'கவிதை புரிதல்' கட்டுரை, கவிஞர் அபி - ஒரு கடிதம்

                                                


கடிதம் எழுதப்பட்ட நாள்: ஜனவரி 26, 2022

சென்ற ஆண்டு கரூர் பயணத்தில் கவிஞர் அபியுடன் உரையாடினேன். உரையாடிய சில நாட்களுக்குப் பிறகு 'கவிதை புரிதல்' கட்டுரையின் கையெழுத்துப் பிரதியை அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய பதில் கடிதம் இது,

அன்புள்ள கவிஞர் அபி அவர்களுக்கு,

வணக்கம். 'கவிதைபுரிதல்' கட்டுரையை மறு வாசிப்பு செய்தேன். இந்த முறை மிகுந்த பிரயத்தனத்தோடு வாசித்தேன். ஒவ்வொரு பத்தியையும் பல முறை வாசித்த பிறகே அடுத்த பத்திக்கு நகர்ந்தேன். பல குறிப்புகளை சில நிமிடங்களேனும் மனதில் ஏந்தி அசை போட்டுவிட்டு ஜீரணித்த பிறகே வாசித்து முடித்தேன். கட்டுரையில் நான் அடைந்த புரிதல்களை இங்கு பகிர்கிறேன், என் எண்ணங்கள் ஒரு கோர்வையாக இல்லாமல் இருக்கலாம், இயன்றவரை எண்ணங்களைத் தொகுத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன். என் புரிதல்கள் இங்கு குறிப்பிட்டவற்றைத் தாண்டியும் உள்ளன என்பதையும் பதிவு செய்துகொள்கிறேன்.

ஒரு கவிதையை வாசித்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணம், இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதே. கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது பிடிபடாதபோது கொஞ்சம் ஏமாற்றமும், அந்தக் கவிதை எனக்குரியதல்ல என்ற நிராகரிப்பும் நிகழ்கிறது. ஒரு கவிதையின் பிண்ணனியில் கவிஞனின் வாழ்விருக்கிறது, அது தரும் அனுபவங்கள் இருக்கின்றன, வாழ்வை நோக்கிய அவனுக்கே உரிய பார்வையிருக்கிறது, அவனுடைய வாசிப்புப் பின்புலமிருக்கிறது, அவன் வாழும் சூழல் இருக்கிறது, மொழித்தேர்ச்சியும் கவிதை படைக்கும் தொழில்நுட்பத் திறனுமிருக்கிறது, எல்லாம் தாண்டி படைப்பூக்கமிருக்கிறது. ஒரு நல்ல கவிதை தன்னுடைய வேர்களை இந்த எல்லாவற்றிலும் புதைத்து வைத்துக்கொண்டுதான் நம்மிடம் உரையாட வருகிறது. ஒரு வாசகனாக கவிதையை மிகுந்த மரியாதையுடனும், பிரேமையுடனும் எதிர்கொள்ள இந்த விழிப்புணர்வு அவசியம் என்று புரிந்துகொள்கிறேன். மேலும் ஒரு வாசகன் கவிதையைப் புரிந்துகொள்ள தன்னைத் தகுதிப்படுத்திகொண்டே இருக்கவேண்டிய அவசியமும் தெரிகிறது.

பல தருணங்களில் கவிதை சொல்லும் 'கருத்தைப்' புரிந்துகொண்டுவிட்டதாக எண்ணி இறுமாப்பாக நகர்ந்துவிடுகிறோம், இந்த மனநிலை கவிஞன் மறைத்து வைத்த ஒன்றைத் தான் கண்டுவிட்டதாக எண்ணிக்கொள்ளும் ஆணவமன்றி வேறொன்றுமில்லை. கவிதையை நோக்கி உன்னைத் புரிந்துகொண்டுவிட்டேன் என்று கொக்கரிக்கும் வாசகனை, ஒரு அர்த்தப் புன்னகையுடன் கவிதைகள் எதிர்கொள்கின்றன. உங்களுடைய பல கவிதைகள் என்னிடம் அர்த்தப் புன்னகை புரிந்திருக்கின்றன, புரிந்துகொண்டிருக்கின்றன.

அர்த்த வரம்புக்குட்பட்ட சொற்களால் சூழலின் தகிப்பைச் சொல்ல முடியாது என்பது புரிகிறது. 'பொழுதும் மனதும் ஒன்றினுள் ஓன்றாகக் கலவையாகிவிட்ட ரசாயனத்தை, இன்னதென்று புரியாத மனஓசை இன்னதென்று புரியாத இருள்ஓசையாகிவிட்டதை', எத்தனை ஆழமான வரிகள். இந்த வரிகளின் மேல் மனதை ஓட்டிக்கொண்டே இருக்கிறேன். இதன் நீட்சியாக 'யாருடையதென்றறியாத சோகம் அரைக்கண் பார்வைபோல் கிறங்கித் திரிந்தது' கவிதை வரிகளை நினைத்துக்கொள்கிறேன்.

கவிதை மொழியின் ஆதிக்கப் பகுதிக்கு அப்பாற்பட்டது, மொழிவேறு கவிதைவேறு எனும் வரிகள் எனக்கு புதிய திறப்பைத் தருகின்றன. கவிதையின் அனுபவ மதிப்பை உணர்வதுதான் கவிதையைப் புரிந்துகொள்வது. கட்டுரையில் நீங்கள் சுட்டியிருக்கும் கவிதைகள் உங்கள் கருத்துகளைத் தெளிவாக உணர்த்தின.

ஏன் கவிதைகள் தனக்கே உரிய மொழியை உட்கொண்டிருக்கின்றன, இதன் நியாங்கள் என்ன என்பதை உங்கள் கட்டுரை தெளிவுபடுத்தியது. உங்கள் வரிகளிலேயே சொன்னால், 'வாழ்க்கை புரியவில்லை என்பதும் கவிதை புரியவில்லை என்பதும் சமம்'. தொடர்ச்சியான ஈடுபடுதல் மூலம் மட்டுமே புரிதல்களை அடைய முடியும்.

கவிதைகள் வாசித்ததால் உருவாகும் பயிற்சி, கவிதைகளின் உருவாக்கம் தொடர்பான பிரக்ஞை என எல்லவற்றையும் மீறி, கவிதைகளின் முன் குழந்தைமையுடன் அமர்ந்திருப்பது என்பது மட்டுமே எனக்கான சவாலாகத் தெரிகிறது. இவற்றுக்கு இடையேயான சமநிலையை ஒரு வாசகனாக எப்படி அடைவது என்பதைப் பற்றி சிந்தித்தபடியே இருக்கிறேன்.

என் கவிதை வாசிப்பில் இந்தக் கட்டுரையின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றிகள் சார்.

பாலாஜி ராஜீ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை