குதிரைவால் - ஒரு இலக்கிய வாசகனுக்கான சினிமா

      

கனவுகள் நம்முடைய தர்க்க மனதின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் தன்மைகொண்டவை. கனவுகளின் காட்சிகளை விளக்கிகொள்ள இயலுமா? பெரும்பாலும் அவற்றின் பிம்பங்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயலலாம். 'குதிரைவால்' திரைப்படம் ஒரு பிறழ்வு மனதின் கனவையும், நிகழ் வாழ்வையும் ஊடாடச் செய்து அதன் விளைவுகளைக் காட்சிப்படுத்த முயல்கிறது.

சரவணன் உறக்கத்திலிருந்து குதிரையின் வாலுடன் விழிக்கிறான், இதனால் அலைக்கழிக்கப்படுகிறான். அவனுடைய அறையில் குறியீட்டுத்தன்மை கொண்ட ஓவியம் உள்ளது (அது என்ன வகை ஓவியம் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, Abstract, Impressionist...), தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர். பாடல்களும், Vivaldi யின் இசையும் மாறி ஒலிக்கின்றன. உயர் வகை மதுவான Remy Martin XO அருந்துகிறான், அறை முழுதும் பலவகை மதுப்புட்டிகள் நிறைந்துள்ளன. அறைச் சன்னலில் எப்போதும் ஒரு ரயில் நகர்ந்துகொண்டிருக்கிறது, ஊதா நிறம் ஜொலிக்கும் பறவை ஒன்று வந்து செல்கிறது. அறையின் வெளிச்சூழல், சன்னலில் ஒருவகை கற்பனையுலகத் தன்மையுடன் பல வண்ணங்களில் ஒளிர்கிறது. கைகளில் மன இறுக்கத்தைப் போக்க உதவும் ஒரு பந்தை வைத்திருக்கிறான்.

தன்னுடைய கனவில் தோன்றிய குதிரையை மலை ஒன்றின் உச்சியில் காண்கிறான், வாலற்ற குதிரை அது, அதனருகே ஒரு பழங்குடிப் பெண் நிற்கிறாள். சரவணனுடைய கடந்த கால வாழ்வு சொல்லப்படுகிறது, அவனுடைய இள வயது தோழியும் ஒரு கிணறும் வருகிறது. ஒரு காட்சியில் அவனுடைய அறையில் அந்தப் பழங்குடிப் பெண் ரமேஷ் பிரேதனுடைய கவிதை ஒன்றை வாசிக்கிறாள். திரையில் கவிதையின் வரிகள் ஒளிர்கின்றன,

"கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு

முடிவற்று நீளும் மதில் மீது

நேர்த்தியாக நடந்து செல்கிறது

பூனை என்ற ஒரு சொல்

ஆம் ஒரு சொல்

அதைக் கொஞ்சம் பின்தொடர்ந்தால்

அது ஒரு வாக்கியமாவதையும்

வாக்கியத்தின் நீண்ட அசைவில்

கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால்

மதிலின் பக்காவாட்டில் வழியும் குருதி

கவிதையாவதையும் வாசிக்கலாம்

அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று

நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்துபோவீர்கள்."

இது போன்ற படங்களையும், அவற்றின் காட்சிகளையும் முழுவதுமாகப் புரிந்துகொள்வது கடினமானது, காட்சிகளின் நுணுக்கங்கள் பலமுறை பார்த்தால் ஒழிய பிடிபடுவது சாத்தியமில்லை. ஒரு கவிதையின் அனுபவ மதிப்பை உணர்வதுபோல இந்தப் படத்தின் தாக்கத்தை அளவிடலாம். படத்தின் திரைக்கதையை எழுத்து வடிவில் வாசிக்க மிகவும் பிரயாசை கொள்கிறேன், வெளியிடுவார்கள் என்றும் நம்புகிறேன்.

படம் முழுக்க கடந்த கால மனிதர்கள் சரவணனின் நிகழ் வாழ்க்கையில் நுழைகிறார்கள், தற்கால மனிதர்கள் வேறு உருவங்களில் நடமாடுகிறார்கள். கனவில் தோன்றும் குதிரையின் வால் எனும் படிமம், அதன் நிகழ்கால நீட்சி என்று படம் முழுக்க படிமங்களால் ஆன காட்சிகள் நிறைந்து நம்மைச் சுழற்றியடிக்கிறது. படம் முடிந்து காட்சிகளைத் தொகுத்துக்கொள்ள முயன்றால் பிரம்மாண்டமாய் மனதில் எழுகிறது.

கனவுகளின் மாயத்தை, அதன் ஆற்றலைச் சொல்லும் ஒரு அசாத்தியத் திரைப்படம் 'குதிரைவால்'. ஒரு இலக்கிய வாசகனுக்காக, இலக்கியப் பரிச்சயம் கொண்ட மனங்கள் உருவாக்கிய சினிமா இது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை