பித்தம், அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு

                                                 

சிறுகதைக்கான இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/58/

உலகின் கண்டுபிடிப்புகள் எல்லாமே ஒருவகை பித்து நிலையில் இருந்த மனிதர்களால் மட்டுமே சாத்தியமானது. அவர்களே கனவு காண்கிறார்கள், கனவை நோக்கிப் பயணிக்கும் துணிவைப் பெறுகிறார்கள், அந்தக் கனவுக்காக பலியாகியுமிருக்கிறார்கள். இந்தக் கதை அது போன்ற ஒரு பித்து நிலையில் உள்ள மனிதனையும், அவனுடைய தேடலையும் பேசுகிறது. பித்தன் கோவில் பண்டாரம், பித்து இரசவாதத்தால் தங்கத்தை உருவாக்குவது.

கதையை இரண்டு முறை வாசித்தேன். இரண்டாவது முறை ஒரு சிறுகதையின் நுண்தகவல்கள் எப்படி ஒரு சூழலை நம் மனதில் ஆழமாக உருவாக்கி, கதைக்குள் நம்மை காந்தம்போல இழுத்துக்கொள்கிறது என்பதற்கு ஒரு சான்று. பிள்ளை உண்ணும் உணவு, கூடம், தொழுவத்து மாடுகளின் கால்மாற்றக் குழம்பொலிகள், சமயலறை இருட்டு, பட்டா வந்தமரும் கல்லின் குளுமை எல்லாமே நம்மை கதைக்குள் கட்டிப்போடுகிறது.

பண்டாரம் தங்கத்தை சித்தர்களின் இரசவாத முறைகொண்டு உருவாக்கிவிடமுடியும் என்று நம்பி இருபது வருடங்களாகப் போராடுகிறார். பிள்ளையிடம் காசு வாங்கி தங்கம் உருவாக்க முயன்று பலமுறை தோற்கிறார். இந்த முறை கடைசி என்றும், தங்கம் உருவாக்கும் செயலையும் சூத்திரத்தையும் முற்றிலும் அறிந்துகொண்டதாகவும் சொல்கிறார். 

பிள்ளையின் மகன் கோலப்பன் கடவுள் நம்பிக்கையற்றவன், பகுத்தறிவுவாதி. அவன் பண்டாரத்தின் நம்பிக்கைகளைப் பரிகாசம் செய்கிறான். பகுத்தறிவின், அறிவியலின் பக்கம் நின்று பேசுகிறான். கோலப்பனுக்கும், பண்டாரத்துக்குமான உரையாடலில் அறிவியல் புனைக்கதைகான கட்டுமானங்கள் விரிகின்றன. அணுவின் அமைப்பு, உலோகங்களின் கலவை என தங்கம் உருவாவதற்கான சாத்தியங்களும், குறைகளும் விரிவாகப் பேசப்படுகின்றன.

அரை மனதுடன் பணம் கொடுக்கிறார் பிள்ளை, பண்டாரம் இரவு தங்கம் காய்ச்சுகிறார். கதையின் முடிவில் அழகான ஒரு முடிச்சு உள்ளது, கதை நம் மனதில் ஆழமாக உள்ளிறங்குகிறது.

இந்தக் கதையின் பண்டாரம் எனக்கு ஜெயமோகனின் 'மலைகளின் உரையாடல்' கதையின் சுதாகரையும், 'குருவி' கதையின் மாடன்பிள்ளையையும், 'மாயப்பொன்' கதையின் நேசப்பனையும் நினைவுபடுத்தியது. நம்பும் ஒன்றை எப்படியும் செய்து முடித்துவிடவேண்டிய பித்தும், அந்தச் செயலில் ஞானமும் பெற்ற அழகான கதாப்பாத்திரங்கள்.

இந்தக் கதையில் தங்கம் என்பது பலி கேட்கும் ஒரு யட்சியின் குறியீடுதான். அது இடைவிடாது பண்டாரம் போன்ற ஆத்மாக்களின் மனதில் ஏறி அமர்ந்துகொண்டு தனக்கானதைப் பெற்றுக்கொள்ளும். இன்னொரு கோணத்தில் தங்கம் என்பது செல்வத்துக்கான ஒரு பிம்பம், பேராசை எனும் அம்சம் அதனுடன் எப்போதும் பயணிக்கும் ஒரு பண்பு. பித்து என்பது தனது நம்பிக்கைகளைக் கண்மூடித்தனமாகப் பின்தொடரும் ஒரு நோய், அது தன்னைப்பெருக்கிக்கொண்டு அதன் ஊடகத்தை அழித்துவிடும் ஒன்று.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை