சிவனடியான் - சிறுகதை

                                          

சிவனடியானை நான் சந்தித்தது பகல் நேரம் நீண்ட ஒரு அமெரிக்க முதுவேனில் நாளொன்றின் மாலைப்பொழுதில். கைப்பேசி அழைப்புக்கு பதிலளித்துவிட்டு நிமிர்கையில் கடந்து சென்றுகொண்டிருந்தவர், திரும்பி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். ஐந்தடியைத் தாண்டி நின்றுவிட்ட உயரமும், கூனிட்ட முதுகுடன் சற்று பக்கவாட்டில் சாய்ந்த தேகமும், நீண்ட கைகளும், முன் வழுக்கையுமாக எழுபத்து நான்கு வயது உற்சாக மனிதர். என்னை நெருங்கும்போதே அதிகம் பேசக்கூடியவர் என்று உணர்ந்துகொண்டேன். 

"நீங்க தமிழா?".

"ஆமா சார்."

"இல்ல நீங்க போன்ல பேசுனதக் கேட்டேன். இங்க தெலுங்கர்களும், கன்னடர்களும் கொஞ்சம் தமிழ் பேசுரத கேட்டிருக்கேன். உறுதிப்படுத்திக்கனுமில்ல?".

"தமிழ்தான்" என்று புன்னகைத்தேன்.

"இங்க எங்க இருக்கீங்க?".

"5427ல, சி பிளாக்".

"ஆங்கன ஒரு பஞ்சாபி பேமிலி ரொம்ப வருசமா இருந்தாங்க, அவரு நல்லாப் பேசுவாரு. நீங்க எவ்வளவு நாளா இருக்கீங்க?"

"இப்பதான், ஒரு வருசம் ஆச்சு".

"இந்த கம்யூனிட்டில முன்னாடி நாலஞ்சு தமிழ் ஃபேமிலி இருந்தாங்க. அவங்க எல்லாம் இப்ப வீடு வாங்கிட்டு ஜெரோம் வில்லேஜ் போயிட்டாங்க. ப்ளெயின் சிட்டி தெரியும்ல? உங்க பேர் என்ன?"

"குமார்". பொதுவான ஒரு தமிழ்ப் பெயர், அவர் என்ன ஊகிக்க விரும்புகிறார் என்று தெரிந்தது.

"ஊரு".

"கரூர்" என்றேன்.

"நான் கரைக்குடி, பனையபுரம் ஊரு".

"பண்ணையபுரம்" என்று சொல்லிப் பார்த்தேன்.

"இல்ல, பனையபுரம். பனைமரம்னு சொல்றமில்லையா?" என்று இழந்துவிட்ட முன்பற்களுடன் சிரித்தார்.

அவரை எனக்குப் பிடிக்கத்தொடங்கியது. நிறைவான வாழ்வொன்றை வாழ்ந்துவிட்டதன் பெருமிதமும், தன்னம்பிக்கையும் அவர் பேச்சிலும், உடல்மொழியிலும் இருந்தது.

"ஆச்சி வந்திருக்காங்களா" என்றேன்.

"காரைக்குடின உடனே ஆச்சினு சொல்லி சரியாக் கேக்கறீங்களே" என்று வியந்தார்.

"நீங்க இங்க யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?". எனக்கு இங்கு எந்தக் குடும்பமும் இன்னும் அதிகம் பழக்கமாகவில்லை.

"நான் அவுட்சைடு. செல்ஸ் மில் ட்ரைவ்ல மக வீடு, இங்கிருந்து ஒரு மைல். இந்தக் கம்யூனிட்டிலதான் நான் வாக்கிங் போறது, வெளிய நடக்குறது போர்" என்றார்.

"அந்த முக்கு விட்ல ஒரு டெல்லி ஃபாமிலி. அவங்ககிட்ட கேட்டேன், இங்க யாரும் தமிழ் இருக்காங்களான்னு. அவங்க உங்க வீட்டத்தான் காமிச்சாங்க" என்று தொடர்ந்தார். 

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய" என்று ஓசை நயத்தோடு திருவாசகப் பாடலைப் பாடியவர், "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். திருவாசகம் படிக்கறது, செல்போன்ல எதையாவது வாசிக்கறதுனு பொழுது போகுது" என்றார்.

அடுத்த பத்து நிட உரையாடலில் அவருடைய இன்னொரு மகன் கொலராடோவில் வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வது, சென்னையிலும் கோவையிலும் திருமணம் செய்து கொடுத்த இரண்டு மகள்கள், பதினைந்து வருடங்களுக்கு முன் இதயத்தில் ஸ்டென்ட் வைத்துக்கொண்டது, சைவ உணவுமுறை, கண்ணதாசன் கவிதைகள், கல்லூரிப் படிப்பு முடிந்து தந்தையின் தொழிலான நிதி வணிகத்தில் நுழைந்தது, மூன்று மாதங்களாக அமெரிக்காவில் இருப்பது, இருபது நாட்களில் ஊருக்குக் கிளம்பும் திட்டம் என்று தன்னுடைய முழுக் கதையையும் உத்வேகமாகப் பகிர்ந்தார்.

விடைபெறுகையில் "5427ன்னு தான சொன்னீங்க, வரேன்" என்றவரிடம், "உங்க பேரு" என்றேன். "சிவனடியான்" என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.

சந்தித்த இரண்டாவது நாள் மாலை ஐந்தரை மணிக்கு கதவு தட்டப்படும் ஓசை. கதவின் சிறு கண்ணாடித் துளையை நோக்கிய மகா, "ஆந்தப் பெரியவர் வந்திருக்காரு" என்றாள். சிவனடியானைச் சந்தித்ததை அவளுக்கு சற்று வேடிக்கையாகச் சொல்லியிருந்தேன்.

உள்ளே நுழைந்தவர் கூச்சமில்லாமல் சோஃபாவில் அமர்ந்தார். மகாவிடம் சர்க்கரை குறைவான தேநீர் கேட்டுப் பெற்றுக்கொண்டார். மீண்டும் சரளமான பேச்சு. "புலியூர் சிமெண்ட் பேக்டரி இருக்குமே, பக்கத்துல கூட வீரராக்கியம் ஸ்டேசன்" என்று பல வருடங்களுக்கு முன் கரூர் வழியாகப் பயணம் செய்ததை சரியாக நினைவுகூர்ந்தார். நான் வேலை செய்யும் அலுகலகப் பெயரைக் கேட்டவர் "பொலாரிஸ் மால் பக்கத்தில, ஓரியன் பிளாசா ரோடுதானே, காஸ்ட்கோ கூட பக்கத்துல இருக்குமே" என்று மேலும் ஆச்சரியப்படுத்தினார். அமெரிக்க சாலைகளையும், திசைகளையும் என்னைவிடப் பரிச்சயமாகத் தெரிந்து வைத்திருந்தார். 

"இங்க எந்த கோவிலுக்கு போவீங்க, எஸ்.வி. டெம்பிளா இல்ல பாரதீய ஹிந்து டெம்பிளா?".

"ரெண்டுக்குமே போயிருக்கோம்".

"எஸ்.வி. டெம்பில்ல தமிழ் அர்ச்சகர்லாம் இருப்பாங்களே?" என்று சொல்லிவிட்டு அருகில் வந்து அலைபேசியில் "இங்க பாருங்க பஞ்சாங்கத்துக்குனு ஒரு ஆப் இருக்கு. இன்னைக்கு ஆறு டு ஆறரை இராகுகாலம். நான் இதெல்லாம் நல்லா பாப்பேன்" என்றார்.

விடைபெறுகையில் அவருடைய தொப்பியை மறந்து வைத்துவிட்டு மகாவின் அலைபேசி எண்ணை அழைத்து இருப்பதை உறுதிசெய்துகொண்டார். "எதாவது பொருள மறந்து வெச்சிட்டமனா உறவு தொடரும்னு அர்த்தம். பிறப்பால் தொடரும் உறவுகள் அல்லாமல் பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை. கண்ணதாசன் சொல்றாரு" என்று போனில் சிரித்ததை மகா சொன்னாள்.

அடுத்த பத்து நாட்களில் நான்கு முறை வீட்டுக்கு வருகை புரிந்தார். மகா அவரை 'அய்யா' என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள். நான் அலுவலகம் சென்றிருந்த நாட்களில் அவர் வருகையை மாலை நேரம் ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்லத் தொடங்கினாள். "இன்னைக்கு மத்தியானம் வந்தாரு, கதம்ப சாதம் சாப்டாரு" என்று தகவல்கள் வளரும். அவருடைய வருகையை நாங்கள் இருவரும் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தோம். 

கொலராடோ மகன் வீட்டுக்குச் சென்றிருந்தவர் அடுத்த வருகையின்போது "கொலராடோ இஸ் சிக்ஸ் தௌசண்ட் எய்ட் ஹன்றட் ஃபீட் அபொவ் சீ லெவல்" என்று பேசிக்கொண்டிருந்தார். "இன்னும் ஒன் வீக்தான், ஊருக்குத் திரும்பனும்" என்று சொல்லிக் கிளம்பினார்.

நான்கைந்து நாட்களாக வராமலிருந்தவர், ஒரு ஞாயிறன்று மகாவுக்கு அழைத்து வரலாமா என்று கேட்டுக்கொண்டார். "அய்யா நாளைக்கு ஊருக்கு கிளம்பறாரு" என்றாள் மகா. அரைமணியில் வந்தவர் "டீ வேண்டாம். கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க. நாளைக்கு இதே நேரம் சிகாகோவ்ல இருப்போம்" என்றார். பேசத் தொடங்கினோம்.

