என் கவிதைகள் - நீ
ஜூன் 12, 2022
வெளியில் நின்று
நிலைவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
சாலையில் தோன்றிய ஒருவன்
'நீதானே அது' என்றான்
இல்லை என்ற சொல்லை விழுங்கி
வழிகாட்டியாய் கைகள் நீட்டினேன்
நான்கு திசைகள் புசித்து
பசியடங்காமல்
அ திசைகள் நோக்கி நீண்டன
என் கைகள்
என் கைகள்
காட்டிய ஒரு திசையில் சென்று
மறைந்தான்
அவன்
நிலவு சலித்து
உள் நுழைய எத்தனித்தேன்
கதவுகள் திறக்கப்படவில்லை
சாலையில் இறங்கி
வெளியில் நின்று
நிலைவைப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம்
கேட்டேன்
'நீதானே அது'.
Comments
Post a Comment