என் கவிதைகள் - அசப்தம்
ஜூன் 4, 2022
உலகின் கடைசிக் காதுகளை
அவனுக்கு அணிவித்தார்கள்,
மௌனமாய் நிகழ்ந்தேறியது அதன்
அணிவிப்பு விழா.
நிச்சலனங்களின் தெருக்களில்
திசையற்று புலம்பித் திரிந்தவனின்
உடலில் தெறித்துப் பரவின
ஒலிகளின் கூழாங்கற்கள்,
பேரோசையாய் உணர்ந்த ஒன்றின்
திசை நோக்கி ஓடித் திகைத்தான்
காட்டருவியின் ஆவேசக் குரலை,
வெளியின் உடலைக் கிழித்துக்கொண்டு
எடையற்று அலைந்த சிறகுகளின் மென்குரலை
புள்ளினங்களின் மொழி என்று உணர்ந்தான்,
சிற்றோடை ஒன்றின்
இனிய பொழிவைக் கேட்டு
மண்டியிட்டான்,
இருத்தலின் ஒவ்வொரு வினாடியும் ஓசையற்றிருந்தவன்
மானுடத்தின் முதல் சொல்லை உச்சரித்த
அந்தத் தருணம்…
இருப்பிட வாசலில், அவனுடைய இருப்பின் வாசலில்
பொங்கித் தவித்தன
நிசப்தத்தின் அநாதைக் குரல்கள்.
Comments
Post a Comment