பூர்ணம், அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு

                                                     

சிறுகதைக்கான இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/61/

மனித மூளை, அதன் அமைப்பு, செயலபாடுகள் போன்றவை இன்னும் இயற்கை காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு ரகசியப் பேழை, அதைத் திறந்து உள்ளிருக்கும் ரகசியங்களை அறிந்துகொள்ள பல நூறாண்டுகளாக மனிதன் முயன்றுகொண்டுதனிருக்கிறான். அறிவியல், தத்துவம், இலக்கியம் மற்றும் இதர கலைகள் என மனித மூளை பற்றிய குறிப்புகள் நுழையாத இடங்கள் மிகக் குறைவு. 

மூளைதான் நம்மைச் செயல்படுத்துகிறது, நாம் அதன் கட்டளைகளுக்கு அடிபணியும் உடல் மட்டுமே. மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் மூளையின் அமைப்பில் தனித்தன்மை உண்டு. பிறப்பில் அடைந்துகொண்டவற்றை சூழல், அனுபவங்கள் என நாம் ஒவ்வொருவரும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறோம். மூளை நரம்பியல் சார்ந்த வார்த்தைகளில் சொன்னால், மூளையின் நியூரான் இணைப்புகளை விரித்துக்கொண்டே செல்கிறோம்.

இந்த மூளை எனும் ஒன்றரை கிலோ கொழகொழச் சரக்குதான் ஹிட்லர் போன்ற உலகின் வரலாற்றையே மாற்றியமைத்த சர்வாதிகாரர்கள் முதல் ஜெயமோகன் போன்ற எழுத்து ராட்சஸர்கள் வரை இயக்கும் ஒரு மாபெரும் சக்தியாக இருக்கிறது. இந்தக் காரணங்கள்தான் இயல்பாகவே மனிதனுக்கு இந்தச் சிறு உடல் அங்கத்தின்மேல் அதீத ஈர்ப்பை அளித்து, அந்தப் பேழையின் ரகசியங்களை உணர்ந்துகொள்ளும் இச்சையை அளிக்கிறது.

மூளையின் முழு ஆற்றலில் ஒரு சிறு பகுதியைத்தான் இத்தனை ஆயிரமாண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் மனிதனால் பயன்படுத்த சாத்தியமாகியுள்ளது. மனித மூளையின் நியூரான் இணைப்புகள் உடல் அளிக்கும் மின்னூட்டம் மற்றும் இன்னும் சில காரணிகளால் உயிர்ப்புற்று தகவல்களைச் சேகரிக்க, தொகுத்துக்கொள்ள ஒளிர்கிறது. பொதுவாகச் சொன்னால் எத்தனை நரம்பு முடிச்சுகள் மூளையில் இருக்கின்றனவோ அத்தனை ஆற்றல் கிடைக்கப்பெறும்.

டாக்டர் வினோத் பட்டாச்சார்யா மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர். மனித மூளையின் நியூரான் இணைப்புகளை, இயக்கத்திறனை முழுமையாகப் பயன்படுத்திவிடும் சாத்தியங்களை ஆராய்கிறார். விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் Performance Enhancers எல்லோரும் அறிந்த ஒன்று, குறிப்பாக Steroids. இது உடலின் இயக்கத்தை செயற்கையாகத் தூண்டி அதிக ஆற்றல் அடைவதற்கு. அதேபோல மூளையின் இயக்கத்திறனைக் கட்டுப்படுத்த, கூட்ட Cognitive Enhancers எனும் தூண்டிகள் பரவலாகக் கிடைக்கின்றன.

அதிக கவனக் குவிப்புக்காகவும், பதற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்காகவும் இந்த வகை தூண்டிகள் மருந்துவடிவில் கிடைக்கின்றன. மனநோய் போன்ற பிரத்யேகப் பிரச்சனைகளுக்கு இது போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளில் ஒன்றை, சீன மூலிகையைச் சேர்த்து மூளையின் மின்னூட்டங்களை அதிகப்படுத்தும் சாத்தியங்களை விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர். இந்த மருந்து மனித மூளையின் இயக்கத் திறனை பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. அவர் இந்தச் சோதனையை அவருடைய கூர்காவுக்கு செயல்படுத்தி அதன் விளைவுகளைக் கண்கூடாகக் காண்கிறார்.

அந்த கூர்கா இப்போது ஒரு சாமியார். அவரைக் காண ஒரு பத்திரிகையாளரின் உதவியைப் பதற்றமாக நாடுகிறார். அவர்கள் அந்தச் சாமியாரைச் சந்திக்கிறார்கள், உன்னதமான் அக உணர்வுகளை அடைகிறார்கள், ஒரு பெரிய மகானைச் சந்தித்த திருப்தி அவர்களுக்கு. முழுமையான மனிதர் அவர், பூரணமானவர், ஆராய்ச்சியாளரின் பதற்றம் தணிகிறது.

அவர் இந்தச் சோதனையின் இன்னொரு வடிவமாக மனித மூளையின் முன் பகுதியான Pre Fontal Cortex ஐ மட்டும் முடுக்கிவிட்டு அந்தச் சாமியாரின் தம்பியிடம் ஒரு சோதனையைச் செய்திருக்கிறார். மூளையின் அந்தப் பகுதி மனிதனின் கூர்மையான செயல்களான சிந்தனை, தகவல் தொகுப்பு, திட்டமிடல் போன்றவற்றுக்கு அடிப்படையானது.

இப்படி மூளையின் ஒரு பகுதி மட்டும் அதி ஆற்றல் பெற்ற மனிதனால் உருவாகும் விளைவென்ன என்பது நம் கற்பனைக்கு விடப்படுகிறது. இயற்கை எல்லாவற்றையும் சமன்செய்யும் ஆற்றல் படைத்தது. நாம் இயற்கையாகவே மூளையின் எல்லாப் பகுதிகளையும் பயன்படுத்தாமல் இருக்க வடிவமைக்கப்பட்டிருக்கிறோம், அது இயற்கையின் ஆணை. இதை மீற முயலலாம், ஆனால் வேறு ஏதோ ஒரு வகையில் இந்த மீறலின் விளைவுகள் சமன்செய்யப்படும்.

கதையின் நடை பகடியும், ஒழுக்குமாக இயல்பான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது, நமக்கு நிறைய தகவல்களையும் அளிக்கிறது. ஒரு நல்ல அறிவியல் புனைக்கதை நம்மில் ஏற்படுத்தும் அறிதலும் நிகழ்கிறது. ஜெயமோகனின் மூளையை ஆராய்ச்சிக்குள்ளாக்கினால் என்ன எனும் வினோதமான சிந்தனை மனதில் எழுந்தது. எந்தவித ஊக்கிகளுமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் அரிய மனிதர் அவர். அவர் எழுதும்போது ஒளிரும் நியூரான்களை எண்ணிப்பார்த்துக்கொள்கிறேன், அதன் ஒளி ஒரு ஊரையே திருவிழாக்கோலமாக்கிவிடுமோ?

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை