என் கவிதைகள் - ஒப்பனை
அக்டோபர் 3, 2021
மாலையின் தந்திரமான பிடியில்
கலைந்துவிட்டிருந்த அவன்
அள்ளிப் பொருத்திக்கொண்டு
அவசரமாகத் தயாரானான்
எதிர்பாராத கணத்தில் பெற்றுக்கொண்ட அழைப்பிதழின்
மாலை விருந்துக்கு
வெளிச்சத்தை விரட்டி வெளிச்சம் தந்துகொண்டிருந்த
கர்வமான தெருவிளக்குகளினூடாகப் பயணித்தான்
கடலை உதாசித்துக்கொண்ட ஆறுகள் பாதை தவறி
சாலைகளில் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டான்
துடுப்புகளைத் துளாவியெடுத்து
படகோட்டியாக மாறினான்
தண்ணீர் தத்தளிக்கும் கரையில்
படகை நங்கூரமிட்டு
வரண்ட கால்களுடன்
அழைப்புக்கான இடத்தை அடைந்தான்
'ஏன் வியர்த்திருக்கிறாய்?' என்ற கேள்வியுடன்
அவன் கைகளில் வந்தமர்ந்தது
அன்றைய மாலைக்கான
அவன் பெயர் பொறித்த
முதல் மதுக்கோப்பை
மதுக்கோப்பைகளின் ஒற்றைக் கால்களை
இறுகப் பற்றிக்கொண்டவனின்
கண்களில் மின்னிக்கொண்டிருந்தன
கருத்து நீண்ட சாலைகள்
தெருவிளக்குகளின் வெளிச்சத்தில்.
Comments
Post a Comment