"நாலு மாசம இருந்துட்டீங்க. ஊர் நெனப்பு இல்லையா?".

"ஆதெப்படி இல்லாம இருக்கும். அப்பப்ப ஃபிரெண்ட்ஸ் கிட்ட பேசிக்குவேன்".

"ஊர்ல ஆவ்வளவு பெரிய வீட்ல தனியா இருக்கறது கஸ்டமா இருக்காதா சார்?".

"என்ன பன்றது, பழகீருச்சு. வேற வழியும் இல்ல. இங்க இருந்து நீங்கல்லாம் ஊருக்குத் திரும்பவா போறீங்க?" என்று சிரித்தவர், "கொஞ்சம் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க, அவங்களோட வாக்கிங் போவேன். ஆடி மாசம் வீட்ல ராமாயண வாசிப்பு நடக்கும், வழக்கமா ஒருத்தர் வந்து வாசிப்பாரு, கவர்மெண்ட் ஆபீஸர். அப்புறம் மொபைல்ல எதையாவது படிக்கிறதுதான்".

அருகில் வந்து அலைபேசியில் தமிழ்நாடு லைப்ரரி என்று தேடியவர் "இங்க பாருங்க தமிழ் லைப்ரரிலாம் ஆன்லைன்லயே வெச்சிருக்கான், நீங்க கூட வாசிக்கலாம். டெக்னாலஜி எல்லா வசதியையும் கொடுக்குது. நான் எல்லா ஆப்பையும் இன்ஸ்டால் பண்ணிருவேன்" என்றார் ஆர்வமாக.

"அன்னைக்கு வந்தப்ப நீங்க கிரிக்கெட் விளையாடப் போய்ட்டீங்கனு சொன்னாங்க. லசெல் ரோட்ல இருக்க பார்க்லதான ஆடுறீங்க? போனவாரம் டான்ஜீர் ஓபன் மால் போயிருந்தோம், அது வழியாப் போனப்ப உங்கள நெனச்சுக்கிட்டேன்" என்றார். "கிரிக்கெட் பிச் ட்வென்டி டூ யார்ட்ஸ். 220 யார்ட்ஸ் ஒரு பர்லாங்க்" என்று ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தவர், சாமி படங்கள் வைத்திருக்கும் மூலைக்குச் சென்று "முருகன், மாரியம்மன், விநாயகர் எல்லாம் இருக்கா" என்று பார்வையிட்டார்.

கிளம்புகையில் எங்களை ஆசிர்வதித்து நெற்றியில் விபூதி இட்டார். வாசல் வரை சென்றவர் அலைபேசியை எடுத்து "இப்ப பொன்னியின் செல்வன் வாசிக்கிறேன். முதல் பாகம் இருபத்து இரண்டாம் பகுதி போகுது. ஃபிளைட்ல பொழுது போகனும்ல" என்று சொல்லிச் சிரித்து விடைபெற்றார்.

"மறுபடியும் எப்ப வருவீங்க, அடுத்த வருசம்?".

"அவ்வளவு சீக்கிரம் இருக்காது. நாலு வருசத்துக்கு ஒருமுறை அந்தமாதிரி. இல்லன்னா ஏதாவது விசேசமா நடக்கனும்" என்று சொல்லும்போது அவர் வருத்தப்பட்டாரா என்று என்னால் சரியாகக் கணிக்க முடியவில்லை. 

நாம் ஒரு குறிப்பிட்ட வயதில் மரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம். மரணம் நம்மில் ஏற்படுத்தும் நிலைகுலைவை, உலகில் இல்லாமல் போவதன் தவிர்க்கமுடியாமையை பேசிப் பேசி தர்க்கத்தால் ஆற்றுப்படுத்திக்கொள்ள முயல்கிறோம். எழுபத்து நான்கு வயதிலும், அந்த வயதுக்குரியவர்களுக்கேயான மரணம் குறித்த கையறுநிலை வெளிப்படும்  எண்ணங்களையோ, வார்த்தைகளையோ அவர் வெளிப்படுத்தவில்லை என்பதை ஆச்சரியத்துடன் எண்ணிக்கொண்டேன்.

சிவனடியான் படியில் கீழிறங்கி ஒரு பக்கமாகச் சாய்ந்து வேகமாக நடக்கத் தொடங்கினார். எங்கள் கண்களில் இருந்து மறையும் வரை நானும் மகாவும் அவர் செல்லும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் விட்டுச் சென்ற தொப்பியை எடுத்து பத்திரமாக வைத்தேன். அவரும் அழைத்துக் கேட்கவில்லை, அதை நான் எதிர்பார்த்தேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை