இசக்கி சிறுகதை - வல்லினம் இதழ், ஒரு கடிதம்

                                                 


வல்லினம் இணைய இதழில் வெளிவந்த 'இசக்கி' சிறுகதையை ஒட்டி எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம்,

கடிதம் எழுதப்பட்ட நாள்: மே 1, 2022

அன்புள்ள நவீன்,

செய்வினை செய்வது என்று பொதுவாக அறியப்படும் ஒரு நாட்டார் சடங்கு, 'காசு வெட்டுவது' என்று தென் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது என்று கதை மூலம் அறிகிறேன். ஒரு கூட்டுக் குடும்பம் அதில் தொடர் மரணங்கள், இதன் பிண்ணனியை அறிய விழையும் கதைசொல்லி என ஒரு துப்பறியும் கதையை ஒட்டிய விறுவிறுப்புடனும், நுண் விவரங்களுடனும் கதை அமைந்திருக்கிறது.

கதை கடைசி வரை மையம் சிதறாமல் வாசகனாக என்னைக் கட்டிப்போடுகிறது. கதைத் தொழில்நுட்பத்தில் உங்களுடைய தேர்ச்சியை நன்றாகப் பறைசாற்றும் ஒரு கதை என்றே எண்ணுகிறேன். கதைசொல்லியாக கதை முழுக்க கூர்ந்த அவதானிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கடைசி வரி வரை கதையைத் தாங்கிச் செல்லும் உங்கள் கதை சொல்லும் திறனை வியக்கவே செய்கிறேன். எழுத்தாளனாக சூழலை எப்போதும் கூர்ந்து நோக்கும் ஒரு மனம் இந்தக் கதையில் தெரிகிறது, அது தகவல்களாகவும் பாத்திரங்களின் மன ஓட்டங்களைச் சொல்லும் முறையிலும் நன்றாக வெளிப்படுகிறது.

'காசு வெட்டுவது' எனும் சடங்குக்குப் பின் உள்ள தொடர்ச்சியாக ஒரு விளைவை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கும் மனங்கள், அது ஏற்படுத்தும் நிலைகொள்ளாமை என்று கதை சொல்லியே ஒரு கட்டத்தில் சொல்கிறான், அதுவே வாசகனாக என்னைத் திகைக்க வைக்கிறது. கதையில் ஒரு அமானுஷ்ய தன்மை வந்துகொண்டே இருக்கிறது, இதை ஒரு தேர்ந்த கதையாக்குவதும் அந்த அம்சம்தான் என்று எண்ணுகிறேன். 

கூர்மையான வாசிப்பனுபவம் அளித்த ஒரு சிறுகதை, வாழ்த்துகள் நவீன்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை