தடம் - சிறுகதை
கேளம்பாக்கம் இரயில் நிலையத்தில் நான் நுழைகையில் எதிர்பட்ட பெரிய சுவர்க் கடிகாரம் மணி 11.36 என்று காட்டியது. பிரம்மாண்ட அரைவட்டக் கூரையினடியில் நிர்வாணத் தண்டவாளங்கள் நீண்ட கோடுகளாய் நெளிந்து வெளிச்சத்தில் மறைந்தன. மே மாத வெக்கைக் காற்று நடைமேடையில் பிளாஸ்டிக் பைகளை உருட்டிக்கொண்டிருந்தது. மென்காவியும் வெள்ளை நிறமும் கலந்த தெரு நாய் ஒன்று தாடையை முன்னங்கால்களுக்குக் கொடுத்து சொக்கிக் கிடந்தது. கரிய இரும்பு நாற்காலிகள் ஆட்களற்று, மொத்தச் சூழலும் ஒரு நிலைக்கணத்தில் உறைந்த புகைப்படக் காட்சியாய்த் தோற்றமளித்தது.
ஆளற்ற இரயில் நிலையங்கள் என்னில் எப்போதும் ஏக்கம், நிலைகுலைவு, ஆழ்ந்த அமைதி, கிளர்ச்சி என கலவையான உணர்வுகளைக் கிளர்த்துபவை. இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நிலையத்தில் நுழைவதற்குள் உடலில் வியர்வையை உணர்ந்திருந்தேன். கவிதை வரிகளைத் தேடி ஒரு சிறு பயணம். விசித்திரமான இடங்களில் கவிதை வரிகள் என்னை வந்து தழுவியிருக்கின்றன. பதினைந்தாவது மாடியில் அமைந்த வீட்டின் எல்லாக் கண்ணாடிச் சாளரங்களிலும் தேடியாயிற்று, பயனில்லை.
ஒரு சிறு பயணமும், முன் மதிய நேர மதுவும் சில நேரம் கைகொடுக்கும். அவ்வப்போது இது போன்ற யுத்திகளைக் கையாள நான் தயங்குவதில்லை. கடைசியாக எழுதிய கவிதை என்னை விட்டு அகன்று இருபது நாட்களாகிவிட்டது. எழுதத் தொடங்கிய கவிதைகளும் முற்றுப் பெறாத ஓவியங்களாய்ச் சிதறிக் கிடக்கின்றன. மத்திய கைலாஷ் இருபது நிடங்களில் வந்துவிடும். நிலையத்தில் இறங்கி கால் கிலோமீட்டர் அடையார் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தால் வலதுபுறம் குறுகிய தெருவொன்றில் அரசு மதுபானக் கடை ஒன்று தென்படும். முன் மதிய நேரங்களில் அங்கு அமர்ந்து குடிப்பவர்கள் குறைவு என்பதால் தனிமை கிடைக்கும். மதுவின் சில மிடறுக் கீறலில் அகம் விழித்துக்கொள்ளலாம்.
இரயிலில் அதிகக் கூட்டமில்லை. ஐரோப்பிய நேர வேலைக்கு டைடல் பார்க் செல்லும் கணிப்பொறி இளைஞர்கள் முதுகுச் சுமையுடன் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். மத்திய கைலாஷ் என்று சிவப்பு எழுத்துக்கள் ஒரு செவ்வகக் கண்ணாடியில் ஒளிர்ந்தது. என்னைக் கடந்துசென்ற மனிதர்களின் முதுகுகளைப் பார்த்துக்கொண்டே இறங்கினேன். வலதுபுரம் திரும்பி சில அடிகள் நகர்ந்திருப்பேன், இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு முகம் தென்னங்கீற்றில் ஒளிரும் மின்னலாய் நினைவுகளைக் கிளறியது, 'ஆனந்த் நடராஜன்'. அவரும் என்னைப் பார்த்துவிட்டார்.
கணநேர தயக்கங்களுக்குப் பிறகு அந்தச் சூழலை எதிர்கொள்ள இருவரும் தயாராகிக்கொண்டோம்.
"என்ன சார், எப்டி இருக்கீங்க பாத்துப் பல வருசமாகுது" என்றது எதிர்குரல்.
"ஆமா சார். ரொம்ப நாளாச்சு" என்றேன்.
"2022ல கடைசியாப் பேசுனது, எட்டு வருசமாயிருச்சு, எப்டி இருக்கீங்க?" என்று மறுபடியும் ஒரு கேள்வி.
"போகுது சார். All Good" என்றேன்.
"என்ன லீவுக்கு ஊருக்கு வந்திருக்கீங்களா?"
"இல்ல சார். நான் ஊர்லதான் இருக்கேன், வந்து அஞ்சு வருசமாகுது".
"அப்டியா. இப்ப எங்க இருக்கீங்க?"
"கேளம்பாக்கம்" என்றேன்.
"சரி, ஆபிஸ்?"
"இப்போதைக்கு ஒன்னுமில்ல, சும்மாதான்".
அவர் கண்களில் சிறு வியப்பு தோன்றி மறைந்தது.
"நான் மறுபடியும் TCS" என்றார்.
இருவருக்குமே மனதில் பல நினைவுகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. 2010லிருந்து நான்கு வருடங்கள் ஒன்றாக வேலை செய்து, பயணித்து, குடித்து, கிரிக்கெட் ஆடி, பிறகு நான் 2014ல் அமெரிக்கா சென்றேன். ஆனந்த் எப்போதும் தொடர்பிலிருப்பார். உரையாடல்களின் பல மாத இடைவெளிகளை முதலில் அவர்தான் உடைப்பவர். மீண்டும் உற்சாகமாய்த் தொடருவோம். பேச்சு எப்போதும் குடி, பெண்கள், கிரிக்கெட், சினிமா என்று உற்சாகமாய் அமையும். அவருடைய பேச்சில் வழியும் சென்னையின் ஆதார மொழியில் எனக்கு பெருவிருப்பு.
பன்னிரண்டு வருட நட்பில் காலம் சிறு விரிசலை எங்களுக்குள் வரைந்திருந்தது. மூன்று, ஆறு என்று மாதங்கள் கடந்தன. நான் எப்போதும் தனியானாய் இருக்க விரும்புபவன். என் மௌனம் அவரைத் தீண்டும் என்று தெரியும். எப்படியும் இந்த முறையும் இடைவெளியை உடைப்பார் என்று காத்திருந்தேன். அது நிகழவே இல்லை. அமெரிக்காவின் குளிர்கால இரவொன்றில் மது மயக்கத்தில் அவருடைய அலைபேசி எண்ணை வாட்ஸப்பில் தடை செய்தேன்.
மனம் நீண்டநாள் உறவுகளில் சிறு வெறுப்புகளையும் ஒவ்வாமைகளையும் இரகசியமாகத் தன் அடியாளங்களில் கடலடி மணற்குன்றுகளாய்க் குவிக்கிறது. ஒரு தருணத்தில் குன்று எரிமலையாய் வெடிக்கிறது. எனக்குள் அந்த எரிமலை வெடித்தது எட்டு வருடங்களுக்கு முன்.
சில நொடிகள் மௌனம் எங்கள் மீது பெரும் பாறையின் எடையாய் அழுத்தியது. இருவருக்கும் மனதில் புளுக்கம். அவர் எதோ பேச எத்தனிக்கையில்,
"சரி சார். பாக்கலாம், நேரமாகுது" என்று சொல்லிவிட்டு இரயில் நிலைய வாசலை நோக்கி நகர்ந்தேன். சாலையை அடைந்ததும் இயல்பாக மூச்சுவிடத் தொடங்கினேன். உச்சி வெயில் நெருப்பின் அருகாமையாய்ச் சுட்டது. சாலையின் வாகனக் கூச்சல்கள் மெல்ல காதுகளில் பெருகத் தொடங்கியது. வேகமாக நடந்து மதுக்கூடம் அமைந்திருந்த தெருவில் நுழைந்தேன்.
ஒரு நடுத்தர வயது முகப்பில் நின்று அவசரமாகக் குடித்து தொண்டை கமரக் கடந்து சென்றது. மதுக்கூடத்தின் பக்கவாட்டில் பச்சை நிற பிளாஸ்டிக் கூரையினடியில் காலி இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன். மட்டமான ஃபினாயில் நாற்றம் மூக்கை வன்முறையாக நிரடியது. மதுபானக் குப்பிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளிநிற ஒட்டிகள் சுவர்களிலும், மேசைகளிலும் மின்னிக்கொண்டிருந்தன. கூரையில் புகை படிந்த ரெக்கைகளுடன் ஒரு மின்விசிறி பலகீனமாகச் சுழன்றுகொண்டிருந்தது. அருகிலிருந்த அரசமரக் காகங்கள் இடைவெளிவிட்டுக் கரைந்துகொண்டிருந்தன. பாரிசாகனிடம் அரை குப்பி பிராந்திக்கு பணம் கையளித்து, "சீக்கிரம் வா" என்றேன்.
முதல் மிடறு வழக்கத்துக்கும் மேலாக ஊற்றி அவசரமாகக் குடித்ததில், காற்று தீண்டிய விறகுக் கங்காய் தொண்டையில் தொடங்கிய அமிலம் வயிறு வரை எரிந்து அடங்கியது. எனக்கு அந்த மினசாரத் தூண்டல் தேவைப்பட்டது. அவசரமாக ஓடிக்கொண்டிருந்த மனம் நிதானமாக சூழலில் கவிந்தது. இருக்கையில் மெல்லச் சாய்ந்துகொண்டேன். காலி மதுக்கோப்பையை மின்விசிறி அசைந்துகொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தொலைவில் மத்திய கைலாஷ் இரயில் நிலையத்தில் கிளம்பிய மின்சார இரயிலின் காலடித் தடங்கள் காற்றில் மிதந்து என் காதுகளை அடைந்தன. தண்டவாளத்தில் எஞ்சிய கடைசிப் பெட்டிகள் நகரும் ஓசையின் லயம் மனதைக் கரைத்தது. ஆளற்ற இரயில் நிலையக் காட்சி பிரக்ஞையில் ஒளிர்ந்து மறைந்தது.
திடீரென்று விசைகூடிய மின்சார விசிறி வேகமாய்ச் சுழன்றது. மனதில் கவிதைக்கான சொற்கள் தளும்பத் தொடங்கின. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின் அசையும் தூண்டிலை உணரும் மீனவனாய்க் கூர்ந்தேன். விரல்கள் அலைபேசியில் எழுத்துக்களை இயல்பாகத் தொட்டுக்கொண்டிருந்தன. முதலில் எழுதியது கவிதையின் தலைப்பு, 'வன்மம்'.
Fabulour Narration sir.keep up the great work.
ReplyDelete