வௌவால் தேசம் நாவல், வாசிப்பனுபவம் - ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் ஒரு கடிதம்
எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் சோ. தர்மன் எழுதிய 'வௌவால் தேசம்' நாவலுக்கு ஒரு வாசிப்பனுபவம் எழுதியிருக்கிறார். வல்லினம் இணைய இதழில் வெளிவந்துள்ள இந்தக் குறிப்பை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம்.
https://vallinam.com.my/version2/?p=8483
கடிதம் எழுதப்பட்ட நாள்: ஜூலை 7, 2022
'வௌவால் தேசம்' வாசிப்பனுபவம் மிகவும் கவர்ந்தது, இதை ஒரு ரசனைக் குறிப்பு என்றும் சொல்லலாம். சோ. தர்மன் போன்ற மூத்த படைப்பாளியின் நாவலைப் பற்றி எழுதுகையில் அதை மதிப்புரை என்றும் விமர்சனம் என்றும் சொல்லாமல் தவிர்ப்பதன் பிண்ணனியில் உள்ள உங்கள் பணிவு (தயக்கம்!) புரிகிறது.
தமிழக வரலாற்றை மூன்றாகப் பிரித்து நிறுவி, அதன் வாயிலாக நாவலை அலசியிருந்தது மிக ஆழமான கோணம். நாவலின் முக்கிய புள்ளிகளின், கதாப்பாத்திரங்களின் வாயிலாக உங்கள் எண்ணங்களையும், ஆசிரியரின் கோணத்தையும் அணுகியிருந்தது நன்றாக அமைந்திருந்தது. நான் இன்னும் வாசிக்கவில்லை, நாவலை வாசிக்கும் ஆர்வமும் கூடுகிறது.
மேலும் இந்த நாவல் உங்களுடைய சிறுகதைகளுக்கு நெருக்கமான கதைக் களங்களையும், கரிசனங்களையும் உள்ளடக்கியது என்பதால் இயல்பாக உங்கள் குரல் வெளிப்பட்டிருந்தது. இந்தக் குறிப்புக்குப் பின்னால் உள்ள உழைப்பையும் நான் எந்தவையிலும் குறைத்து மதிப்பிடவில்லை.
இதுபோன்ற புனைவுக்கு வெளியே மதிப்புரை, விமர்சனம் என்பதையெல்லாம் நம் ஆசிரியர் (ஜெயமோகன்) தவம் போலச் செய்திருக்கிறார். நீங்கள் அவருடைய பள்ளியில் இருந்து வந்தவர், உங்களிடமிருந்து மேலும் இதுபோன்ற எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
இந்தவகை எழுத்துகள் மூலம் உங்களுக்கேயான கருத்துப்பரப்பு உருவாகும் வாய்ப்பு மிகவும் அதிகம் (நம் ஆசிரியர் சொல்வதுபோல), அது உங்கள் படைப்புகளையும் பரவலாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதே என் நம்பிக்கை. உங்களைப் பற்றிய பரிச்சயமிருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தக் குறிப்பை வாசித்தேன். மற்ற வாசகர்களும் இதையே செய்வார்கள் என்பதே என் எண்ணம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் குறைகளும் விமர்சனங்களும் இல்லை, ஒரு வகையில் நானும் ஒரு நாவலை எப்படி அணுகவேண்டும், எப்படி வாசிப்பனுபவம் எழுதவேண்டும் என்று கற்றுக்கொள்கிறேன்.
அருமையான வாசிப்பனுபவம்,
வாழ்த்துகள் நவின்.
அன்புடன்,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment