய முடியவில்லை. பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்புகிறான். பரிசாக ஒரு பெட்டி நிறைய சாஷ் மது அவனுக்கு முந்தைய விமானத்தில் அனுப்பப்படுகிறது. இந்தியனுடைய நம்பிக்கையான இந்தப் பழக்கம் தொடர்கிறதா இல்லையா என்பது கதையின் கடைசிப் பத்தியில் தெரிகிறது.
இந்தக் கதை ஏன் ஒரு அறிவியல் புனைவாகிறது என்பது எனக்கு புரியவில்லை. நரமாமிசம் உண்ணுதல் என்பதை ஒரு மிகைக் கற்பனைக் கதை என்று வகைப்படுத்தலாம், அறிவியல் புனைவு என்று வரையறுப்பதில் எனக்கு தயக்கங்கள் உள்ளன. ஆனால் விசும்பு தொகுப்பில் இதுவும் தரமான ஒரு சிறுகதைதான். கதையின் முடிவில் சொல்லப்படும் திருப்பம் சுவாரசியமான ஒன்றாக இதை மாற்றுகிறது.
உணவு குறித்த கேள்விகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன. உணவுப் பழக்கங்கள் நம்மிடம் எப்படி கடத்தப்படுகின்றன? குழந்தைகள் தந்தையோ, அன்னையோ விரும்பி உண்ணும் உணவுகளை தாமும் விரும்புவதைப் பார்க்கிறோம், மரபணு மூலம் கடத்தப்படுகிறது. இவையில்லாமல் மரபாக மதம் போன்றவற்றாலும், அதன் சம்பிரதாயங்கள் மூலமும் இந்த எண்ணங்கள் நம்மில் இயல்பாக வந்து அமைகின்றன.
இந்தக் கதையின் பேசுபொருளான நர மாமிசப் பழக்கம் வேறொரு வகையில் அங்கு தொடர்கிறது. பெரு நாட்டின் மதுவான மஸாட்டோ, வேர்க்கிழங்கை உண்டு ஊறிய எச்சிலைப் பயன்படுத்தி புளிக்கச்செய்து உருவாக்கப்படுவது என்ற செய்தி நினைவுக்கு வருகிறது.
நம்முடைய தென்னிந்திய உணவுப் பழக்கத்தில் ஏதேனும் விசித்திரமான உணவுகள் உள்ளனவா? மழைக் காலங்களில் ஈசலை உண்ணும் வழக்கம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். சிறு வயதில் எலி, பெருச்சாளி போன்றவற்றின் மாமிசத்தை நான் உண்டிருக்கிறேன். ஆனால் வினோதமான உணவு?
நாம் எல்லோரும் தாய்ப்பால் அருந்தித்தானே வாழ்வையே துவங்குகிறோம்…
Comments
Post a Comment