விக்ரம் திரைப்படம் - கமல்ஹாசனின் நடுவிரல்

                                         

தமிழ்ச் சூழலில் திரைப்படங்களின் தாக்கம் ஊடுருவாத ஒரு வாழ்வு ஒருவருக்கு சாத்தியமில்லை. கவனமாக விலகிச் சென்றாலும், சமீபத்திய சர்ச்சைக்குரிய அல்லது அதிகம் பேசப்படும் திரைப்படங்கள் குறித்த செய்திகள் நம்மை வந்தடைந்துகொண்டே இருக்கின்றன. ஒன்று 'கடைசி விவசாயி கடந்த நூறாண்டுகளில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலேயே உச்சம்' என மிஷ்கின் போன்ற pseudo அறிவுஜீவிகளின் உளரல்கள், அல்லது 'தமிழ்ச் சினிமாவின் வசூல் சாதனையை முறியடித்த' என்பது போல மிகவும் நூதனமாக விளம்பரப்படுத்தப்படும் செய்திகள். இதன் பிண்ணனியில்தான் 'விக்ரம்' திரைப்படத்தை நேற்று மாலை பார்த்தேன்.

கடந்த பத்தாண்டுகளாக திரைப்படங்களில் ஆர்வமிழந்து முழுக்க இலக்கிய வாசிப்பின் பக்கம் சென்றுவிட்டவன்தான் என்றாலும், சுவாரசியமான திரைப்படங்களை என்றும் காண விருப்பமுள்ளவன். சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அசுரன், பொல்லாதவன், ஆரண்ய காண்டம், ஜென்டில்மேன், தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் என்று தமிழில் பல திரைப்படங்கள் என் நினைவில் எழுகின்றன, ஆங்கிலத்திலும் Pulp Fiction, Inglorious Basterds, Once Upon a Time in Hollywood, Snatch என்று பல திரைப்படங்களைச் சொல்ல முடியும். சமீபத்தில் K.G.F. பாகம் ஒன்று பார்த்தேன், அதன் பிரம்மாண்டம் மிகவும் கவர்ந்தது. 

'விக்ரம்' வியாபார ரீதியாக வெற்றிபெற்ற கமலின் படங்களில் முதன்மையானது என்பது தெளிவாகத் தெரிகிறது. K.G.F., பாகுபலி போன்ற படங்களை விட வசூலில் சாதனை என்று ஜெயமோகன் போன்றவர்களே சொல்லியிருக்கிறார்கள். 

போதைப்பொருள், நிறைய துப்பாக்கி, ஒரு தாதா, மோசமான போலீஸ் அதிகாரி, ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, கொல்லப்படும் மகன், இதயக் கோளாருள்ள பேரன், கமல் எனும் நாயக பிம்பம் இப்படியான ஒரு கதைக்களம். வியய் சேதுபதி, பகத் ஃபாசில் என்று Usual Suspects படத்தின் முக்கிய பாத்திரங்கள். ஆனால் கதை என்ற ஒன்றை படம் முழுக்க இருட்டில் துளாவிக்கொண்டேதானிருந்தேன். இன்று காலை கூட சில புள்ளிகளை இணைத்து கதை எனும் அரிய அம்சத்தை அடைய முயன்றேன், ஒன்றும் அமையைவில்லை விட்டுவிட்டேன். படத்தை திரையரங்குகளில் பார்த்து Orgasm அடைந்த தமிழ் உள்ளங்கள் எதற்கும் கதை என்ற ஒன்று பிடிபட்டிருக்காது என்றே எண்ணுகிறேன்.

இதில் கமல் இறங்கியடித்திருக்கிறார். திகட்டத் திகட்ட வன்முறை, துப்பாக்கிச் சூடு, விஜய் சேதுபதியின் மூன்று பொண்டாட்டிகள், கெட்ட வார்த்தை வசனங்கள், கைலி கட்டிக்கொண்டு அசைவச் சமையல் செய்யும் Youtube பிரபலங்கள் என்று நம் தமிழ் உள்ளங்களின் perversion நன்றாக உள்வாங்கப்பட்டு அதைப் பூர்த்தி செய்வதை மட்டுமே  குறிக்கோளாகக்கொண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படியெல்லாம் சொல்வதானால் நான் ஒன்றும் 'பரிசுத்தப் புளுத்தியல்ல'. என் ஆழுள்ளத்திலும் வன்முறை, காமம், துவேசம், பொறாமை போன்ற உணர்வுகள் அதனதன் உன்னதங்களில் ஊறிக்கொண்டுதானிருக்கிறது. ஆனாலும் நமக்கு வன்முறையின்மேல் இத்தனை பிரேமையா? அயர்ச்சியாகத்தானிருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. படம் முழுக்க இருட்டும், புளுதியுமாக பின்னி மில்ஸை சில மாதங்களுக்கு வாடகைக்கெடுத்து அங்கேயே தங்கிவிட்டார்கள் போலத் தெரிகிறது. பின்னி மில்ஸ் வன்முறை நிறைந்த தமிழ் சினிமாக்களுக்கு ஒரு புனிதத் தளம். பிரம்மாண்டம் என்ற உணர்வு எனக்கு எழவே இல்லை. மாறாக, படத் தயாரிப்பில் ஒருவகை கஞ்சத்தனம்தான் தெரிந்தது. இருட்டு, புளுதி என்பதெல்லாம் படத்தின் கதையம்சத்தை ஒட்டியவை என்று வாதிடலாம், ஆனால் ஒரு கமர்ஸியல் படத்தின் பிரம்மாண்டம் கண்களை நிறைக்க வேண்டாமா?

படத்தின் வசனங்களோ, காட்சிகளோ எதுவும் கவரவில்லை. படத்தை நீ ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் இதற்கெதிராக வாதிடலாம். ஆனால் கமர்ஸியல் படம் பார்த்தவுடன் நம்மில் ஏற்படுத்தும் முதல் தாக்கம் என்ன என்பதே என்னளவில் முக்கியமான ஒரு அம்சம், அது  நிகழவே இல்லை. கமல் வயதின் காரணத்தால் அயர்ந்து காணப்படுகிறார். வழக்கம்போல போலி அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கில வசனம் பேசுகிறார். திடீரென்று போதைப்பொருட்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்க 'நாம் மீண்டும் குரங்காகிவிடுவோம்' என்று அபத்த வசனம் சொல்லி தன் சமுதாய அக்கறையைப் பறைசாற்றுகிறார். 

பழைய விக்ரம் திரைப்படத்தை இன்றும் கூட என்னால் விரும்பிப் பார்க்கமுடியும். 1986ல் எடுக்கப்பட்ட படத்தின் பிரம்மாண்டம் குறித்த வியப்பு என்னில் இன்னும் அடங்கவே இல்லை. ஆனால் 2022ன் விக்ரம்? இந்தப் படத்தின் வெற்றி கமலின் 'big boss' புகழால் சாத்தியமான ஒன்று எனும் முடிவுக்கே வருகிறேன். கமல் தமிழக மக்களை நோக்கிச் சிரித்துக்கொண்டே மறைமுகமாக நடுவிரல் காட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிம்பம் தோன்றுகிறது. கமல்ஹாசன் என்ற ஆளுமை தயாரித்து நடித்திருக்கும் இந்தப் படம் குறியீட்டு ரீதியாக எனக்கு பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது.

படத்தின் இறுதியில் சூர்யா வருகிறார், இந்த ஒட்டுமொத்த போதைப்பொருள் வில்லன்களுக்கெல்லாம் தலைவனாக, 'Rolex' என்று நினைவு. அவரும் முரட்டுத் தோற்றத்தில் ஒரு மனிதனின் தலையை வெட்டி வீசிவிட்டு 'ங்கோத்தா' என்றெல்லாம் வசனம் பேசுகிறார். ஒருவேளை அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை விதைப்பதற்காக இருக்கலாம். இதே போல எடுக்கப்பட்டால் (எடுக்கப்பட்டே தீரும்) அடுத்த பாகமும் வெற்றிதான் என்பதை உணர ஒன்றும் அதி புத்திசாலியாக இருக்கவேண்டியதில்லை.

விக்ரம் படத்தின் அடுத்த பாகத்துக்கான என் எண்ணங்களையும் முன்கூட்டியே இங்கு பதிவு செய்துகொள்கிறேன், 'ங்கோத்தா தாறுமாறு'.

Comments

  1. Amazing balaji. U almost elaborated what I was asking myself through a crisp question. "What's in this creation that made this to be celebrated like this?"

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை