கவிதைகள் தளம், பிப்ரவரி மாத இதழ் - ஒரு கடிதம்

                                                


கடிதம் எழுதப்பட்ட நாள்: பிப்ரவரி 19,2022


அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு,

பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த கவிதைகளை வாசித்தேன். நான் இதுவரை அவ்வளவாக தெரிந்துவைத்துக்கொள்ளாத பெயர்கள், அவர்களுடைய கவிதைகள், முற்றிலும் புதிய வாசிப்பனுவம் தந்த கவிதைகள். உங்கள் தளம் அதற்கான பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பதற்கு இது ஒர் சான்று. தொடர்ந்து புதிய கவிஞர்களை வாசிக்கும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

எனக்குப் பிடித்த சில கவிதைகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வெ.நி. சூர்யாவின் இரண்டு கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தது. 'கண்களும் வெற்றிடமும்' கவிதையில், அர்த்தம் மிகுந்த நம் அன்றாட உலகுக்கும், அர்த்தமற்ற ஒரு சுதந்திரவெளிக்கும் இடையிலான பயணம் பேசப்படுகிறது. இங்கு கண்ணாடி என்பதை சூழல் நம்மீது திணிக்கும் எல்லாவற்றுக்குமான குறியீடாகப் பார்க்கிறேன். 'உன் பாதை' கவிதை இயற்கையின் உலகில் சஞ்சாரித்து நம் அக உலக இருளைப் போக்கிக்கொள்ளும் சாத்தியங்களைச் சொல்கிறது.

ச. துரையின் கவிதைகள் முற்றிலும் புதிய வகையாகத் தெரிகின்றன, அவருடைய மொழியும், பேசுபொருளும் எனக்கு இன்னும் பரிச்சயமாகவில்லை, அனால் தொடர்ந்து வாசிப்பேன். 'மகிழ்ச்சியான முடிவு' கவிதையில், ஒரு அன்றாட நிகழ்வு, அதில் ஒரு பரிசு என்று தோற்றமளித்து வாசித்துமுடித்தவுடன் நம்மைச் சிந்திக்கவைக்கிறது. அவர் இந்தக் கவிதையில் எதையேனும் உத்தேசித்தாரா என்பதில் எனக்கு சந்தேகங்கள் உண்டு, எல்லாக் கவிதைகளையும் கவிஞர்கள் குறிப்பிட்ட ஒன்றை நோக்கி எழுதுகிறார்கள் என்ற கூற்றில் எனக்கு நம்பிக்கையில்லை, இது ஒரு சிறிய நிகழ்வு, ஒரு அனுபவம் அவ்வளவுதான். 

பெரு விஷ்ணுகுமாரின் இரு கவிதைகளுமே ஒருவகை இருண்மையைப் பேசுகின்றன. ஒரு திரை, அதன் இரு பக்கங்களிலும் இரு மனிதர்கள், ஒருவனின் வாழ்வு முடிவுறுவதைத் தவிர்க்கமுடியாத இன்னொருவனின் கையறு நிலை. இந்தக் கவிதை எனக்கு அதிர்ச்சியையும், வலியையும் கொடுத்தது. 'இன்று இறப்பது அவ்வளவு விசேசம்', கவிதையில் காலத்தின் வரம்புகளை மீறும் ஒரு தொனி இருக்கிறது, இறப்பு ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. என்றோ இறந்துபோன ஒரு நண்பன், அவனுடைய நினைவுநாள், அதன் வலியைப் பேசும் ஒரு கவிதை. 

றாம் சந்தோஷ் - நம் வாழ்வில் இடையறாது உடன் வரும் அலைபேசியைப் பற்றி எழுதியிருக்கிறார். முதல் வாசிப்பில் என்னை ஈர்க்காத கவிதை, மறு வாசிப்பில் இந்தக் கவிதைக்கான நியாங்கள் பிடிபட்டு நெருங்கிவந்தது, யாராவது இதையும் எழுதத்தானே வேண்டும், அது கவிதையாக இருப்பது சிறப்புதான். 'அந்நியர்கள் சகவாசம்' கவிதை, நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்நியர்களைப் பற்றிப் பேசுகிறது. எல்லோருமே தெரிந்தவர்கள், எல்லோருமே அந்நியர்கள் என்று வாசித்தேன்.

நிலாக்கண்ணன் கவிதைகள் சிறிய தெறிப்புகளாக இருந்தாலும் மிகவும் கவர்ந்தன, புத்துணர்வாக மனதில் இறங்கின. இதற்காகவாவது முகநூலில் சேரவேண்டும் என எண்ணிக்கொள்கிறேன். கொஞ்சம் மையப்புள்ளிக்கு வெளியில் இருக்கும் இதுபோன்ற கவிதைகள் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்,
பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை