தீர்வை சிறுகதை - வல்லினம் இதழ், ஒரு கடிதம்
வல்லினம் இணைய இதழில் வெளிவந்த 'தீர்வை' சிறுகதை குறித்து எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம்,
கடிதம் எழுதப்பட்ட நாள்: ஜூன் 2, 2022
அன்புள்ள நவீன்,
வரலாற்றின் ஒரு துளியை எடுத்துக்கொண்டு, அதில் புனைவுக்கான சில சாத்தியங்களைச் சேர்த்து இன்னொரு சிறுகதையைக் கொடுத்திருக்கிறீர்கள். நாம் பள்ளியிலுருந்து கேட்டுக்கொண்டிருக்கும் 'Divide and Conquer' எனும் உத்திதான் கதையின் அடிப்படை. இதில் வஸ்தாரி வரிசை, சிலம்பாட்ட நுணுக்கங்கள் என கதை முழுக்க கற்றுக்கொள்ள வாசகனாக நிறையத் தகவல்கள் விரவிக்கிடக்கின்றன.
கதையில் சிவன்பாண்டித் தேவரின் கைகளில் உள்ள நோக்கா, அது ஏற்படுத்தும் சப்தம் இரண்டின் குறியீட்டுத்தன்மைகளையும் எண்ணிப்பார்க்கிறேன். நம் மண்ணின், நம் மக்களின் இடையே இருக்கும் வேற்றுமைகளை உணர்த்தும் ஒன்றாக, அதிகாரத்தின், வலிமையின் மேல் தளத்தில் இருக்கும் ஒருவன் பலகீனமானவர்களை வீழ்த்தும் தன்மைக்கு சாட்சியாகவும் இவை என்னுள் விரிகின்றன. நோக்கா என்பது அதன் புனிதப்படுத்துதல்களுக்கப்பால் இயல்பில் வெறும் ஆயுதம்தான்.
சிவன்பாண்டித் தேவரின் மனம் நோக்காவின் ஓசைகளுக்கு இயைந்துகொடுபது ஏன்? ஆயுதங்களின் ஓசை என்பது வசீகரமாக நம்மை ஈர்க்கும் ஒன்றுதான். துரை இந்த நோக்காவைப் பயன்படுத்தித்தான் ஜமீனை வீழ்த்துகிறான் என்பது கதைக்குள் நடந்தேறுகிறது. அவன் இந்த நோக்கவைத் தொட்டுப் பார்க்கிறான், அதன் இயல்புகளைக் கூர்மையாக அவதானிக்கிறான், அதன் உறுதித்தன்மையைப் பாரட்டிக்கொண்டே தனக்கான திட்டங்களையும் வகுத்துக்கொள்கிறான் இல்லையா?
சிலுவை தன்னை அறியாமல் துரையின் கட்டளைகளுக்குக் கட்டுப்படும் காட்சியைச் சொல்லி கதை முடிந்திருந்தது. அவன் சில நொடிகள் அறச்சீற்றம்கொள்கிறான், அடுத்த நொடி அவனுடைய பழக்கப்பட்ட மனம் துரைக்கு செவி சாய்க்கிறது. இது எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தும் ஒன்றாக இருக்கிறது, நாமெல்லோருமே சிலுவையின் இன்னொரு வடிவமாக வாழ்வின் பல தருணங்களில் இருக்கிறோம் என்பது எத்தனை உண்மை.
சிலம்பாட்டத்தின் நுணுக்கங்களை விவரிக்க நீங்கள் பெரும் எத்தனம் எடுத்துக்கொண்டிருந்தது எனக்குப் புரிகிறது, அதைக் காட்சிகளாகவும் கூர்மையாக விரித்திருக்கிறீர்கள்.
ஆயுதங்களின் வலிமை – அதன் விளைவுகள், அதிகாரத்தின் குரலுக்கு செவிசாய்த்தல், நம்முடைய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் நம்பும்தன்மை என எல்லாச் சூழல்களுக்குமான பொதுத்தன்மைகள் கதைக்குள் இருக்கின்றன, வாழ்த்துகள் நவின்.
அன்புடன்,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment