சொல்வனம் இதழ், VP கவிதைகள் - ஒரு கடிதம்

                                                

குறிப்பு எழுதப்பட்ட நாள்: ஜூன் 13, 2022

சொல்வனம் இதழில் நண்பர் வெங்கட பிரசாத் எழுதிய நான்கு கவிதைகள் வெளிவந்திருந்தன. அந்தக் கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய குறிப்பு,

அன்புள்ள VP,

திங்கட்கிழமை காலையில் கவிதைகளை வாசிப்பது புரட்சிகரமான ஒரு செயல் என்று நம்புபவன் நான், 'வேலை கிடக்கிறது, கவிதைகளைப் படி' என்பதுதான் புரட்சியின் கோஷம், இன்று புரட்சி நிகழ்ந்தது, உபயம் VP கவிதைகள்.

கவிதைகளை வாசித்தேன், சிறப்பாக வந்திருந்தன. நேற்று சம்பிரதாயமான ஒரு செய்தியை குழுவில் பகிர்ந்துவிட்டு நகர்ந்தேன், நாமும் ஏதாவது சொல்லிவிட வேண்டுமே என்கிற பதற்றம் வேறொன்றுமில்லை, மனதில் குற்ற உணர்வு, இன்னும் கொஞ்சம் விரித்து எழுதலாம் என்றுதான் இந்தச் செய்தி. 

பிள்ளை மொழி – 

ஒரு குழந்தையின் மழலை களைவதைப் பேசுவதாக வாசிக்கிறேன். சொற்களில் பொருள் ஏறுகையில் மழலையின் மரணம் நிகழ்கிறது, சூழலின் ஒட்டு மொத்த எடையும் ஒரு குழந்தையின் மேல் விழுகிறது. நாம் இதைக் கொண்டாடத்தான் பழகிக்கொண்டிருக்கிறோம், ஆனால் இழப்பு எத்தனை பெரியது.

நோக்கியபடி – 

பூடகமான கவிதை. எங்காவது பயணிக்க விரும்பும் மனம், பயணிக்கிறதா, அல்லது பயணம் குறித்த பகல் கனவுகளில் அலைகிறதா, அது பயணம்தானா தெரியவில்லை. கடலை நோக்கி அமர்ந்திருப்பவனை, கடல் நோக்கிக்கோண்டிருக்கிறது என்றும் தோற்றம் தருகிறது கவிதை.

நிகழ்தல் – 

முற்றுப்பெறாத இயக்கம், அது பிரபஞ்சத்தினுடையதா, இருக்கலாம். எல்லாமே ஏற்கனவே நிகழ்ந்தவைதான், நிகழாமலும் இருப்பவைதான், அதனால்தான் நிகழ்தல் நடைபெறுகிறது. இன்னொரு பூடகமான கவிதை, எனக்கு நெருக்கமான ஒன்றும்.

அந்தி – 

ஒரே கவிதையில் எத்தனை காட்சிகள், எத்தனை படிமங்கள். இந்தக் கண்ணாடி போடுபவர்கள் பன்னும் அலும்பு இருக்கிறதே, அதிலும் கவிதை எழுதுபவர்கள். எல்லாம் மாயத்தோற்றம்தான் அவர்களுக்கு. 'தங்கம் நிரப்பிய நீச்சல் குளத்தில் நீந்தி வரும் அழகி' அபாரம். நல்ல வேளை வைட்டமின் ஏ குறைபாடு என்று கவிதையில் ஒரு வரி வருகிறது, இல்லையென்றால் வெறும் படிமங்களை மட்டும் வாசித்துவிட்டு பெருமூச்சு விட்டு நகர்ந்திருப்பேன். புரிதல் சரியா தெரியவில்லை, ஆனால் கவலையில்லை, கவிதை கவர்கிறது.

நான்கு கவிதைகளிலும் அடர்த்தியாக வார்த்தைகள், குறியீடுகள், தோற்றங்கள், தோற்றப் பிழைகள், மூச்சு முட்டுகிறது. நானெல்லாம் ஒரு கவிதை எழுத தவம் கிடக்கிறேன், நீங்கள் அசர வைக்கிறீர்கள், பொறாமையாய் இருக்கிறது. What are you smoking VP?

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை