தன்னறம் சிறுகதை - சொல்வனம் இதழ், ஒரு கடிதம்

                                                     



சொல்வனம் இதழில் வெளிவந்த 'தன்னறம்' சிறுகதையை ஒட்டி நண்பர் சு. வெங்கட்டுக்கு எழுதிய சிறு கடிதம்,

கடிதம் எழுதப்பட்ட நாள்: ஜூன் 30, 2022

அன்புள்ள வெங்கட்,

'தன்னறம்' சிறுகதையை மூன்று முறை வாசித்தேன், உடனடியாக எழுதமுடியவில்லை மன்னிக்கவும். கதை எனக்கு பிடித்திருந்தது. நீங்கள் உரையாடலில் குறிப்பிட்ட அமெரிக்க வாழ் இந்தியச் சூழலை அழகாக கதையில் நிறுவியிருக்கிறீர்கள். கதையின் தொடக்கமும், இந்தியப் பொருட்கள் விற்கப்படும் மளிகைக் கடைகளின் அடிப்படைகளையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். 

கொரொனா நோய்ச் சுழலில் இந்தியர்களைப் போன்ற புலம் பெயர் நாட்டவரின் துயரையும், அவர்களின் பலகீனங்களை வியாபார லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரமான மனிதர்களின் கதையும் அடிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் இந்திய முதலாளியே கூட இன்னொரு புலம்பெயர் மனிதனைச் சுரண்ட எத்தனிக்கிறான், கதையில் இந்த முரண் அழகாகப் பதிவாகியிருந்தது.

இன்னொரு வகையில் சார்பு விசா வாங்கிக்கொண்டு வந்து வேலையில்லாமல் வீட்டில் இருக்க நேரும் ஆண்களின் கதையும், தனிமையும் கதையினூடாக இழையோடுகிறது. நான் கண்கூடாக இரண்டு நண்பர்களையும் அவர்களின் அலைபாய்தல்களையும் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

அவன் அந்த தென் அமெரிக்கப் பெண்ணிற்குச் செய்திருக்கக்கூடுவது என்ன? அவளைக் குறித்து நோய்வாய்ப்பட்டிருக்கும் முதலாளியிடம் சொல்லி வேலைக்கு எடுத்திருக்கச் சொல்லியிருக்கலாம், அல்லது அவருடைய மருமகனிடம் இன்னும் அவளுடைய சூழலை ஆழமாகப் புரிய வைத்து அவன் மனதை மாற்றியிருக்கலாம். இந்த முடிவுகளுகே கதையின் வாசிப்பு என்னைக் கொண்டு சென்றது. கதையின் முடிவில் வாசகனின் கற்பனைக்கு பூடகமாக இடமளித்திருந்த நுட்பம் அருமை.

தலைப்பும், கதையும் நேரடியாகப் பேசுபவைதான் என்றாலும் கதையின் சூழல், கதைக்குள் இருந்த கரிசனம் இரண்டும் சேர்ந்து நல்ல வாசிப்பனுபவம் தந்தது, வாழ்த்துகள்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை