என் கவிதைகள் - பயணி

                                                 


ஜூன் 26, 2022

மின்னும் காலணிகளை அணிந்து

நடை பயின்றுகொண்டிருந்தான்

'ஏன் காலணிகள்?'

என்றான்

ஒவ்வொரு காலணியிலும்

சில பயணங்கள் எழுதப்பட்டுள்ளன

என்றேன்

'ஏன் காலணிகளில் சரிகை'

என்றான்

உன் பயணங்கள் உன்னைவிட்டு விலகாமலிருக்க

என்றேன்

'ஏன் காலணிகள் மின்னுகின்றன?'

என்றான்

காலணிகளுக்குள் மின்மினிப்பூச்சிகள்

உன் இருண்ட பயணங்களில் வழிகாட்டிகள்

என்றேன்

சிறிது தூரம் சென்றவன்

தூக்கச் சொல்லி கைகள் நீட்டினான்,

இப்போது

என் இடையில் குறுகுறுத்தன

மின்மினிப்பூச்சிகளும்

சில பயணங்களும்.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை